மொழிவாரி மாநிலங்கள் பிரிப்புக்குப் பிறகு, தமிழகத்தின் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக இன்றுவரை விளங்கிவருவது காவிரி நதிநீர் பங்கீடு. பல ஆண்டுகளாக பற்பல போராட்டங்கள், வழக்குகள் எனக் கடந்து வந்திருந்தாலும், இன்றுவரையிலும் இதற்கான தீர்வுகள் என்பன பெரும்பாலும் தமிழகத்துக்குச் சாதகமாக அமைந்ததில்லை. தமிழகத்தின் விவசாய தேவைக்கு மிகவும் இன்றியமையாததான இந்த காவிரி நீருக்காகத் தமிழகம் மேற்கொண்ட போராட்டங்கள் ஏராளம். அதேபோல, இப்பிரச்சனை காரணமாகக் கர்நாடகத்தில் வசிக்கும் மற்றும் கர்நாடகா செல்லும் தமிழர்கள் எதிர்கொண்ட வன்முறைகளும், அடக்குமுறைகளும் எண்ணிலடங்காதவை. இன்றளவும் கூட இந்த பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் என்பதை இன்றைய தலைமுறையினரும் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் 90 களின் பிற்பகுதியில் அம்மாநிலத்தில் அதிகளவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. காவிரி பிரச்சனையால் இன்றுவரை இப்படிப்பட்ட பல வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், அதன் தொடக்கப்புள்ளியாக அமைந்தது 1991 கலவரம் தான். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 1991 ஆம் ஆண்டு முதன்முறையாகக் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. வாட்டாள் நாகராஜ் தூண்டுதலால் ஏற்பட்ட இக்கலவரத்தில் ஏகப்பட்ட தமிழர்கள் உயிரையும், உடைமைகளையும் இழந்து நிர்கதியாகினர். இந்த கலவரம் காரணமாக 48 மணிநேரத்தில் சுமார் 50,000 தமிழர்கள் கர்நாடகாவை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். தொடர்ந்து வருடக்கணக்கில் நடைபெற்ற கலவரங்களில் பல ஆயிரம் தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட தமிழ் தம்பதி, தமிழகம் வந்தும் இங்குள்ள அரசியலில் சிக்கி வதைபட்ட நிகழ்வுகளை 08.02.1992 தேதியிட்ட இதழில் நக்கீரன் வெளியிட்டது.
எல்லோரும் அதிர்ந்துபோய் நின்றனர். தெருவில் வருவோர் போவோரெல்லாம் ஒருநிமிடம் நின்று பரிதாபமாய்ப் பார்த்தனர்.
அந்தமனிதர் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. இருளாகி விட்ட தன் எதிர்காலத்தை நினைத்து கலங்கியவாறு தன் மனைவியுடன் சோகமாக நடந்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் பாதி மீசை மழிக்கப்பட்டிருந்தது. தலைமுடி கன்னா பின்னாவென்று சிதைக்கப்பட்டிருந்தது.
ஆம்.
கன்னட வெறியர்களின் வக்கிரத் தன்மைக்கு, மிருகத்தனத்துக்கு சாட்சியாய் அவர்கள் தாம்பரம் பஸ் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய அவர்கள் முகங்களில் இன்னும் திகில் நிறைந்திருக்க தாம்பரம் கட்டளை ரோட்டை நெருங்கும் போது அவர்களை வழி மறித்தது ஒரு கும்பல். இருள் சூழ்ந்த நேரம். ஆள் நடமாட்டமற்ற ஒரு பகுதி. அனைத்தையும் இழந்து உயிரை மட்டுமே உடலோடு கொண்டு வந்த அந்த அப்பாவி கன்னட அகதிகள் மீது திடீரென கொரில்லா தாக்குதல் நடத்தியது ஒரு இரக்கமற்ற கூட்டம்.
ஏண்டா! உனக்கு புரட்சி பண்றதா நெனைப்போ? ‘நச்’சென்று பிடரியைத் தாக்கியது ஒரு இரும்புக்கரம். பொழைக்க மட்டும் பெங்களூருக்கு போனீங்களே? சாவறதும் அங்கே சாக வேண்டியதுதான? கைத்தடிகள் அவர்கள் உடலைப் பதம் பார்க்க ஆரம்பித்தன. அலறக்கூட அவகாசமின்றி காட்டுத்தனமாய் அவர்களைத் தாக்கிய கூட்டம் கணவனையும் மனைவியையும் அள்ளி வேனில் போட்டது. ஆதரவு தேடி வந்த கர்நாடக தமிழ் அகதிகளை ஆத்திரத்தோடு தாக்கிய கும்பல் வேறு யாருமல்ல....சாட்சாத்.... நம்ம தமிழக போலீசேதான்!
திக்கு திசையற்று சென்னையில் நின்ற இவர்களுக்கு கன்னட காலிகள் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. ஏண்டா! தேசியஒருமைப்பாடு! ஒருமைப்பாடுன்னு கத்துறானுங்களே...உங்க ஊரு காங்கிரஸ் காரனுங்க... அவனுங்ககிட்ட கொண்டு போயி உன் தலையைக் காட்டு.... இதுதான் தேசிய ஒருமைப்பாடுன்னு. உங்க பந்தா மந்திரி வாழப்பாடி மந்திரி பதவிய ராஜினாமா பண்ணினாரே? அவரு உன் மீசையைப் பாத்தா எம்.பி.பதவியை ராஜினாமா பண்ணுவாரா? கன்னட வசைகள் காதுகளில் ஒலிக்க காங்கிரஸ் கமிட்டி நோக்கி நடந்தனர்.
அங்கே வாழப்பாடி தரிசனம் மட்டுமல்ல! எந்தவித உதவியும் கிடைக்காமல் துரத்தப்பட்டனர் அப்பாவிகள். நொந்துபோய் அறிவாலயம் சென்றனர். சுந்தர்ராஜனின் கோலம் கண்டு கண் கலங்கினார் கருணாநிதி. உடனடியாய் ஆயிரம் ரூபாய் நிதி உதவியளிக்கும் படி கூறினார். பிச்சை எடுப்பனாம் பெருமாளு...,அதைப் புடுங்குவானாம் அனுமாரு என்ற கதையாய், ‘‘கருணாநிதி உத்தரவிட்ட ஆயிரம் ரூபாயில் ரூபாய் நூறு மட்டும் சுந்தர்ராஜனிடம் கொடுத்து விட்டு மீதி பணத்தை தன் பைக்குள் போட்டுக் கொண்டார் அங்கிருந்த சண்முகம்’’ என்ற உடன்பிறப்பு. தங்கள் தலைவிதியை நினைத்து வருந்தி பாட்டாளி மக்கள் கட்சியின் தினப்புரட்சி அலுவலகம் சென்றனர். அந்த சமயத்தில் டாக்டர் ராமதாஸ் கைதாகி இருந்ததால் அங்கிருந்த பா.ம.க.பொருளாளர் அனிபா எல்லா பத்திரிகைகளுக்கும் செய்தி அனுப்பினார். மறுநாள் பாதி மொட்டை,பாதி மீசையுடன் அனைத்துப் பத்திரிகைகளிலும் சுந்தர்ராஜனின் படம்.
ராமதாசைப் பார்க்க முடியாததால் திருநாவுக்கரசை சந்திக்கச் சென்றார்கள் தம்பதியினர். திருநாவுக்கரசு கட்சியின் திருமங்கலம் பகுதி செயலாளர் சுந்தர்ராஜனை அழைத்துச் சென்று சைக்கிள் ரிக்சாவில் ஏற்றி கன்னட வெறியர்களின் அட்டூழியத்தை மைக்கில் அறிவித்தபடி அண்ணாநகரை வலம் வந்தார். அப்போது நாலைந்து பேர் அவர்களைக் கண்காணித்தபடியே பின் தொடர்ந்தனர். சுந்தர்ராஜனும் அவர் மனைவியும் சொந்த ஊருக்கு செல்வதாகக் கூறியவுடன் அவர்களை பஸ் ஏற்ற தாம்பரம் கொண்டு சென்றனர். தாம்பரம் தி.க. பொதுக்கூட்டத்தில் பெரியார்தாசன் பேசிக் கொண்டிருந்தார். அந்த மேடையிலும் ஏற்றப்பட்டார் சுந்தர்ராஜன்.
பின் ஊர் செல்ல தன் மனைவியுடன் தாம்பரம் பஸ் நிலையம் நோக்கி நடந்த போதுதான் நாம் முதலில் சொன்ன சம்பவம் நடந்தது. இவனை இப்படியே விட்டா,பாதி மொட்டையோட தமிழ்நாட்டையே ரவுண்ட் அடிச்சுடுவான். அதனால.....! குரலை இழுத்தபடி சொன்ன காக்கிச்சட்டை தன் பையைத் தொட்டுப்பார்த்துக் கொண்டது. தஞ்சைநோக்கி சென்று கொண்டிருந்த அந்தப் போலீஸ் வேன் அச்சரப்பாக்கத்துக்கும், தொழுப்பேடுக்கும் இடையில் நிறுத்தப்பட்டது. ‘‘அரைகுறையா இருந்தாதான ஊர் சுத்துவான்...முழுசையும் செறைச்சுடுவோம்’’ மிகுந்த பொறுப்புணர்வோடு சுந்தர்ராஜனின் தலையையும் மீசையையும் மொட்டையடித்தனர் போலீசார்.
பின் சுந்தர்ராஜனின் சொந்த ஊரான மணலூருக்கு இருபது கிலோமீட்டர் முன் பாக தத்துவாச்சேரியில் அவர்களை இறக்கி விட்டு கடமை முடிந்த திருப்தியோடு திரும்பியது போலீஸ். நாய்படாத பாடு பட்டு ஊர் போய்ச் சேர்ந்தவர் நிவாரண உதவிக்காக வி.ஓ.விடம் சென்றார். தாசில்தாரிடம் சென்றார். பின்னர் கலெக்டரிடம் சென்றார். கலெக்டர் வெளியூர் சென்று விட்டதாக தகவல் கொடுத்த கலெக்டரின் பி.ஏ. நிவாரண நிதிக்கெல்லாம் மேலே இருந்து பணம் வரலீங்க. எப்ப பணம் வருதோ அப்ப சொல்லி விடுறோம்..என்றாராம்.
அடுத்தவேளை உணவுக்கு வழியின்றி சோர்ந்து போய் திரும்பினார். ஒட்டிய கன்னம், குழிவிழுந்த கண்கள்,பட்டினியால் வாடிய உடலுடன் நம் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள் யாரோ. சுந்தர்ராஜன் தம்பதிகள். கன்னட வெறியர்களின் அட்டூழியம், தமிழக போலீசின் கொடுரம். வாய்கிழியப் பேசும் சில அரசியல்வாதிகளால் ஏற்பட்ட ஏமாற்றம் என ஒவ்வொன்றாகச் சொல்லி சொல்லி அழுதனர். நாம் உதவி செய்தது தனி தொகை. அதை எவ்வளவு என்று சொல்லிக் காட்டுவது மனிதத் தன்மையல்ல. ‘‘இதை வைத்து ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்கிறோம்... நிச்சயம் முன்னேறுவோம்’’ என்று கண் கலங்கி உள்ளத்தில் உறுதியோடு சென்றனர். தமிழக அரசு கன்னடத் தமிழர்களைக் காப்பாற்ற பல லட்சங்களை கஜானாவில் இருந்து ஒதுக்கியது. காப்பாற்றிய லட்சணத்துக்கு ஒரு உதாரணம்தான் சுந்தர்ராஜன் கனகவல்லி தம்பதிகள்.
ஒதுக்கியது என்னவோ உண்மைதான். அதில் எங்கு எத்தனை ஒதுக்கினார்கள் என்பதுதான் கேள்வி?