Advertisment

ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் விளைவு! மறையாத வரலாற்று வடுக்களின் பின்னணி!

The story behind 'Operation Blue Star' and the death of Indira Gandhi

இந்திய நீதிமன்றங்களால் வழங்கப்படும் தண்டனைகளில் அதிகபட்ச தண்டனையாகவும் அரிதாகவும் வழங்கப்படுவது தூக்கு தண்டனை. உலகம் முழுவதும் தூக்கு உள்ளிட்ட மரண தண்டனைகளுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு விவாதங்கள் நடந்துகொண்டேயிருக்க, ஒவ்வொரு மரண தண்டனைக்கும் பின்னாலும் ரத்தம் தோய்ந்த வரலாற்றுக் காகிதம் காற்றில் அலைந்தபடி கவனம் பெறுகிறது. அவ்வாறு சுதந்திர இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட தூக்குகளில் நாடு தாண்டி உலகின் கவனம் பெற்றவை சில, அவற்றில் பெரிதும் விவாதிக்கப்பட்டது ஜிண்டா மற்றும் சுகாவிற்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு.

Advertisment

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு சீக்கியர்களுக்கிடையே உருவான காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை மெல்ல வளர்ந்து 80 களின் மத்தியில் விஸ்வரூபம் எடுத்திருந்தது. பஞ்சாபில் நிகழ்ந்த போராட்டங்களாலும், வன்முறைகளாலும் காலிஸ்தான் கோரிக்கைக்காகப் போராடும் சில குழுக்கள் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்களைப் பிடிப்பதிலும், சீக்கியர்களின் போராட்டங்களை அடக்குவதிலும் அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி முழுவீச்சில் இறங்கினார். பஞ்சாப் முழுவதும் இந்திராவின் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது பிரிவினை அமைப்பை வழிநடத்திய பிரந்தன்வாலேவும் அவரது குழுவும் சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்தனர். அவர்களைப் பிடிக்கப் பொற்கோயில் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டது. ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ என்ற பெயரில் அமிர்தசரஸ் தாக்குதலுக்கு உள்ளானது. ஜூன் 10, 1984 வரை நடைபெற்ற இந்த ஆபரேஷன் முடிவில் பிரந்தன்வாலே கொல்லப்பட்டதோடு ஏராளமான பொதுமக்களும் ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். சீக்கியர்களின் புனித தலம் இரத்தத்தில் நனைந்தது. இந்த நிகழ்வு சீக்கியர்களின் உணர்வைச் சீண்டி பஞ்சாபில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Advertisment

அமிர்தசரஸ் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அதே வருடம் அக்டோபர் 31 ஆம் தேதி பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். விளைவு, இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். சீக்கியர்கள் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகினர். தொடர்ந்து, ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்கு தலைமை தாங்கிய இராணுவ அதிகாரி வைத்யா 1986, ஆகஸ்ட் 10 ஆம் தேதி பஞ்சாபைச் சேர்ந்த ஹர்ஜந்தர் சிங் ஜிண்டா மற்றும் சுக்தேவ் சிங் சுகா ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1987, செப்டம்பர் 17 அன்று ஜிண்டா மற்றும் சுகா இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை முடிவில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 1992, அக்டோபர் 9 ஆம் தேதி ஏர்வாடா மத்தியச் சிறையில் ஜிண்டா மற்றும் சுகா தூக்கிலிடப்பட்டனர்.

பல எதிர்ப்புகளையும், பஞ்சாப் மக்களின் போராட்டங்களையும் மீறி நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனை குறித்தும் அதன் அரசியல் பின்னணி குறித்தும் 22.10.1992 தேதியிட்ட நக்கீரனில் விரிவான கட்டுரை வெளியானது.

The story behind 'Operation Blue Star' and the death of Indira Gandhi

சரித்திரங்கள் கதைகளாகத்தான் தொகுக்கப்படுகின்றன. தோண்டிப் பார்த்தோமானால் அச்சடிக்கப்படாத கதைகளும் கிடைக்கின்றன. மன்னர்கள் ஆண்ட கதை சரித்திரம் ஆனது என்றால், மற்றவர்கள் மாண்ட கதைஎழுதப்படாமலே போய் விட்டது. பஞ்சாப்பில் சீக்கியர்கள், தீவிரவாதிகளாக கிளம்பி விட்டார்கள். காலிஸ்தான் என்று தனிநாடு கேட்கிறார்கள்.

நேருவின் மகளான இந்திராகாந்தியை இரக்கமின்றி சுட்டுக் கொன்றதும் அவர்கள்தான். பல பயங்கரவாதக் கொலைகளையும் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிரார்கள். பல இடங்களில் வெடி வைத்து மாநிலத்தையே நாசக்காடாக்கி விட்டார்கள் என்றெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். கேள்விப்படுகிறோம். இந்தியப் பத்திரிகை உலகம் இவற்றையெல்லாம் வெளிப்படுத்தும்போது இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? உண்மையில் பஞ்சாப்பில் நடப்பது என்ன என்பது பற்றி வந்திருக்கும் செய்திகளுக்கு நேர் எதிரான விசயங்களும் இருக்கின்றன.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால், பஞ்சாப் மாநிலம் அமைதியாகத்தான் இருந்தது. இந்தியாவிலேயே விவசாயத்தில் பஞ்சாப் பல நவீன உத்திகளைக் கையாண்டு முன்னேறியிருக்கிறது என்று நாடே பெருமைப்பட்டது. இன்று எல்லாமே நேர் எதிராகப் போய் விட்டது. 1965 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘பசுமைப்புரட்சி’ பல மாநிலங்கள் போல பஞ்சாப்பிலும் அயல்நாட்டு மூலதனத்தை நம் நாட்டு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன்களாக கொடுப்பதும், வேளாண் கருவிகளை வாங்கிக் குவிப்பதற்கும் உதவி செய்தது. ஆனால் அந்தக் கடன்களில் மூழ்கி விட்ட கோடிக்கணக்கான விவசாயிகள் தங்களது போராட்டத்தை அரசாங்கத்தை எதிர்த்து நடத்தினார்கள். அரசால் அவர்களது போராட்ட முதுகெலும்புகள் உடைக்கப்பட்ட போதெல்லாம் ஓடிப்போய் பாதுகாப்புக்காக தங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையான மதவாதிகளின் கரங்களிலே போய் விழுந்தார்கள். பிந்தரன்வாலே இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவுடன், இத்தகைய விளைவுகளால்தான் சீக்கிய விவசாயிகள் தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டார்கள் என்று மகாராஷ்டிராவின் புகழ் பெற்ற விவசாய இயக்கத் தலைவரும்,முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான ‘சரத் ஜோஷி’ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டிலே கட்டுரையாக எழுதினார்.

‘தர்ம வீரா’ என்ற பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் ஒருபுறமும், அந்நாளைய குடியரசுத்தலைவர் ஜெயில்சிங் ஒருபுறமும் காங்கிரசில் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்ட நேரம். ஆங்கிலேயரின் கொள்கையான பிரித்தாளும் சூழ்ச்சியை கையில் எடுத்துக் கொண்ட முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி இரண்டு கோஷ்டிகளையும் போட்டி போட்டுக்கொண்டு சீக்கியர்களை மோத விட்டுக் கொண்டிருந்தார். டெல்லியிலே அந்த நேரம் பிந்தரன்வாலே தலைமையில் துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு சீக்கியர்கள் ஊர்வலமாகச் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் இந்திராகாந்தி. அதனுடைய தொடர்ச்சிகள் எல்லாம் சேர்ந்து ஆள்வோருடைய ஆசீர்வாதத்தால் பஞ்சாப்பில் ஆயுதக் கலாச்சாரம் கன்னா பின்னாவென்று பரவியது. சீக்கிய மக்கள் இந்திய நாட்டின் பிறபகுதி மக்களைப் போலவே தங்களுக்கென்று மத சுதந்திரம் வேண்டும் என்பதற்காக ‘அரவிந்த் சாகீப்’ என்று அழைக்கப்படக்கூடிய சுயாட்சிஉரிமை கோரும் தீர்மானத்தை முன்வைத்து அகாலி தளங்களுடைய தலைமையில் போராட ஆரம்பித்து விட்டார்கள். கட்டுக்கடங்காமல் விஷயங்கள் போய் விட்டன என்று அன்றைக்கு டெல்லி தாமதமாக உணர்ந்தது. உடனடியாக புண்ணுக்கு மருந்து என்று பாராமல்,ஆபரேஷன்தான் ஒரே வழி என்ற அரைகுறை டாக்டரைப் போல் இந்திய ராணுவத்தை டெல்லி பஞ்சாப்புக்கு அனுப்பியது.

‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ என்று அழைக்கப்பட்ட அந்த ராணுவம் சீக்கியர்களுடைய மதக் கோயில் மீது பீரங்கிகளுடன் மோதியது.உள்ளே இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி சீக்கிய தாய்மார்களும், குழந்தைகளும்ராணுவத் தாக்குதலுக்கு பலியானார்கள். பிந்தரன்வாலே உட்பட நூற்றுக்கணக்கான சீக்கியப் போராளிகளும் கொல்லப்பட்டார்கள். கோடிக்கணக்கான சீக்கிய மக்கள் புனிதமாகக் கருதிவரும் ‘பெரிய கோபுரம்’ கூட இந்திய இராணுவத் தாக்குதலால் உடைக்கப்பட்டது. இதற்குப் பழி வாங்குகிறேன் என்ற பெயரில்தான் ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டித்தர நான்கு சீக்கியசிப்பாய்கள் பெண் என்றும் பாராமல் இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றார்கள். சீக்கிய இளைஞர்கள் சிலர் செய்த அந்தக் குற்றத்துக்காக சிலமணி நேரங்களில் தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் பழிவாங்கப்பட்டன. இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். பல நூறு சீக்கியப் பெண்கள் விதவையானார்கள்.

இந்த டெல்லி படுகொலையை முன்னின்று நடத்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் மக்கான் இன்றைய இந்திய நாட்டின் முதல் குடிமகனான எஸ்.டி.சர்மாவின் மருமகன். பழிக்குப்பழி, கொலைக்குக் கொலை என்பதாகக் காங்கிரசும் சீக்கியர்களும் மோதிக் கொண்டிருப்பதன் தொடர்ச்சியாக லலித் மக்கானும், அவரது மனைவியும் சீக்கியர்களால் கொல்லப்பட்டார்கள். தன் மகளும் மருமகனும் கொல்லப்பட்ட காழ்ப்புணர்ச்சியை எஸ்.டி.சர்மா மனதில் வைத்திருந்தாரா என்பது கடந்த மாதம் வரை தெரியவில்லை.

‘புளூ ஸ்டார் ஆபரேஷன்’ நடத்திய இராணுவத் தளபதி வைத்யா கொலையில் தூக்கு மேடைக்கு ஜிண்டாவையும் சுகாவையும் அனுப்பும் தருவாயில் இருக்கும்போது, இந்திய வழக்கப்படி ஜனாதிபதியைச் சந்தித்து கருணை மனு கொடுப்பது என சீக்கிய மக்கள் முடிவு செய்தார்கள். சீக்கிய மக்கள் சார்பாக பஞ்சாப்பில் இருக்கும் எல்லா கட்சித் தலைவர்களும் ஒன்று சேர்ந்து இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒன்றாக டெல்லி சென்று குடியரசுத் தலைவர் எஸ்.டி.சர்மாவைப் பார்ப்பதற்கு முன் அனுமதியும் பெற்றுக்கொண்டு மாளிகை முன்பு போய் நிற்கிறார்கள். சர்மா அவர்களை சந்திக்க மறுத்து விட்டார்.

இந்தியாவின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படுபவர். சொந்த வெறுப்பு விருப்பு உணர்வுகளைத் தாண்டி நாட்டினுடைய நலன் எல்லாம் சமூக நலம் என்பதாகப் பார்த்திருக்க வேண்டும். ஆனால், சர்மா அன்று கருணை மனு கொண்டுவந்தவர்களை காண மறுத்ததன் விளைவாக உடனடியாக மகராஷ்டிராவில் உள்ள புனே சிறையில் இருவரும் தூக்கிலிடப்படுகிறார்கள். ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட சீக்கிய சமூகமே சற்று அதிர்ந்து விட்டது. மூன்று நாட்களாக அமைதி வழியில் ஏழு கோடி மக்களும் முழு அடைப்பு நடத்துகிறார்கள். இரவு நேரங்களில் தூங்காமல் உண்ணாநோன்பு இருக்கிறார்கள். பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள் பள்ளிகளை மூடிவிட்டு பஸ்களின் மேல் கல்லெறிகிறார்கள்.

ஒவ்வொரு சீக்கிய இளைஞன் மனதிலும் ஜிண்டா, சுகா தியாகிகளாகக் குடியேறி விட்டார்கள். அவர்களுடைய பாதையில் அந்த முழு சமூகமுமே போராடுவதற்குப் புறப்படுகிறது. இது இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்? இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாத்து வந்த ஒரு சமூகம், இந்தியாவை விட்டே விலகிச் செல்லும் இந்த ஆழமான புண்ணை ஏற்படுத்தியது யார்? கருணை மனுவை சந்திக்க மறுத்த சர்மாவும், உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதியும். இப்படிப்பட்ட செயல்களால்தான் இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்ற முடியும் என்று எண்ணுகிறார்களா? ஜிண்டாவின் சகோதரி கூறிய நெருப்பு வார்த்தைகள் நம் மீது அனல் அடிக்கிறது.

‘‘ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்திய பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி ‘டயரை’ உத்தம்சிங் என்ற சுதந்திரப் போராட்டவீரன் பிரிட்டனிலே சுட்டுக் கொன்றபோது உத்தம்சிங்கை தியாகி என்று அழைத்தோம். இன்று சீக்கிய மக்களின் கோயிலை இடித்து அதில் கொலைகளை செய்த வைத்யாவை அவர் ஊரான மகாராஷ்டிராவிலேயே பலிவாங்கிய ஜிண்டா பயங்கரவாதி அல்ல தியாகி’’ என்று தனது சகோதரனைப் பற்றி குறிப்பிடுகிறார்.நாம் அதில் உடன்படுகிறோமோ இல்லையோ; இந்த செய்திகள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆரோக்கியமானது அல்ல.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால், காஷ்மீர் விடுதலை இயக்கம் வளர்ந்த நேரத்தில் அதன் தலைவர் ‘மக்பூல்பட்’ என்பவரை டெல்லியில் உள்ள திகார் சிறையில் தூக்கிலிடும்போது இந்திய அரசுக்கு கண்டனக் குரல்கள் உலகளவிலிருந்து வந்தன. அதைத் தாண்டி தூக்கிலிடப்பட்ட அந்த தலைவருடைய கருத்து இன்று ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி, காஷ்மீர் மக்களுடைய ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டத்தில் தலைமை ஏற்றுள்ளது என இந்தியப் பத்திரிகைகள் எழுதும் அளவுக்கு ஓர் இயக்கத்தை தூண்டி விட்டது என்ற வருத்தமான செய்திகள்தான் இப்பொழுதும் நமக்கு நினைவுக்கு வருகின்றது. தூக்கிலிடப்பட்ட ஜிண்டா, சுகா இந்திய அரசு சொல்வதைப்போல பிடுங்கி எறியப்பட்ட களைகளாக இருந்துவிட்டால் பரவாயில்லை. புதைக்கப்பட்ட விதைகளாக ஆகி விட்டால் தாங்குமா இந்தியா?

App exclusive congress indira gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe