/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfhgdfh.jpg)
1973 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுமார் ஒரு கோடி ரூபாய் பங்கு மூலதனத்தில் தொடங்கப்பட்ட டாப்கோ எனும் அரசு நிறுவனம், கோழி, காடை, குருவி போன்ற பறவைகளின் இனவளர்ச்சிக்கான ஆராய்ச்சிக் கூடங்களையும் பண்ணைகளையும் நடத்தி வந்தது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் பண்ணைகள் வைத்து பறவைகள் மற்றும் அவை சார்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்துவந்த இந்நிறுவனம், தமிழக அரசிற்குத் தேவையான முட்டைகளையும் விநியோகம் செய்துவந்தது. தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்திற்கும் இதன் மூலமே முட்டைகள் வாங்கப்பட்டு வந்தன. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, இந்நிறுவனத்தைச் சார்ந்திருப்பதைக் குறைத்த தமிழக அரசு, பின்னர் 1999 ஆம் ஆண்டு இதனை சிப்காட் உடன் இணைத்தது.
இந்நிறுவனம் நன்கு செயல்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில், சத்துணவுக்குத் தேவையான முட்டைகளை டாப்கோவிடம் வாங்காமல் தனியார் நிறுவனங்களிடம் வாங்குவது என அப்போதைய அதிமுக அரசு முடிவெடுத்தது. தமிழக அரசின் இந்த திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு, இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பையும் ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் இச்சம்பவம் குறித்து 30.11.1991 நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை.
முட்டை பேர ஊழல்:
ஊழலற்ற ஆட்சி நடத்துவோம் என்ற வீர சபதத்தோடு ஆட்சிக் கட்டிலில் அரியணை ஏறிய ‘ஜெ’ ஆட்சியில் மீண்டும் மிகப் பெரியதொரு ஊழல் வெடித்து வெட்டவெளிச்சமாகி வீதிக்கு வந்துள்ளது.
கவர்னர் ஆட்சி வரையில் காலூன்றி நின்ற பொதுத்துறை நிறுவனங்கள், நசுங்கி நாசமாகும் கொடூரத்தின் இன்னொரு அத்தியாயம்தான் இந்த முட்டை ஊழல்.
தமிழக அரசின் பொதுநலத்துறை நிறுவனங்களில் ஒன்றுதான் 'தமிழ்நாடு கோழி இன வளர்ச்சிக் கழகம்'.சுருக்கமாக டாப்கோ.
சத்துணவு மையங்களுக்கு தேவைப்படும் முட்டைகளையும் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு தேவையான முட்டைகள், கோழிகள் சப்ளை செய்வதும் டாப்கோதான்.
பதினெட்டு வருடங்களாக ஒரு பொதுநலச் சேவையோடு நடைபோட்டு வந்த டாப்கோ அரசு நிறுவனம் இப்போது அடியோடு தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.
விளைவு! டாப்கோவையே இழுத்து மூடிவிட்டுப் போவதற்கு தயாராகி விட்டது தமிழகஅரசு. கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அரசு பிறப்பித்த உத்தரவின் பேரில் டாப்கோவின் நேரடிக் கட்டுப்பாட்டில் மட்டும் மொத்தம் பத்து மாவட்டங்களுக்கான முட்டை சப்ளை நடைபெற்று இருந்தது.
டாப்கோவுக்குத் தேவையான பெரும்பாலான முட்டைகள் தனியார் வளர்ப்புப் பண்ணைகளிடமிருந்து வாங்கப்பட்டு, அவை வெறும் இரண்டு பைசா லாபத்தில் மட்டும் நிறுவனங்களுக்கு விற்கப்படும்.
சத்துணவுத் திட்டங்களுக்கு மட்டும் மாதத்திற்கு இரண்டு கோடி முட்டைகள் சப்ளை செய்யப்படுகின்றன. மொத்த செலவு ஒரு கோடியே இரண்டு லட்சம்.
ஒரு வருடத்தில் மட்டும் பன்னிரெண்டு கோடியே இருபத்திநாலு லட்சம் ரூபாய் டாப்கோவின் முட்டை சப்ளையில் மட்டும் புரள்கிறது.
டாப்கோ தனது முட்டை சப்ளைக்காக பல தனியார் முட்டை உற்பத்தி நிறுவனங்களோடு செய்து கொண்ட ஒப்பந்தங்கள் கூட அடுத்த வருடம் ஜனவரி மாதம்தான் முடிவடைகிறது. ஆனால் அதற்குள் ‘‘புரட்சித் தலைவரின் குழந்தைகள் சத்துணவு’’ திட்டப் பொறுப்பைக் கையில் வைத்திருக்கும் அமைச்சர் இந்திரகுமாரி கடந்த ஒண்ணாம் தேதி ‘‘இனிமேல் டாப்கோ நிறுவனம் முட்டைகளை சப்ளை பண்ண வேண்டியதில்லை. நாங்கள் நேரிடையாகவே தனியாரிடம் முட்டைகளை வாங்கிக் கொள்கிறோம்’’ என்று அறிவித்துள்ளார்.
முட்டைக்கு இரண்டுபைசா லாபம் வைத்து ‘தரகர் வேலை’ செய்து டாப்கோ கொள்ளையடிக்கிறது என்பதுதான் இந்திரகுமாரியின் வெளிப்படையான குற்றச்சாட்டு. எனவே, டாப்கோ நிறுவனம் முட்டை சப்ளையை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இனிமேல் மாவட்ட கலெக்டர்களும் துறை கமிஷனர்களும் தங்களுக்கு வேண்டிய முட்டைகளை தனியாரிடம் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அரசு உத்தரவு உடனடியாகப் பிறப்பிக்கப்பட்டது.
ஒரு தனியார் டெண்டரில், ஓர் அரசு நிறுவனத்தால் தனியாரைவிட பத்து சதவீதம் கூடவோ குறையவோ கேட்கப்பட்டால் அந்த டெண்டர் அரசு நிறுவனத்துக்குதான் கொடுக்க வேண்டும்’’ என்று ஏற்கெனவே அரசு உத்தரவு அமலில் உள்ளது. அந்த அரசு உத்தரவை மீறித்தான் அமைச்சர் இந்திரகுமாரி தனது புதிய கட்டளையின் மூலம் முட்டை நிறுவன முதலாளிகளுக்கு பால் வார்த்துள்ளார்.
அரசாங்கம் தனக்கு வேண்டிய பொருள்களை அரசு நிறுவனங்களில்தான் வாங்க வேண்டும். உதாரணமாக, அரசுக்குத் தேவையான ஃபர்னிச்சர் சாமான்கள் தமிழக அரசின் ‘டான்சி’ நிறுவனத்திடம் இருந்துதான் வாங்கப்படுகின்றன.
‘ஸ்டேசனரி’ பொருள்கள் வாங்குவது சூப்பர் மார்க்கெட் அல்லது கோ-ஆப்பரேடிவ் சங்கத்தில்தான். அதேபோல் அரசாங்கம் பிரிண்ட் பண்ணினால் கூட அரசு கூட்டுறவு பிரிண்டிங் பிரஸில்தான் அடிக்க வேண்டும். அப்படித்தான் டாப்கோவின் முட்டை சப்ளையும் இருந்தது. ஆனால், அந்த விதிமுறைகள் அனைத்தும் ஆகாயத்தில் பறக்கவிடப்பட்டன.
கடந்த வருடம் சில மாதங்களில் முட்டை விலை எண்பத்து ஐந்து பைசாவுக்கு மேல் பறந்தபோது தனியார் காண்ட்ராக்டர்கள் தங்கள் ஒப்பந்தத்தை மீறி முட்டை சப்ளையை முடக்கிக் கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு முட்டையின் விலை ஒண்ணேகால் ரூபாய்க்கு விற்றனர். ஆனால், டாப்கோ சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு சொன்ன விலைக்கு முட்டையை கொடுத்தது. அந்த பழைய அனுபவத்தை இந்திரகுமாரி மறந்து விட்டார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எப்படி பொருள்களை வாங்கி மக்களுக்கு அரசு துறைகளின் வழியாக விநியோகம் செய்கிறதோ அதே மாதிரித்தான் டாப்கோ இருந்தது.
ஆனால், பலகோடி ரூபாய் புரளும் டாப்கோ இன்று அநியாயமாகப் பழி வாங்கப்பட்டுள்ளது. டாப்கோ நிறுவனம் இப்படி திடீரென்று நிராகரிக்கப் படுவதன் ரகசியம் என்ன? பல லட்சங்கள் இப்பொழுதே சம்பந்தப்பட்ட அமைச்சரான இந்திரகுமாரிக்கு கைமாறி உள்ளது.
இது ‘முதல் தவணை’ தானாம். முட்டை முதலாளிகள் அமைச்சரை இன்னும் இரண்டு தவணைகளில் குளிர வைக்க ரெடியாக இருக்கின்றார்கள்.
இத்தனை கொடுமைகளும் டாப்கோ அமைச்சர் ஜெயகுமாருக்கோ அல்லது டாப்கோ உயர் அதிகாரிகளுக்கோ தெரியாத விஷயம் அல்ல.
கடந்தவாரம் ஜெயக்குமாரே நேரிடையாக இந்திரகுமாரியிடம் சென்று, ‘‘டாப்கோவை ஒழிச்சு பழியை எம்மேல தூக்கிப் போடலாம்னு பாக்குறீங்களா? தயவு செஞ்சு டிபார்ட்மென்ட்டையும் சேர்த்து ஒழிச்சுடாதீங்க’’ என்று காட்டமாக விளாசியுள்ளார்.
ஆனால்,அமைச்சர் இந்திரகுமாரி ‘‘எல்லாம் அம்மாவுக்குத் தெரியும். அவங்களோட ‘ஓகே’ வில்தான் நான் பண்றேன். நீங்க உங்க வேலையைப் பாத்துட்டு இருந்தாலே போதும்’’என்று கூலாக பதிலளிக்க ‘உம்’மென்று தன் அறைக்கு திரும்பி விட்டாராம் ஜெயக்குமார். அதற்குப்பின் முட்டை முதலாளிகள் அவரையும் பலமாக சமாதானப்படுத்தி விட்டதாக கோட்டை வட்டாரத்துச் செய்தி.
பல ஆண்டுகளாக நல்ல லாபத்தில் நடைபோட்டு வந்த டாப்கோவை ஒழிக்க, இன்னும் சுவாரஸ்யமான நாடகங்கள் ‘ஜெ’ ஆட்சியில் அற்புதமாக அரங்கேறியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் எட்டாம்தேதி G.O.NO.277. FINANCE BGI DEPT Dt. 8.4.91. என்று கவர்னர் ஆட்சியில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ‘‘புதிதாக டாப்கோவில் யாரையும் வேலைக்கு எடுக்கவேண்டிய அவசியமில்லை. ஏற்கெனவே அங்கிருக்கும் தினக்கூலிகளை நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு பணி உயர்வு அளிக்கப்படவேண்டும்’’ என்கிறது கவர்னர் உத்தரவு.
ஆனால் ‘ஜெ’ அரசில் அதையும் மீறி கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி ஐந்து பேர் புதிய அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘புதிய பணியாளர்கள் தேவையில்லை’ என்று அரசு உத்தரவு இருந்தும் அனுபவமிக்க பலர் பதவி உயர்வுக்கு காத்திருந்தும் இவர்கள் ஏன் புதிதாக வேலைக்கு ஆள் எடுக்க வேண்டும்?
டாப்கோவின் மேனேஜிங் டைரக்டர் பையும், அமைச்சரின் சூட்கேஸும் நிறைக்கப்பட்டதால், ஏற்கெனவே இருந்த அரசு உத்தரவை மறந்து விட்டனர்.
அதேபோல் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த GO LR.NO; 1432/5/BGI/90-91.FINANCE.BG-1.DEPT Dt. 8.1.91. அரசு உத்தரவின் படி டாப்கோவில் யாரையும் டிரான்ஸ்பர் செய்யக்கூடாது. ஆனால் அந்த அரசு உத்தரவையும் மீறி செல்வன், இரத்தின சபாபதி, தேவராஜன், போன்ற வணிகக் கணக்கர்களும், அசோகன், ஜெயக்குமார் உட்பட சில அதிகாரிகளும் பந்தாடப்பட்டுள்ளனர்.
இதுதவிர டாப்கோவின் தீவனத்தை தற்போது தனியார் யாரும் வாங்குவதில்லை. காரணம் தீவனம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கருவாடு மீன்தான். அதேபோல, மக்காச்சோளம் வாங்குவதில் பெருமளவில் ஊழல் நடந்து வருகிறது. மேலும் பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் அனைத்தும் தூங்கி வழிகின்றன. எனவே தீவனத்தின் தரம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது.
இப்படித்தான் அழியத் தொடங்கியுள்ளன தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள். டாப்கோவில் பணிபுரியும் பல நூறு அலுவலர்களும், தொழிலாளர்களும் ‘‘வேதனை விழியில் தெரிய விக்கித்து நின்று கொண்டிருக்கின்றனர்.’’ ஏனென்றால், டாப்கோ அரசு நிறுவனம் எந்த நேரத்திலும் இழுத்து மூடப்படலாம்.
டாப்கோவின் கதை:
டாப்கோ நிறுவனம் 1973 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுமார் ஒரு கோடி ரூபாய் பங்கு மூலதனத்தில் தொடங்கப்பட்டது. கோழி, காடை, குருவி போன்ற பறவைகளின் இனவளர்ச்சிக்கான ஆராய்ச்சிக் கூடங்களையும் பண்ணைகளையும் டாப்கோ நடத்திவந்தது. தமிழ்நாட்டில் முட்டை மற்றும் கோழிகளை அதிக அளவில் சப்ளை செய்த நிறுவனம் டாப்கோதான். இதற்காக வந்து சேரவேண்டிய சுமார் அறுபது லட்சம் ரூபாய் வராமலேயே டாப்கோ ஏமாற்றப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் டாப்கோவுக்கு எப்பொழுதுமே அரசாங்கத்தின் அரவணைப்போ அல்லது ஆதரவோ கிடைப்பதில்லை. உதாரணம் கடந்தவாரம் பெய்தமழையில் போதிய பாதுகாப்பின்றி செங்கல்பட்டு ஜப்பானிய காடைகள் முட்டைபொறிப்பு நிலையத்தில் மதிப்புமிக்க சுமார் மூவாயிரம் ‘தாய்க்காடைகள்’ அநியாயமாக செத்தன.
இது விஷயமாக டாப்கோ ஊழியர் நலசங்க கௌரவத்தலைவர் மாசிலாமணியை சந்தித்தோம்.
"டாப்கோ அரசு நிறுவனம் கடந்த காலங்களில் லாபத்தில் இயங்கிய நிறுவனம்தான். அது இப்போது தனியார் கைகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தனியார் முதலாளிகள் கொடுக்கும் அன்பளிப்புக்கு ஆசைப்பட்டு பொதுமக்களின் சொத்தான டாப்கோ நிறுவனம் ‘அம்போ’வென கைவிடப்பட்டுள்ளது.
அமைச்சர் இந்திரகுமாரிக்கும் முட்டை முதலாளிகளுக்கும் இடையில் பேரம் நடந்ததும் பலலட்சம் ரூபாய் கைமாறி இருப்பதும் எங்களுக்கு தெரியும். இந்த மிகப்பெரிய ஊழலை நாங்கள் பலமுறை தமிழக அரசிடம் எடுத்துக்காட்டியும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு நிறுவனம் முடங்கி விடக்கூடாது என்ற அக்கறை அரசாங்கத்துக்கே இல்லை. வாங்கப்பட்ட கமிஷன் தொகை தலைமை வரை சென்றுள்ளது என்பது வெட்ட வெளிச்சம்"என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/dfhgdfh.jpg)