Advertisment

'ஸ்ரீபெரும்புதூர்' பெயரை 'ராஜீவ்புரம்' என மாற்ற எழுந்த கோரிக்கை; எதிர்த்து நின்ற ஜீயர்!

sriperumbudur jeeyar interview on rajivgandhi memorial

sriperumbudur jeeyar interview on rajivgandhi memorial

மே 21, 1991, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். ஸ்ரீபெரும்புதூரில் நடந்த இந்த அசம்பாவிதம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. வெகுஜனம் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரையும் ராஜீவ் காந்தி படுகொலை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து, அவரது மரணம் தொடர்பான பரபரப்புகள் மெல்லக் குறையத் தொடங்கியிருந்த காலகட்டத்தில், அவருக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான பிரச்சனைகள் அதிகார வட்டாரத்தில் ஏற்படத் துவங்கின. நினைவிடத்தை எங்கு அமைப்பது, நினைவிடத்தை அமைக்கும் பொறுப்பு யாருடையது என விவாதங்கள் சென்றுகொண்டிருந்த போது, ஸ்ரீபெரும்புதூர் பெயரை ராஜீவ்புரம் என மாற்றவேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை எழுப்பினர்.

Advertisment

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேச பெருமாள் கோயிலின் கட்டுப்பாட்டிலிருந்த 6 ஹெக்டேர் நிலத்தை நினைவிடம் அமைப்பதற்காக தமிழக அரசு கையகப்படுத்தியது. இந்த இடத்தில் ராஜீவ் நினைவிடம் அமைப்பதற்கான முயற்சிகளை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டிருந்தார். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவே, அதிலிருந்து விலகிக்கொண்டார் ஜெயலலிதா. இதனையடுத்து, நினைவுச்சின்னத்தை யார் கட்ட வேண்டும் என்பது குறித்து மத்திய பொதுப்பணித் துறைக்கும் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கும் இடையே போட்டி எழுந்தது. இப்படிப்பட்ட சூழலில், ரூ .2 கோடி மதிப்புள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலின் நிலத்தை தமிழக அரசு ரூ .8 லட்சத்திற்குக் கையகப்படுத்திக்கொண்டதாக ஸ்ரீபெரும்புதூரின் வரதராஜா எத்திராஜ ஜீயர் புகார் கொடுத்ததோடு, ராஜீவ்காந்தி பாதுகாப்பிலிருந்த குறைபாடுகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட வர்மா கமிஷனிடமும் முறையிட்டார். அதுமட்டுமல்லாமல், ஸ்ரீபெரும்புதூர் பெயரை ராஜீவ்புரம் என மாற்றக்கூடாது எனவும் ஜீயர் தரப்பில் அழுத்தமான கோரிக்கை வைக்கப்பட்டது. இப்படியான சூழலில், 21.12.1991 நக்கீரன் இதழில் இது தொடர்பாக வெளியான கட்டுரை.

Advertisment

ராஜீவ்புரம் விவகாரம். போராட்டம் வெடிக்கும் - ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சாமி ஆவேசம்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட ஊரான ஸ்ரீபெரும்புதூரை ராஜீவின் நினைவாக ராஜீவ்புரம் என மாற்ற வேண்டும் என்பது காங்கிரசாரின் கோரிக்கை. ஆனால், ‘‘ராஜீவ் இறுதியாகக் கலந்துகொண்ட ஸ்ரீ பெரும்புதூர் கூட்டத் திடலை அவர் நினைவகத்துக்காக சுற்றுலாத் துறையினரிடம் குறைந்த விலைக்கு விற்றதே முதல் குற்றம்’’ என்று ஜீயர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

கூடவே வர்மா கமிஷனுக்கும் தனது சார்பில் அபிடவிட் ஒன்றைக் கொடுத்திருக்கும் ஜீயர், அதில், "ராஜீவ் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று. PRE PLANNED MURDER. கொலை சம்பவம் நடப்பதற்கு சில மாதங்கள் முன்பாகவே இப்பகுதிக்குள் கொலையாளிகள் பிரவேசிக்கத் தொடங்கி விட்டார்கள்.

லுங்கி. டி-சர்ட், சூட்கேஸ் சகிதமாக அறிமுகமில்லாத பல இளைஞர்கள் காரிலும் மோட்டார் சைக்கிள்களிலும் இப்பகுதிகளில் உலவியதை நானே பல சமயங்களில் பார்த்திருக்கிறேன்.

மேலும், இப்பகுதியில் உள்ள சில அரசியல்வாதிகள் இன்று திடீர் பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்களது கடந்தகால மற்றும் தற்சமயம் உள்ள பொருளாதார பின்னணிகளை புலனாய்வுத் துறையினர் விசாரித்தாலே பல உண்மைகள் வெளி வரும்..

ஒன்பது நூற்றாண்டு காலமாக ராமானுஜரால் புகழ்பெற்ற இந்த ஸ்ரீபெரும்புதூரை இப்போது அரசியல் லாபத்துக்காக ராஜீவ்புரம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சிலர் கூக்குரல் இடுகிறார்கள். இது மிகவும் அநியாயம்.

இங்குள்ள மாநிலஅரசும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் இந்த விஷயத்தில் சுதந்திரமாக தனது கருத்தை வெளியிட முடியாத இக்கட்டில் மாட்டிக் கொண்டு முழிக்கிறது" என்றார்.

உயிரே போனாலும் இந்த பெயர் மாற்றத்துக்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார் ஜீயர் சாமிகள். போராட்டம் என்றால் அமைதி வழியில் சத்தியாக்கிரக வழிப் போராட்டம் நடத்துவீர்களா? என ஜீயரிடம் கேட்டோம்.

அப்படியெல்லாம் செஞ்சா நம்மளப் பாத்து கேலி பண்ணிட்டுப் போயிடுவா! இப்ப எல்லாம் அமைதிவழி எடுபடாது. என்னோட போராட்டம் மக்களைத் திரட்டி பெரிய அளவில் அரசை ஈர்க்கும் வகையில்தான் இருக்கும். அதற்காக எந்த மிரட்டல் வந்தாலும் நான் அஞ்ச மாட்டேன் என்றார் ஜீயர் சுவாமிகள்.

App exclusive rajiv gandhi sriperumputhur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe