2021இல் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, முதன்முறையாக அவர்களது அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி இந்தியாவுக்கு ஆறு நாள் அரசு பயணமாக (அக்டோபர் 9, 2025) வருகை தந்தார். அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யத் தொடங்கினர். ஆனால், ரஷ்யாவைத் தவிர எந்த நாடும் தாலிபான் அரசை இதுவரை அங்கீகரிக்கவில்லை.

Advertisment

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயண விலக்கு அனுமதியுடன் இந்தியா வந்த முத்தகி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

Advertisment

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பைத் தொடர்ந்து, முத்தகி டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் பேரிடரின்போது முதலில் உதவி வழங்கிய நாடு இந்தியா. காபூலுக்கு 1,000 குடும்ப முகாம்களையும், குனாருக்கு 15 டன் உணவுப் பொருட்களையும் இந்தியா அனுப்பியது. இந்தியாவை ஆப்கானிஸ்தான் நெருங்கிய நட்பு நாடாகப் பார்க்கிறது. இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தையும், மக்களுக்கிடையேயான உறவுகளையும் வலுப்படுத்த விரும்புகிறோம். இந்திய நிறுவனங்களை ஆப்கானிஸ்தானின் சுரங்கத் தொழிலில் முதலீடு செய்ய அழைக்கிறோம். ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிராக எந்த தீய சக்தியும் செயல்பட அனுமதிக்க மாட்டோம். இந்தியாவுக்கு எதிராக இருந்த பயங்கரவாத அமைப்புகளை அகற்றிவிட்டோம்,” என்றார்.

ஆனால், முத்தகியின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பெண்கள் படிக்கக் கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண் துணையின்றி வெளியே செல்லக் கூடாது, திருமணமான பெண்களுக்கு விவாகரத்து கிடையாது என்று பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நடந்த தாலிபான் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு பெண் தலைவர்கள், பெண் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, “தாலிபான் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனதுநிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். பெண்களின் உரிமைகளை நீங்கள் வெறும் தேர்தல் நேரங்களில் மட்டுமே அங்கீகரிக்கிறீர்களா? இந்தியாவின் மிகத் திறமையான பெண்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பு நமது நாட்டில் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? இந்தியாவின் முதுகெலும்பாகவும் பெருமையாகவும் விளங்கும் பெண்களை இப்படி அவமதிப்பது எப்படி நியாயமாகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “பெண் பத்திரிகையாளர்களை ஒதுக்கிவைத்து இந்திய மண்ணில் செய்தியாளர் சந்திப்பு நடத்த தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியை அனுமதிக்க நமது அரசுக்கு எவ்வளவு தைரியம்? இதற்கு நமது வெளியுறவுத்துறை அமைச்சர் எப்படி ஒப்புக்கொண்டார்? இதை எதிர்த்து கேள்வி கேட்காமல் நமது ஆண் பத்திரிகையாளர்கள் ஏன் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்?” என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார். 

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமீர் கான் முத்தகி நடத்திய செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இருப்பினும், அரசுக்கு தெரியாமல் இது எப்படி நடந்தது என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.