Advertisment

காதலுக்கு எதிர்ப்பு; குடும்பத்திற்குக் கட்டம் கட்டிய இளம்பெண் - மிரண்டுபோன போலீஸ்!

1

உத்தரப் பிரதேசம் மாநிலம் மோரதாபாத்தின் பாக்படா பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சோபரம். இவருக்கு மூன்று மகன்களும், 21 வயதான ஸ்வாதி என்ற மகளும் உள்ளனர். ஸ்வாதிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் அது காதலாக மாறியுள்ளது. சமூகக் காரணங்களால் ஸ்வாதியின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், காதலை கைவிட முடியாமல், ஸ்வாதி தொடர்ந்து வந்தார். அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்திப்பதும், இரவில் குடும்பத்தினர் தூங்கிய பிறகு காதலனுடன் செல்போனில் பேசுவதுமாக ஸ்வாதி தனது காதலை வளர்த்து வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், செப்டம்பர் 17 ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள கல்லறை அருகே ஓவியர் யோகேஷ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், யோகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், யோகேஷ் உயிரிழப்பதற்கு முன்பு அவரது செல்போனில் இருந்து 112 என்ற அவசர அழைப்பு எண்ணுக்கு, தன்னை ஸ்வாதியின் தந்தை சோபரம் மற்றும் அவரது மூன்று மகன்களும் கடுமையாகத் தாக்கியதாகவும், உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாகவும் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் போலீசார் சோபரம் மற்றும் அவரது மகன்களை அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால், யோகேஷுக்கும் இவர்களுக்கும் எந்தவொரு பகையோ அல்லது முன் பகையோ இல்லாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, யோகேஷின் செல்போனில் இருந்து வந்த அவசர அழைப்பை ஆய்வு செய்துள்ளனர். அதில் யோகேஷின் குரல் சரியாக ஒத்துபோகாதது, போலீசாரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. மேலும், யோகேஷுக்கு இறப்பதற்கு முன்பு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. சந்தேகம் அதிகரிக்க, போலீசார் விசாரணை வலையை விரிவுபடுத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில்தான் மனோஜும் அவரது காதலி ஸ்வாதியும் சிக்கிக்கொண்டனர். இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தபோது அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.

வீட்டில் கடும் எதிர்ப்புகள் எழுந்த போதிலும், ஸ்வாதிக்கு காதலை கைவிட மனமில்லை. அதனால், தனது குடும்பத்தினருக்கு உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, அவர்கள் தூங்கிய பிறகு இரவு நேரத்தில் காதலன் மனோஜை ரகசியமாகச் சந்தித்து வந்துள்ளார். உணவு சாப்பிட்டவுடன் உடனடியாக தூக்கம் வருவதை உணர்ந்த ஸ்வாதியின் குடும்பத்தினர், அவர் மீது சந்தேகப்படத் தொடங்கியுள்ளனர். இதனால், அவர்கள் இது குறித்து ஸ்வாதியிடம் கேட்க, ஏதோவொரு வகையில் சமாளித்துள்ளார். இப்படி எவ்வளவு நாள் சமாளிக்க முடியும் என்று நினைத்த ஸ்வாதி, தனது காதலன் மனோஜுடன் சேர்ந்து ஒரு மோசமான திட்டம் தீட்டியுள்ளார். அதாவது, தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் குடும்பத்தினரை ஏதாவது வழக்கில் சிக்க வைத்துவிட்டால், அவர்கள் சிறைக்குச் சென்றுவிடுவார்கள், நாம் காதலனுடன் நிம்மதியாக வாழலாம் என்று ஒரு கொலைச் சம்பவத்தை நிகழ்த்த முடிவெடுத்துள்ளார்.

Advertisment

இந்தத் திட்டத்தை கச்சிதமாக செய்து முடிக்க, டிவியில் க்ரைம் ஷோ மற்றும் கொலை செய்வது எப்படி என்ற தலைப்பிலான ஆவணப்படங்கள் உள்ளிட்டவற்றை ஸ்வாதியும் மனோஜும் சேர்ந்து பார்த்துள்ளனர். சிக்கிக்கொள்ளாமல் கொலை செய்வது எப்படி என்று தெரிந்துகொண்ட காதல் ஜோடிக்கு யாரை கொலை செய்வது என்ற யோசனை எழுந்துள்ளது. அப்போதுதான் மோரதாபாத் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த ஓவியர் யோகேஷை கொலை செய்து, அந்தப் பழியை ஸ்வாதியின் குடும்பத்தினர் மீது போட்டுவிடலாம் என்று திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, சம்பவத்தன்று ஓவியர் யோகேஷை அழைத்து, மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளனர். அதனை குடித்தவுடன் போதையில் மயங்கி விழுந்த அவரை, கீழே கிடந்த செங்கலை எடுத்து சாகும்வரை அடித்து கொலை செய்துள்ளனர். அதன்பிறகு, அவரது செல்போனில் இருந்து அவசர உதவி எண்ணுக்கு, ஸ்வாதியின் தந்தை மற்றும் சகோதரர்கள் தாக்கியதாக யோகேஷ் கூறுவதுபோல் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை யோகேஷின் மரண வாக்குமூலமாக போலீசார் எடுத்துக்கொள்வார்கள் என்று நம்பி, அந்த செங்கலை சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ஸ்வாதி மற்றும் மனோஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

young girl boyfriend girlfriend uttar pradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe