'Why did Nehru want...?' The 'Panchaseel' agreement is a topic of discussion again Photograph: (nerhu)
சீனாவுடன் பஞ்சசீல ஒப்பந்தத்தை நேரு ஏன் விரும்பினார் என்பது குறித்து பாதுகாப்புப் படைத் தலைவர் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
'மெக்மஹோன் கோடு போன்ற ஒன்று நம்மிடம் இருப்பதை அறிந்திருக்கலாம். அதனால்தான் நேரு பஞ்சசீலம் ஒப்பந்தத்திற்கு விருப்பம் தெரிவித்திருக்கலாம்' என பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
1954 ஆம் ஆண்டு திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா அங்கீகரித்தது. மேலும் இரு அண்டை நாடுகளும் 'பஞ்சசீலம்' என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் சீனப் பிரதமர் சூயென் லாய் ஆகியோர் கையெழுத்திட்டு இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். 'பஞ்ச' என்றால் ஐந்து, 'சீலம்' என்றால் நற்பண்புகள். இது இரு நாடுகளுக்கிடையேயான அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து முக்கியக் கொள்கைகளை கொண்டது.
இந்நிலையில் 'பஞ்சசீலம் என்ற முறையான ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு எல்லையை தீர்த்து வைப்பதாக இந்தியா கருதியது' என்று பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) ஜெனரல் அனில் சவுகான் உத்தரகாண்டின் டேராடூனில் நடந்த ஒரு நிகழ்வில் பேசியுள்ளார்.
அவரது உரையில், ''பஞ்சசீலம் ஒப்பந்தத்தில் சீனாவின் நிலைப்பாடு என்னவென்றால், இந்த ஒப்பந்தம் வர்த்தகத்திற்காக மட்டுமே நடத்தப்பட்டது. இது எல்லையில் சீனாவின் நிலைப்பாட்டை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என சீனா நினைக்கிறது. இன்றுவரை, கடுமையான இமயமலை நிலப்பரப்பில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) உணர்திறன் மிக்கதாகவே உள்ளது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும், அப்போதைய சீனப் பிரதமர் சூயென் லாய்வும் பஞ்சசீல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கிழக்கில் மெக்மஹோன் கோடு போன்ற ஒன்று நமக்கு இருப்பதை நேரு அறிந்திருக்கலாம். அதனால்தான் அவர் பஞ்சசீல ஒப்பந்தத்தை நாட விரும்பினார். பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையிலான கிழக்கில் 890 கி.மீ மெக்மஹோன் கோடு எல்லையாக இருந்தது. சுதந்திர இந்தியா, சீனாவுடன் நல்ல உறவை உருவாக்க ஆர்வமாக இருந்தது. ஆனால் 1949 இல் சீனா சுதந்திரம் பெற்றவுடன், அது தனது நிலப்பகுதிகளுக்கான உரிமைகோரல்களைப் பின்பற்றவில்லை. மேலும் பிரிட்டிஷாரிடம் இருந்து பெற்ற சிறப்பு சலுகைகளை சீனா விட்டுக் கொடுத்தது. 1954 ஆம் ஆண்டு, இந்தியா திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது. இரு நாடுகளும் பஞ்சசீல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம், ஒரு முறையான ஒப்பந்தத்தின் மூலம், தனது எல்லையை, அதாவது வடக்கு எல்லையை, தீர்வு காணப்படாத ஒரே பகுதியை, இந்தியா தீர்த்துவிட்டதாகக் கருதியது.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த எல்லையின் சட்டபூர்வமான தன்மை இப்போது பஞ்சசீல ஒப்பந்தத்தில் தங்கியுள்ளது. இருப்பினும், பஞ்சசீல ஒப்பந்தம் எல்லைக்கும் அதன் நிலைப்பாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என சீனா சொல்வதாக'' தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஜூன் மாதத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மிக மோசமான மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். உளவுத்துறை அறிக்கைகளின்படி, 30க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us