Advertisment

யார் ஆட்சிக்கு வந்தாலும் ‘நானே ராஜா’... 20 ஆண்டுகளாக கோலோச்சும் நிதிஷ் குமார்!

01

243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில், அண்மையில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில், நிதிஷ் குமாரும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் மகா கூட்டணியும் களம் கண்டன. ஆனால், இன்றைய தேர்தல் முடிவுகள் நிதிஷ் குமாரும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமாக அமைந்துள்ளன. நிதிஷ் குமார் தான் மீண்டும் பீகார் முதலமைச்சராகப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Advertisment

இந்தச் சூழலில், பீகார் அரசியலில் நிதிஷ் குமார் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகிறார். கடந்த 20 ஆண்டுகளாக முதலமைச்சராக இருக்கும் அவர், ஒவ்வொரு தேர்தலிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறார். பீகாரில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும், அந்தக் கூட்டணி வெற்றி பெறுவது நிதிஷ் குமாரின் அரசியல் வியூகத்தின் மாயாஜாலம் என சொல்லப்படுகிறது. பீகார் அரசியல் வரலாற்றில் 2005 முதல் ஆட்சிக்கு எந்தக் கூட்டணி வந்தாலும் நிதிஷ் மட்டும் மாறாமல் முதலமைச்சராக நீடிக்கிறார்.

Advertisment

நிதிஷ் குமார், தனது ஐக்கிய ஜனதா தளக் கட்சி தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், குறிப்பிட்ட சமூக வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்கிறார். பீகார் அரசியலில் அவரைப் பற்றி அலசிப் பார்த்தபோது அதில் பல்வேறு தகவல்கள் புதைந்திருக்கின்றன.

1970களில் இந்திரா காந்தியின் அவசரகாலத்தை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தன. அதில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படும் ஜே.பி. எனும் ஜெயபிரகாஷ் நாராயணன் ஜனதா கட்சியைத் தொடங்கினார். அப்போது, அவருடன் இருந்த பீகாரின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக நிதிஷ் குமார் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, ஜனதா கட்சியில் தீவிரக் களப்பணியில் ஈடுபட்டிருந்த நிதிஷ் குமார் 1985ஆம் ஆண்டு முதல் முறையாகப் பீகார் சட்டமன்ற உறுப்பினரானார். 1990ல் ஜனதா கட்சி, லோக் தளம், ஜன மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து வி.பி. சிங் உருவாக்கிய ஜனதா தளம், 1990 பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 122 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது, லாலு பிரசாத் யாதவ் முதல்வரான நிலையில், நிதிஷ் குமார் மக்களவைத் தேர்தலில் ஜனதா தளக் கட்சியின் எம்.பி.ஆகி வி.பி. சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, நிதிஷ் குமார் 14 எம்.பி.க்களுடன் சோசலிஸ்ட் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பின்னால் அணிவகுத்து, ஜனதா தளம் என்ற குழுவை உருவாக்கினார். அதன்பிறகு, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸும், நிதிஷ் குமாரும் இணைந்து அக்குழுவை சமதா கட்சியாக மாற்றினர். அக்கட்சி 1995 பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கி வெறும் 7 இடங்களில் வென்றது. அந்தத் தேர்தலில் ஜனதா தளம் ஆட்சியைத் தக்கவைத்து லாலு பிரசாத் யாதவ் மீண்டும் முதல்வரானார்.

இதனிடையே, 1996, 1998 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் சமதா கட்சி கூட்டணி அமைத்தது. அதன் நீட்சியாக, 1998-ல் நிதிஷ் குமார் ரயில்வேத் துறை அமைச்சரானார். இதையடுத்து, 2000ஆம் ஆண்டு காலகட்டத்தில் மீண்டும் மாநில அரசியல் பக்கம் திரும்பிய நிதிஷ் குமார், சமதா கட்சியை அதிகாரபூர்வமாக ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைத்தார். 2005ஆம் ஆண்டு பிப்ரவரி சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நவம்பர் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் நவம்பரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 138 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு ஆட்சியிலிருந்த லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு அத்தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அப்போது மக்களவை எம்.பி.யாக இருந்த காரணத்தால் அந்தத் தேர்தலில் போட்டியிடாத நிதிஷ் குமார், சட்டமன்ற மேலவை உறுப்பினராகி இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். அன்று ஆரம்பித்த நிதிஷின் முதல்வர் பதவி... இன்று வரை முடிவுக்கு வரவில்லை. சரியாக 2014 வரை... அதாவது 17 ஆண்டுகளாக பாஜகவுடன் உறவில் இருந்த நிதிஷ் குமார், 2014-ல் மோடியைப் பிரதமராக முன்னிறுத்தியதால் பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டார். அதன்பிறகு, 2015-ல் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்த நிதிஷ் குமார், 178 இடங்களில் வென்று மீண்டும் முதல்வரானார். அதன்பிறகு, 2017-ல் லாலு பிரசாத் யாதவ் மீது ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் வாங்கிய குற்றச்சாட்டு தீவிரமடையவே நிதிஷ் அந்தக் கூட்டணியை முறித்துக்கொண்டு மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து 2020-ல் முதல்வரானார்.

இந்தச் சூழலில், 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கியது. நிதிஷ்க்குள் மீண்டும் பிரதமர் ஆசை எழுந்தது. பாஜகவை கழற்றிவிட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆர்.ஜே.டி., காங்கிரஸுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். அதோடு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்க காரணமாக அமைந்தார். அந்த நேரத்தில், இந்தியா கூட்டணி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் என்று காத்திருந்த நிதிஷ்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து, மீண்டும் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்த நிதிஷ், "செத்தாலும் இனி அவர்களுடன் உறவு கிடையாது" என்று யாரைச் சொன்னாரோ அந்தப் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாகப் பீகார் முதல்வரானார். இத்தகைய சூழலில் தான், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 190க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். தற்போது, 10வது முறையாக முதல்வராகப் பதவியேற்க இருக்கும் நிதிஷ் குமார்... கடந்த 20 ஆண்டுகளில் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும் அவரே முதல்வர் அரியணையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

b.j.p Bihar congress Nitish kumar RJD
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe