வங்கதேசத்தில் 2024 ஜூலை மாதம் இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் வன்முறையாக மாறி, ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு வீழ்ந்தது. இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாட்டை நிர்வகித்து வந்தது. இந்த நிலையில் தான், கடந்த பிப்ரவரி 12 அன்று பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனா மீது வழக்கு உள்ளதால் அவாமி லீக் கட்சி போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக வங்கதேச தேசியவாதக் கட்சியான பிஎன்பி (BNP)க்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

Advertisment
356
world Photograph: (politics)

தேர்தலில் 50 கட்சிகளைச் சேர்ந்த 1,755 வேட்பாளர்கள் மற்றும் 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் BNP கூட்டணி 212 இடங்களை வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி 77 இடங்களையும், மற்ற சில கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் எஞ்சிய இடங்களையும் வென்றுள்ளனர். BNP கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், BNPயின் தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமராக உள்ளார்.

Advertisment

17 ஆண்டுகள் சொந்த நாட்டிற்குள் வர முடியாமல் வெளிநாட்டிலேயே தலைமறைவு வாழ்கை வாழ்ந்து வந்த தாரிக் ரஹ்மான் தற்போது வங்கதேச நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார். யார் இந்த தாரிக் ரஹ்மான்?

தாரிக் ரஹ்மானின் தந்தை ஜியாவுர் ரஹ்மான். 1971 விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றிய ராணுவத் தளபதி, பின்னர் BNP கட்சியைத் தொடங்கி நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர். தாரிக் ரஹ்மானின் தாய் கலீதா ஜியா, வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர். கணவர் ஜியாவுர் ரஹ்மான் 1981ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிறகு அவரது மனைவி கலீதா ஜியா அரசியலில் இறங்கி BNP கட்சியை வழிநடத்தினார். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் வெளியே வரக்கூடாது என்ற அடிப்படைவாதக் கொள்கைகள் தலைவிரித்தாடியது. இருப்பினும் அதனையெல்லாம் தகர்த்தெறிந்து கலீதா ஜியா மூன்று முறை நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார்.

Advertisment

இதனிடையே கல்லூரிப் படிப்பை முறையாக முடிக்காத தாரிக் ரஹ்மான், ஜவுளி, ஷிப்பிங் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தார். ஆனால் தந்தையின் மறைவுக்குப் பிறகு அம்மாவுக்கு ஆதரவாக அரசியலில் இறங்கினார். தாய் கலீதா ஜியா பிரதமராக இருந்தபோதும், அரசாங்கத்தில் அனைத்து முக்கிய முடிவுகளையும் தாரிக் ரஹ்மான் தான் எடுத்து வந்தார். நிழல் பிரதமராக வலம்வந்த அவரை “கிரீட இளவரசர்” (crown prince) என்று சொந்தக் கட்சியினரே அழைத்தனர்.

355
world Photograph: (politics)

2007ஆம் ஆண்டு ராணுவத்தின் உதவியுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற இடைக்கால அரசு, ஊழல், பண மோசடி மற்றும் ஷேக் ஹசீனாவைக் கொலை செய்ய முயற்சித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாரிக் ரஹ்மானை கைது செய்து சுமார் 18 மாதங்கள் சிறையில் அடைத்தது. அதன்பிறகு 2008ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த தாரிக் ரஹ்மான், உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் நாடு திரும்பவே இல்லை. அவர்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எதிர்க்கட்சியினர் அவரை “டார்க் பிரின்ஸ்” (Dark Prince) என்று அழைத்து ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்காக விமர்சித்தனர்.

இந்நிலையில் தான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாய் கலீதா ஜியாவின் மறைவின் போது மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பினார். அந்தச் சமயத்தில் ஜென்சி போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டு நாடே போர்க்களமாக இருந்தது. தாயின் இறுதிச் சடங்குக்குப் பிறகு BNP கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற தாரிக் ரஹ்மான், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் வகையில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார். குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்றும், நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவேன் என்றும், மத வேறுபாடின்றி அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான தேசத்தை உருவாக்குவோம் என்றும் உறுதியளித்தார். இந்த நிலையில் தான் நடந்து முடிந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

தனது அரசியல் பயணத்தில் தலைமறைவு வாழ்க்கை, சர்ச்சைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் என ஏகப்பட்ட சிக்கல்களைச் சந்தித்து வந்த தாரிக் ரஹ்மானுக்கு தற்போது வங்கதேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பெரும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் அவரது செயல்பாடுகளைப் பொறுத்தே நாட்டின் வளர்ச்சியும் இருக்கும். அதனை வங்கதேச மக்களைப் போலவே உலக நாடுகளும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன.