திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவெறி அரசியலைத் தூண்டி கலவரத்தை உருவாக்க முயல்வதாக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் நேற்று (22-12-25) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விசிகவினர் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய திருமாவளவன், ''தம்பி விஜய்யும், தம்பி சீமானும் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது, பா.ஜ.கவின் பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது. பிராமண கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன் என்று சீமான் சொல்கிறார். அந்த தம்பிக்கு நான் சொல்கிறேன். நீங்கள் வெளிப்படையாக வந்துவிட்டீர்கள், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. நீங்கள் தமிழ் தேசியம் தான் பேசுகிறீர்கள் என்று இவ்வளவு காலம் நாங்கள் நம்பி கொண்டிருந்தோம். இப்போது தான் தெரிகிறது, நீங்கள் இந்து தேசியம் பேசுகிறீர்கள் என்று. நீங்கள் இந்து தேசியம் கூட பேசவில்லை, பிராமண தேசியம் பேசுகிறீர்கள். எவ்வளவு பெரிய ஏமாற்று நடவடிக்கை. பெரியாரை இழிவுப்படுத்துவதும், பெரியாரின் அரசியலை தகர்ப்பதுமா தமிழ் தேசியம்? இரண்டு பேர் தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டார்கள்'' எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் நக்கீரனின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட விசிகவின் சங்கத்தமிழன் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''நாங்கள் கூட குறிப்பாக நான் கூட சீமானிடம் நல்ல நெருக்கத்தில் இருக்கிறேன். சொல்லப் போனால் எங்களுடைய இளைஞர் அணி நடத்திய நிகழ்வில் சீமான் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் வருவது தமிழ் தேசியத்தை நான் மேதகுவிடமும் திருமாவளவன் இடமும் கற்றுக்கொண்டேன் என்று சொன்னார். சீமான் ஒரு போராளியாக போராடட்டும் என நினைத்தேன். ஆனால் திருமாவளவன் சொன்னதை உடனே கவனிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
குறிப்பாக கடப்பாரை பற்றி சீமான் ஆரம்பிக்கிறார். அந்த பேச்சை எல்லாம் பார்க்கும் பொழுது யார் இவர் என்று சிந்திக்க வேண்டிய சூழ்நிலை, காலகட்டம் வந்துள்ளது. இந்த கடப்பாரை கதையை எடுத்தோம் என்றால் பாபர் மசூதி இடித்த கடப்பாரை பற்றி உங்களுக்கு தெரியும். அதேபோல 2002-ல் குஜராத் கலவரத்திற்கு எந்த கடப்பாரை காரணம் என்று தெரியும். பில்கிஸ்பானு அது எந்த கடப்பாரை என்று தெரியும். வயிற்றை அறுத்து இளம் குழந்தைகளை கொன்றார்கள். இன்னும் தமிழ்நாட்டில் சாதி கலவரங்கள் நடக்கிறது. அதற்கு காரணம் எந்த கடப்பாரை என்று தெரியும். அதுதான் பிராமணியம் என்ற கோட்பாடு கொண்ட கடப்பாரை.
அந்த கடப்பாரையை எடுத்து திராவிடத்தை உடைப்பேன் என்றால் நீ யார் என்று தெரிந்துபோய் விட்டது. தமிழ் தேசியம் என்று போர்வையில் பிச்சை எடுத்தார் என்று நிறைய பேர் சொல்வார்கள். நான் மரியாதை நிமித்தமாக நமது அண்ணன்தான் என்று அதைப்பற்றி நான் சொல்வதில்லை. ஆனால் திருமாவளவன் சொன்ன பிறகு அதை பார்க்கிறோம். அவருடைய கருத்தை பார்க்கும் பொழுது தனிப்பட்ட முறையில் திமுகவை உடைப்பேன் என்று சொன்னால் உடைத்துக் கொள். அது உனக்கும் திமுகவுக்கும் உள்ள பிரச்சனை. ஆனால் திராவிடம் என்று கோட்பாட்டை கொடுத்தது அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன். தந்தை பெரியார் திராவிடத்தை இந்த மக்களிடம் பரவலாக கொண்டு போனார். இவர்கள் திமுக, அதிமுக என கட்சி ஆரம்பித்து விட்டார்கள். திராவிடம் இந்தியாவை ஆண்டவர்கள் என வரலாறு இருக்கிறது. நாகர்கள் தான் தமிழர்கள். தமிழர்கள் தான் திராவிடர்கள் என அம்பேத்கர் கூறியுள்ளார். எனவே அதை உடைப்பேன் என நீ குறிப்பிட்டால் உன் கையை உடைத்தால் என்ன? அதனால் நாம் தமிழருக்கு இது இறுதி எச்சரிக்கை'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/23/168-2025-12-23-19-27-43.jpg)