Skip to main content

அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்: அ.சவுந்தரராசன்

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
t as

 

அரசுக்கு அதிகளவில் வருவாய் ஈட்டிக் கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என அ.சவுந்தரராசன் கூறினார்.


மதுபானக் கடை ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளை அடிக்கும் சமூக விரோதிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊழியர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தொமுச உள்ளிட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் வியாழனன்று (ஜூன் 28) நடைபெற்றது.
முன்னதாக எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இருந்து பேரணியாக கோட்டையை நோக்கி புறப்பட்டனர். காவல் துறையினர் அவர்களை எழும்பூர் லாங்ஸ் கார்டன் சாலை சந்திப்பு அருகே மடக்கினர். இதற்கிடையே அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கே கூட்டம் நடத்தப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

 

15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், பிழைப்பூதிய சட்டம், வேலையாள் இழப்பீடு சட்டம், சம்பள பட்டுவாடா சட்டம் மற்றும் தொழிலக நிலையாணை சட்டங்களை அமலாக்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில் வெளிப்படையான சுழற்சி முறையில் பணி இட மாறுதல் செய்ய வேண்டும், கடை ஊழியர்களை மிரட்டுதல், தாக்குதல் போன்ற சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் பார் உரிமையாளரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், கள்ளத்தனமாக மது விற்கும் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு 2008ஆம் ஆண்டு அரசாணையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

 

t ma

இதில் தொமுச அகில இந்திய பொதுச் செயலாளர் சண்முகம், ஆ.ராஜவேலு, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்திரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், டாஸ்மாக் ஊழியர் சங்க (சிஐடியு) செயலாளர் க.திருச்செல்வன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில பொதுச் செயலாளர் சு.மகாதேவன், இ.முத்துப்பாண்டி, பேரரிவாளன், பாட்டாளி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ராம.முத்துக்குமார் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்டனர். 

 

இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்திரராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ’’தமிழக அரசுக்கு மிக அதிகமான வருவாய் ஈட்டிக் கொடுப்பது டாஸ்மாக் ஊழியர்கள்தான். அரசால் மிகவும் வஞ்சிக்கப்படக் கூடிய ஊழியர்களும் டாஸ்மாக் ஊழியர்கள்தான். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் காலமுறை ஊதியம் இல்லை, பணி நிரந்தரம் இல்லை. ஓய்வுபெறும் போது இந்த ஊழியர்களுக்கு எதுவுமே இல்லை.

 

முதியோர் பென்ஷனை போல 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இறந்தால் கொஞ்சம் பணம் கிடைக்கும். உயிரோடு இருந்தால் ஒன்றும் கிடைக்காது. இதுதான் டாஸ்மாக் ஊழியர்களின் நிலை. கடைகளை மூடுகிறார்கள். அதனால் உபரியாகும் தொழிலாளர்களை அவர்களுடைய கல்வித் தகுதிக்கேற்ப அரசில் உள்ள இதர பணிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். இத்தனை கடைகள் என்பதை தீர்மானம் செய்து, அந்த கடைகளுக்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு மாற்று பணியை உறுதி செய்து உத்திரவாதப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஆனால் அரசு அதை செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு இடமாற்றம் செய்யும் போது கூட எந்தவிதமான கோட்பாட்டையோ, முறையையோ பின்பற்றுவதில்லை. இதுபோன்ற ஊழல் நிறைந்த துறை வேறு எதுவும் இல்லை. கோடிக்கணக்கான ரூபாயை அதிகாரிகள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இவர்களுக்கு குறைந்தபட்ச மருத்துவ வசதி (இ.எஸ்.ஐ) கூட அமல்படுத்தப்படவில்லை. இறந்தால் மனிதாபிமான அடிப்படையில் கூட வாரிசுகளுக்கு வேலை கொடுப்பதில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பு வந்தால் அந்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கு அரசு தயாராக இல்லை. கிராஜுவிட்டி, பணிக்கொடை என்பது சட்டத்தில் இருக்கிறது. ஆனால் இவர்கள் ஓய்வுபெற்ற பின் ஒவ்வொருவராக வழக்கு தொடர்ந்துதான் வாங்க வேண்டிய நிலைமை. இப்படி மிக மோசமாக வஞ்சிக்கக் கூடிய இந்த தொழிலாளர்கள் வேறு வழியில்லாமல் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அரசு இதை புரிந்துகொள்ள வேண்டும். 11 முறை 12 முறை சம்பள உயர்வு கொடுத்தோம் என்று கூறுகிறார்கள். இப்போதும் ஊழியர்களின் ஊதியம் 7 ஆயிரம்தான், மேற்பார்வையாளர்களின் அதிகபட்ச ஊதியம் 10,500. அரசின் பல்வேறு துறைகளில் 15 ஆயிரம், 18 ஆயிரம், 24 ஆயிரம் என ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் போது உரிய தொகை வழங்க வேண்டும், மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். முக்கியமாக அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.’’
 

Next Story

பணிச்சுமை காரணமாக டான்சி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

tansi company employee  lost their life due to workload

 

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

 

கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச் சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை. 

 

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Next Story

திருச்சி பெல் அதிகாரி பணியிட மாற்றம்; ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

trichy bhel employee transfer trichy to punjab 

 

திருச்சி பெல் (BHEL) நிறுவனத்தில் சிவில் பிரிவில் பணியாற்றி வரும் தொழிற்சங்க தலைவரும், ஐஎன்டியுசியின் பொதுச் செயலாளருமான கல்யாணகுமாரை பெல் நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

 

பணியிட மாற்றம் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே முறையான அறிவிப்பு வழங்கப்பட்டு, இங்கிருந்து பணியில் விடுவிப்பதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால், தன்னை பெல் நிர்வாகம் வேண்டும் என்றே திட்டமிட்டு பணியிட மாற்றம் செய்து பழிவாங்குவதாக கல்யாணகுமார் குற்றம் சாட்டியுள்ளார். அதனைக் கண்டித்து இன்று காலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை ஐஎன்டியுசி உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கல்யாணகுமார், "நான் பெல் நிறுவனத்தை எதிர்த்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடர்ந்து உள்ளதால் என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பெல் நிர்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது. எனவே இந்த தொழிலாளர் விரோதப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மத்திய அரசின் தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்துள்ளோம்" என்று கூறினார்.