கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடிகர் விஜயின் பிரச்சாரத்தின் போது 41 அப்பாவிகள் பரிதாபமாகப் பலியானார்கள். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு, அதிர்வலைகளையும் கிளப்பியது. ஒருபக்கம் தமிழக அரசு கரூர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், மறுபுறம் த.வெ.க.வினர் கரூர் பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை. குடியரசுத் தலைவர் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்த பிறகு கடைசி ஆளாக விஜய் வீடியோ ஒன்று வெளியிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

Advertisment

அதிலும், நடந்த சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்கவும் இல்லை; பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. அதன்காரணமாக, விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் கடுமையாகக் கிளம்பின. ஒன்றுமே அறியாத தங்களின் ஆதர்ச நாயகனைப் பார்க்க மட்டுமே கூடிய கூட்டத்தில் 41 அப்பாவி உயிர்களைப் பறிகொடுத்துவிட்டு, அவர்களது குடும்பத்தினர் தற்போதுவரை மீள முடியாத துயரத்தில் தவிக்கின்றனர்.

Advertisment

ஆனால், சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும், விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியதையடுத்து, அக். 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைத் தவெக நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். அக். 6, 7 ஆம் தேதிகளில் தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து வீடியோ கால் மூலம் விஜய் அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வைத்தார்.

இதனிடையே இது தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் த.வெ.கவிற்கு எதிராகப் பல விமர்சனங்களைத் தெரிவித்து ஒரு அரசியல் கட்சி இப்படித்தான் இருக்குமா என்று கேள்வி எழுப்பியது. அத்துடன் ஐஜி அஸ்ரா கர்கே தலைமையில் எஸ்.ஐ.டி.யையும் நியமித்தது. ஆனால், சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்று த.வெ.க. உச்சநீதிமன்றம் வரை சென்று அதில் வெற்றியும் கண்டது. தற்போது கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இது ஒரு புறமிருக்க, விஜய் எப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பார் என்ற கேள்வி தவெகவினரே கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒரு வழியாக மயான அமைதியில் இருந்து வெளியே வந்த தவெக தலைமை, கரூர் மக்களை விஜய் சந்திக்க இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டது. எப்படிச் சந்திக்கப் போகிறார்? வீடுவீடாகச் செல்லப் போகிறாரா? அல்லது கரூரில் பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் சேர்த்து ஒரே மண்டபத்தில் வைத்துப் பார்க்கப் போகிறாரா? என்று பல கேள்விகள் எழுந்தன. ஆனால், வழக்கம்போல் பனையூர் பார்முலாவைப் பயன்படுத்தி... ‘நான் வர மாட்டேன், பாதிக்கப்பட்ட மக்களை என் இடத்திற்குக் கூட்டிவாருங்கள்..’ என்று கட்சி நிர்வாகிகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சென்னை மகாபலிபுரம் அழைத்து வந்து விஜய் சந்தித்து ஆறுதல் கூற ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி உயிரிழந்த 38 பேரின் குடும்பத்தில் 35 குடும்பம் மட்டும் சென்னை வந்து விஜயைப் பார்க்கச் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் மற்ற மூன்று குடும்பத்தினர் 30 நாள் காரியம் முடிவதற்குள் வெளியூர்களுக்கு வரமாட்டோம் என்று கூறி விஜயின் சந்திப்பை நிராகரித்தனர். பின்னர் கரூரில் இருந்து ஐந்து சொகுசு பேருந்துகள் மூலம் உயிரிழந்த 35 பேரின் குடும்பங்களைச் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்திற்குப் பாதுகாப்பாக 26 ஆம் தேதி அழைத்து வரப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில், பாதிக்கப்பட்டவர்களைத் தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து இன்று(27.10,2025)ஆறுதல் கூறினார். ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனி அறைகளில் சந்தித்து, அவர்களின் துக்கத்தில் பங்கெடுத்து, ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்த விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவுகள், வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றைத் த.வெ.கவே ஏற்கும் என்று உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இங்கு அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்; நிச்சயம் உங்களை கரூரில் வந்து சந்திப்பேன் என்று கண்ணீர் மல்கக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடந்து சரியாக இன்றுடன் ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சென்னைக்கு அழைத்து ஆறுதல் கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் இடத்தில் சென்று சந்திப்பதுதான் மரபு. ஆனால், த.வெ.க தலைவர் விஜயோ, அவர்களைத் தனது இடத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறுவது என்ன மாதிரியான மன நிலை என்று அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

வழக்கமான விளம்பரப் பேனர்களோ, கொடிகளோ இல்லாமல், பலத்த பாதுகாப்புடன் இந்த நிகழ்வு நடந்தது. குறிப்பிட்ட த.வெ.க நிர்வாகிகளைத் தவிர பத்திரிகையாளர்கள் உள்பட பலருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பவுன்சர்கள் குவிக்கப்பட்டு அடையாள அட்டை சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக கட்சியின் பொருளாளரே பவுன்சர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர் யார் என்று பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.