தூத்துக்குடி மாநகரில் 3வது மைல் பகுதியில் இருக்கிறது அரசு பாலிடெக்னிக் கல்லூரி. மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். அங்கே முதலாம் ஆண்டு பயின்று வருபவர் மாணவர் வெங்கடேஷ் (வயது 18) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவர் வெங்கடேஷ் தனது நண்பருடன் தனது சொந்த ஊரில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சென்றிருக்கிறார். அதுசமயம் அவருடைய நண்பர் ஒருவர் திருவிழாவில் பயன்படுத்தப்படும் திரியுடன் கூடிய ஒரு நாட்டு வெடியை வெங்கடேசிடம் கொடுத்திருக்கிறாராம். அதை வாங்கி ஒரு பையில் வைத்திருந்த வெங்கடேஷ் (ஆக. 12 அன்று) காலையில் கல்லூரி வரும்போது அந்த நாட்டு வெடியை புத்தகங்கள் அடங்கியுள்ள தனது பையில் வைத்துக்கொண்டு கல்லூரிக்கு வந்ததாகத் தெரிகிறது. 

Advertisment

வெங்கடேஷ் அந்தப் பையை தனது வகுப்பறையில் வைத்திருக்கிறார். மேலும் தனது நண்பர்களிடம் அந்தப் பையை யாரும் தொட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். இதற்கிடையே மதிய உணவு இடைவேளையின் போது அவருடன் பயிலும் சக நண்பர்களான தூத்துக்குடியை சேர்ந்த மாணவன் மாதவன்(வயது 18), திரு.வி.க. நகரைச் சேர்ந்த முரளி கார்த்திக் (வயது 18) இருவரும் பையிலிருந்த நாட்டு வெடியை கையில் எடுத்து விளையாடியதாகச் சொல்லப்படுகிறது. அது சமயம் அவர்கள் அந்த வெடியிலிருந்த திரியை இழுத்திருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக அடுத்த சில நொடிகளில் அந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியிருக்கிறது. அந்த வெடிப்பில் மாணவன் மாதவனின் வலது கையிலும் முரளி கார்த்திக் கண் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. 

இதனால் துடித்த மாணவர்கள் வலி தாங்காமல் அலறியிருக்கிறார்கள். இதைக்கண்டு பதறிய கல்லூரி ஆசிரியர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென் பாகம் காவல் ஆய்வாளர் (பொ.) பாஸ்கரன் சம்பவ இடம் வந்து விசாரணையை நடத்தியிருக்கிறார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார் ஆய்வாளர். கல்லூரியில் நடந்த இந்த சம்பவத்தால் மாணவர்கள் இருவர் காயமடைந்தது தூத்துக்குடி நகரை பதைபதைக்க வைத்திருக்கிறது. 

tuti-govt-polytechinc-ins

Advertisment

வெடி என்று தெரிந்தும் மாணவர் வெங்கடேஷ் தன் ஊரிலிருந்து அதைத் தன் பையில் வைத்துக்கொண்டு கல்லூரிக்கு ஏன் வர வேண்டும். எதற்காக கொண்டு வந்தார். தனது நண்பர்களிடம் இந்த பையை தொட வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார். அங்கு வெடித்தது வெடியா அல்லது நாட்டு வெடிகுண்டா, பாதிக்கப்பட்ட மாணவர்கள் அந்த வெடியின் திரியை இழுத்த அடுத்த சில நொடிகளில் அது பயங்கரமாக வெடித்திருக்கிறார். இது கேள்விப்படாத ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் தயாரிக்கப்படும் அனைத்து வெடிகளும் தீ வைத்தால் தான் வெடிக்குமே தவிர திரியை உறுவியவுடன் வெடிப்பதில்லை. அது போன்ற தயாரிப்பும் வெடிகள் தயாரிப்பு தொழிலில் கிடையாது. அப்படியிருக்க இது போன்ற கேள்விகள் தீர்க்கப்படாமல் புதிராகவே இருக்கிறது என்கிற சர்ச்சையும் பரவலாக நிலவிய நிலையில். நாம் இதுகுறித்து பல தரப்பினரிடம் விசாரித்த போது. மாணவர் வெங்கடேஷ் மாவட்டத்தின் ஏரல் பகுதியிலுள்ள ஆத்தூரைச் சேர்ந்தவர். அவரது தந்தை கோவில் திருவிழா காலத்தில் பலதரமான வெடிகள் தயார் செய்து சப்ளை செய்து வருபவராம். 

எந்த ஒரு வெடி பொருளுமே தீ வைத்தால் ஒழிய வெடிக்க வாய்ப்பில்லை. ஆனால் மாணவன் கொண்டு வந்த வெடி சக்தி வாய்ந்ததாகத் தெரிகிறது. மேலும் அதன் திரியை உறுவியவுடன் பயங்கரமாக வெடித்திருக்கிறது. காயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வகைத் தொழில்நுட்ப தயாரிப்பு பட்டாசு ரகத் தயாரிப்புத் தொழிலில் கிடையவே கிடையாது என்கிறார்கள். தென்மாவட்டத்தின் விவசாயப் பகுதிகளில் பயிர்களை அழிக்க வரும் பன்றிகளையும் நரிக் கூட்டத்தையும் கூட விரட்டுவதற்கு சிறு சிறு கூர்மையான ஆணிகள், கண்ணாடித் துண்டுகளைக் கொண்ட வேக்கம் (VACCUM) நாட்டு வெடிகுண்டு தயாரிப்புகள் தான் புழக்கத்திலிருப்பதாகச் சொல்லுபவர்களே அதை வீசி எரியும் போது மோதுகிற வேகத்தில் தான் அவைகள் கூட வெடிக்கின்றன. அது போன்ற தயாரிப்பில் கூட திரியை உறுவி எரிந்தால் வெடிக்கக்கூடிய தொழில்நுட்பம் கூட கிடையாது. அதனை அறிந்தவர்களும் இல்லை. 

tuti-govt-polytechinc-ins-1

Advertisment

திரியை உறுவிய அடுத்த கணம் வெடிக்கிற குண்டு மற்றும் வெடிகள் சாதரண தயாரிப்பாளர்களுக்கே சாத்தியமில்லாதவை. திறமையான தொழில்நுட்பம் தெரிந்தவர்களால் மட்டுமே இதுபோன்ற தயாரிப்புகள் சாத்தியப்படும். இதுபோன்ற ரகங்கள் இங்கே இதுவரையிலும் புழங்கியதில்லை. மேலும் திரியை உறுவினால் வெடிக்கிற வெடி சம்பந்தப்பட்ட ரகங்கள் அரசு பாதுகாப்பு தளங்களில் மட்டுமே இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர கல்லூரியில் வெடித்தது போன்ற சக்தி வாய்ந்த வெடியின், இப்படி சகஜமான நடமாட்டம் பற்றி கேள்விப்பட்டதில்லை என்றும் சொல்கிறார்கள். இதுபோன்ற சந்தேகங்கள் உரிய துறையினரால் தெளிவாக்கப்படவில்லை என்பதும் பரவலான பேச்சு. 

தூத்துக்குடி டவுண் ஏ.எஸ்.பி.யான மதனிடம் நாம் இதுகுறித்து தெரிவித்து பேசிய போது, மாணவர்கள் அந்த வெடியை தரையில் தேய்த்திருக்கிறார்கள். அதில் வெடித்திருக்கிறது. என்றாலும் இந்த வெடிப்பு விவகாரத்தை நாங்கள் சீரியஸாகவே விசாரித்து வருகிறோம் என்றார்.வெடிகுண்டு பிரிவு யூனிட்டைச் சேர்ந்த அதிகாரியிடம் இதுகுறித்து பேசிய போது, இரண்டு மாணவர்களும் அந்த வெடியை வைத்து விளையாடிக்கொண்டிருந்த நேரம் வெடித்ததாகச் சொல்லுகிறார்கள். ஆனாலும் நாங்கள் இந்த வெடிப்பு சம்பவத்தை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். முடிவில் தெரிந்து விடும் என்றார். கல்லூரியில் நடந்த இந்த வெடி வெடிப்பு பதைபதைப்பு சம்பவம் சாதாரணமானதில்லை. அதன் அடி முதல் நுனி வரை ஆராயப்பட வேண்டிய விஷயமாகியிருக்கிறது.