இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்குத்திருட்டில் ஈடுபட்டு வருகிறது. பீகாரில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 65லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது கண்டித்து அங்கு ராகுல் காந்தி 21 நாட்கள் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதிலும் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குதிருட்டில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க.வைக் கண்டித்து காங். சார்பில் பேரணி மாநாடு நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் நெல்லையிலும், வாக்குத்திருட்டை தடுப்போம், வாக்குரிமையை மீட்டுத் தருவோம் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மாநாடு நடந்தது.
மாநாடு அரிபுரியிலிருந்த நெல்லை மாவட்ட காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது மாவட்டத்தில் நிலவுகிற காங்கிரசாரின் மனப்புழுக்கமும் புகைச்சலும் வெளிப்பட்டது. நம்மிடம் பேசிய நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரசின் நிர்வாகிகள் சிலரோ நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவரான ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் ஐந்து மாதங்கள் தாண்டி விட்டன. இதுவரையிலும் சி.பி.சி.ஐ.டி.யினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கொலையா தற்கொலையா என எந்த ஒரு முடிவையும் அவர்களால் தெளிவுபடுத்தமுடியவில்லை. கிட்டத்தட்ட அவர்களின் புலன் விசாரணை முடிந்து விட்டது. ஜெயக்குமார் வழக்கு கண்டுபிடிக்கபட வேண்டும், குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும் என்று காங். தலைவருக்கும் இந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரிடமும் எத்தனையோ முறை வலியுறுத்தியும் அவர்கள் சட்டை செய்யவில்லை. தமிழக காங். தலைவரும் இந்த வழக்கு குறித்து கூட்டணி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
ஜெயகுமார் கொலை வழக்கு கண்டுபிடிக்கப்படாதது நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரசார் மத்தியில் மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டம் முழுவதிலும் கடும் அதிருப்தியைக் கிளப்பியிருக்கிறது. தவிர அவர் மறைவிற்கு பின்பு நெல்லை கி. மாவட்ட காங். தலைவரும் நியமிக்கப்படவில்லை. மாவட்ட காங். தலைமையில்லாமல் எப்படி செயல்படும். இதுபோன்ற மாநாடு பணிகளை அம்மாவட்டத்தில் யார் ஒருங்கிணைப்பது. அதுதான் எங்களின் மனப்பபுழுப்பமும் புகைச்சலுமாக இருக்கிறது. இன்னும் 6 மாதங்களில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலிலிருக்க மாவட்ட தலைவரில்லாமல் எப்படி பணிகளை மேற்கொள்வது. கட்சித் தலைமைக்கு இவை அனைத்தும் தெரிந்தும் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. தலைக்குமேலே தேர்தல் இருக்கு. அப்ப தேர்தல் களத்தில எதிரொலிக்கிற ஜெயக்குமார் கொலைக் கேசுக்கு காங்கிரஸ் என்ன பதில் சொல்லப்போகிறது என்கிறார்கள்.
மாநாட்டின் பொருட்டு இங்கு வந்த மாநில காங். தலைவரான செல்வப் பெருந்தகை குமரி மாவட்ட காங். நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது உங்களுக்கு 4 எம்.எல்.ஏ. 2 எம்.பி. என்றவர் பக்கத்து மாவட்டத்த நீங்க ஆக்ரமிக்கீக என்று சொன்னவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவரை நியமிக்கும் பொறுப்பை குமரி மாவட்ட எம்.எல்.ஏ. மற்றும் அம்மாவட்டம் சார்ந்த நெல்லை எம்.பி.யான. ராபர்ட் புரூசிடம் ஒப்படைத்திருப்பது கிழக்கு மாவட்ட காங்கரசாரிடையே கடும் அதிருப்தியைக் கிளப்பியிருக்கிறது. நெல்லை மாவட்ட தலைவர் நியமனப் பொறுப்பை ஏன் குமரி மாவட்டக் காரர்களிடம் ஒப்படைக்கவேண்டும். நெல்லை கி. மாவட்டத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தினால் நாமெல்லாம் எங்கே போவது. உள்ளூர் கட்சிக் காரர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை, நாங்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற மனப் புழுக்கத்திலும் குமைச்சலிலும் இருக்கிறார்கள் அம்மாவட்ட காங்கிரசார்.
கி. மாவட்ட காங்கிரசாரின் கொதிப்பையும் குமைச்சலையும் அறிந்த தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை இந்த அதிருப்தியும் புழுக்கமும் இந்த நேரத்தில் வெடித்துவிடக் கூடாது. மாநாட்டில் சலசலப்பும் கிளம்பிவிடக்கூடாது. இந்த விவகாரம் டெல்லியை எட்டிவிடக் கூடாது என்பதால் அதற்கு அணை போட்ட செல்வப் பெருந்தகை, நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு ஓராண்டுக்கு மேல் கடந்தும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது வருத்தமளிக்கிறது. ஆனால் தமிழ்நாடு காவல் துறையின் மீது நம்பிக்கையுள்ளது. விரைவில் சரியான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கட்சிக்காரர்களை அப்போதைக்கு சமாதானப்படுத்தியிருக்கிறார். அதே வேளையில் நெல்லை கி. மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் படுகொலை விசாரிக்கப்படுவதில் அ.தி.மு.க. ஆர்வம் காட்டுகிறதே என நக்கீரனில் ராங்க்கால் பகுதியில் வந்த செய்தியால் பரபரப்பான உளவுத்துறை அதுபற்றிய மேல் விவரங்களை பல்வேறு மட்டங்களில் விசாரித்து வருவது கி. மாவட்டத்தில் பரபர விஷயமாகியிருக்கிறது.
மாநாட்டின் பொறுப்புகள் அனைத்தும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான வசூலும் தீவிரமாகியிருக்கிறதாம். மாவட்ட எம்.பி.யின் ராமர் பெயரைக் கொண்ட உதவியாளரும், துரையான அவரது தரப்பு இருவருமே வசூலில் ஈடுபட்டனராம். வசூலிக்கப்பட்டதில் பாதி தொகைதான் அவரிடம் போய் சேர்ந்திருப்பதாக காங்கிராசாரிடம் பேச்சாகியிருக்கிறது.
தமிழக காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள், வரும் தேர்தலில் சீட் வாங்க வேண்டும் என்ற தீவிரத்தில் இந்த மாநாட்டிற்கு தங்கள் பகுதியிலிருந்தெல்லாம் தங்களின் பலத்தை காட்ட ஆட்களைத்திரட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். வடமாவட்டமான வாணியம்பாடியிலிருந்தெல்லாம் கூட்டம் திரட்டப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் கூட்டமா என்று திரும்பிப்பார்க்கிற அளவுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரட்டப்படிருந்தார்கள் என்கிறார்கள் தவிர தமிழக காங் தலைவரான செல்வப் பெருந்தகைக்கு நெருக்கடியான சூழல் தன் இருப்பைத்தக்க வைத்துக் கொள்வதற்காகவே இப்படி மெனக்கெட்டிருக்கிறார், நெல்லை மாநாடு பேசு பொருளாகியிருக்கிறது என்கிறார்கள்.
ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட காங். முன்னாள் தலைவரான கே.எஸ்.அழகிரி, டாக்டர் செல்வகுமார் எம்.பி.யான மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
தமிழக காங். மேலிட பொறுப்பாளரான கிரிஷ் ஜோடங்கர் அகில இந்திய காங் கமிட்டி செயலாளரான சூரஞ் எம்.என். ஹெக்டே, அகில இந்திய காங்கிரசின் ஊடக பிரிவு தலைவரான பவன்கேரா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தார்கள்.
மாநாட்டில் பேசியவர்கள் வாக்குத்திருட்டின் வீரியம் பற்றியும் அதன் ஆபத்தான விளைவுகளையும் பற்றி விரிவாக ஆதாரப்பூர்வாமாகப் பேசப்பட்டது மக்களின் கவனத்தையும், சிந்தனையையும் ஈர்த்தது. குறிப்பாகப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரத்தின் வாக்குத்திருட்டு பற்றிய தரவு விபரப் பேச்சுக்கள். திரண்ட கூட்டத்தில் ஊடுருவியிருப்பது தான் ஹைலைட்டான விஷயம் அவரது பேச்சே ஹாட் டாபிக்காகியிருக்கிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியால் வாக்குத் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது தி.மு.க. அ.தி.மு.க. என 2 அணி இருந்தால் வாக்குத் திருட்டு நடக்காது ஆனால் தற்போது அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க. புகுந்துள்ளது. கர்னாடகா மாநிலம் மகாதேவபுரா நாடாஞமன்ற தொகுதியின் ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் முன்னணி என தேர்தல் ஆணையம் கூறியதை ஆராய்ந்து தான் ராகுல் காந்தி வாக்குத்திருட்டு நடந்ததை வெளிக் கொண்டு வந்தார். அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பலருக்கு ஒரு எழுத்தில பெயர் இருந்தது. பலருக்கு கதவு எண் 0 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் மட்டும் 120 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். தமிழ் நாட்டில் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு நீங்கள் உதவவேண்டும் எனக் கேட்டுக் கொண்ட ப.சிதம்பரம் ஆமை புகுந்த வீடும், அமினா புகுந்த வீடம் உருப்படாது. என்று தமிழநாட்டில் ஒரு பழமொழி உண்டு என்று சொன்ன போது கூட்டத்தில் ஆரவாரம். காங் தலைவரான செல்வப் பெருந்தகை வாக்குத்திருட்டு மூலமே பா.ஜ.க. 3 முறை ஆட்சியை பிடித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
தமிழக மேலிட பார்வையாளரான கிரிஷ் ஜோடங்கரோ, இந்த சம்பவங்களையும் உங்களின் உணர்வுகளையும் காங் மேலிடத் தலைமை வரை கொண்டு செல்வேன் என்றார்.தமிழகத்தில் இனி காங்கிரசின் கூட்டணி யில்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று காங்கிரசாரை உசுப்பேற்றினார் பீட்டர் அல்போன்ஸ். காங்கிரசின் தேசிய செயலாளளரும் கேரள மாநில காங் பொறுப்பாளருமான அன்பழகனோ, நெல்லை மாவட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். இங்கு மாவட்ட காங், தலைவர் கொலை செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களாகியும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படாதது வருத்தமளிக்கிறது. அந்தக் கயவர்களைக் கைது செய்ய போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பவத்தின் வீரியத்தை அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
நெல்லை காங் மாநாடு வாக்குத்திருட்டு பற்றியவைகளை தெளிவுபடுத்திய வேளையில் அம்மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சியினரின் உள்ளார்ந்த புகைச்சலும், புழுக்கமும் சேர்ந்தே வெளிப்பட்டிருக்கிறது.