'The month of Thai is over' - OPS supporters are in distress Photograph: (ops)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் எந்த பக்கம்? என்ன முடிவு? என தெரிவிக்காமல் ஊசலாடி வருகின்றனர்.
தேமுதிகவை அமைச்சர் ராஜகண்ணப்பன் ''அதெல்லாம் ஒரு கட்சியா? பெரிய கட்சி பற்றி பேசுங்க'' என செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இருந்த நிலையில் அதற்கு செய்தியாளர் சந்திப்பில் ''யார் என்ன பேசினாலும் கவலையில்லை. கண்ணியம் உள்ள கட்சி தேமுதிக'' என பதிலடி கொடுத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த். நிலைமை இப்படி இருக்க மறுபுறம் ஓபிஎஸ் தரப்பும் கூட்டணி விவகாரத்தில் முடிவெடுக்காமல் ஜவ்வாக இழுத்து வருகிறது.
முன்னாள் முதல்வரான ஓபிஎஸ் ஜனவரி தொடக்கத்தில் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என தெரிவித்த நிலையில் இன்றுடன் அவர் சொன்ன தை மாதமும் முடிந்துள்ளது. எடப்பாடியுடன் காய் விட்டிருந்த டி.டி.வி.தினகரன் கூட பழம் சொல்லி ஏன்டிஏ கூட்டணியில் ரீ என்ட்ரி கொடுத்துவிட்ட நிலையில் ஓபிஎஸ் மீதான பாராமுகத்திற்கு அதிமுக காரணமா? அல்லது பாஜக காரணமா? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஓபிஎஸ் அதிமுக இணைவு பற்றியே எப்போதும் பேசுவதால் தான் அவர் புறக்கணிக்கப்படுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவருக்கும் இடமே இல்லை என எடப்பாடி திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் என்டிஏ கூட்டணியில் ஆவது இடம் கிடைக்குமா என்ற நிலையே ஓபிஎஸ்க்கு ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஓபிஎஸ்-ன் இந்த தொடர் மவுனம் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே ஒருவித தவிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடன் இருந்து ஆதரித்தவர்களும் சிதறிய நிலையில் ஓபிஎஸ் கையில் இருப்பது நான்கே நான்கு முடிவுகள் தான் ஒன்று துணிந்து இறங்கி அவரது ஆதரவாளர்களை திரட்டி தனியாக தேர்தலில் களம் காண்பது அல்லது மார்ச் ஒன்றாம் தேதி மதுரை வரும் மோடியை சந்தித்து என்டிஏவில் இடம் பிடிக்க அச்சாரம் போடுவது. சசிகலாவுடன் இணைந்தது தென் மாவட்டங்களில் மட்டுமாவது களம் காண்பது, அல்லது விஜய் உடன் கூட்டணி வைப்பது. இதில் எதைத்தான் ஓபிஎஸ் டிக் செய்வார் அல்லது முயற்சி செய்வார் என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.
Follow Us