'முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?' என்பது எப்படி விடை தெரியாத கேள்வியோ அதேபோல் சமீபத்தில் 'முட்டையை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?' என்ற விடை தெரியாத கேள்வி சமூக வலைத்தள பக்ககங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

எளிதாக கிடைக்கக்கூடிய போஷாக்கு நிறைந்த உணவுகளில் ஒன்று முட்டை. அதுவும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளின் பட்டியலில் முட்டை அத்தியாவசியமான ஒன்று. முட்டை சைவ உணவா அசைவ உணவா என்ற கேள்விக்கு விடையில்லை என்றாலும் சத்துக்கள் நிறைந்த உணவு என்பதில் மாற்றுக் கருத்தில்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட முட்டையை சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் என்ற தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உணவு தர சோதனைகளை செய்து வெளியிட்டு வரும் 'ட்ரஸ்ட்ஃபேய்ட்'  என்ற யூடியூப் சேனல் 'எக்கோஸ்' என்ற பிரபல நிறுவனம் தயார் செய்யும் முட்டைகளில்  நைட்ரோஃபுரான் (Nitrofuran) என்ற ஆன்டிபயாடிக் கலந்திருப்பதாக தெரிவித்திருந்தது. எக்கோஸ் நிறுவனம் இந்தியாவில் மிகவும் பீரிமியமான முட்டைகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில் அதன் தயாரிப்பின் மீது ஏற்பட்ட இந்த சந்தேகம் பொத்தாம் பொதுவாக முட்டை சாப்பிடுவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உணவிற்காக கோழிகளை வளர்த்து சந்தைப்படுத்தும் போது அவைகளுக்கு நோய்வராமல் தடுக்கவும், குறுகிய காலத்தில் இறைச்சியின் எடையை கூட்டுவதற்கும் ஆன்டிபயாடிக் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அதில் நைட்ரோஃபுரான் (Nitrofuran) என்ற ஆன்டிபயாடிக்கை  பயன்படுத்த கூடாது என்ற தடை இருக்கிறது. பொதுவாக ஆன்டிபயாடிக் என்பது உடலில் உள்ள கிருமிகளை கொள்ளும். ஆனால் நைட்ரோஃபுரான் (Nitrofuran) என்ற ஆன்டிபயாடிக் செல்லுக்கு உள்ளே உள்ள நியூக்ளியஸ் உடன் இருக்கும் மரபணுவை மாற்றும் தன்மை கொண்டது எனக் கூறப்படுகிறது. நாளடைவில் அந்த மரபணுமாற்றம் நீடித்தால் புற்றுநோய் வர சாத்தியக்கூறு உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisment

138
EGG Photograph: (FOOD)

இதனால் கோழிப்பண்ணைகளில் நைட்ரோஃபுரான் (Nitrofuran) என்ற ஆன்டிபயாடிக் மருந்தை பயன்படுத்த தேசிய சுகாதாரத்துறை தடைவிதித்துள்ளது. இந்த சர்ச்சை காரணமாக தமிழகத்தில் முட்டைகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாமக்கல் பகுதியில் சோதனை செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் எழுந்து வருகிறது. அரசு மட்டுமல்ல முட்டை உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தாங்களாகவே தங்களை நிரூபித்துக் கொள்ளும் வகையில் முட்டைகளை பரிசோதனைக்கு அனுப்பி தங்களது முட்டையில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரான் (Nitrofuran) என்ற ஆன்டிபயாடிக் இல்லை என்பதை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மட்டுமே முட்டை மீது மக்களுக்கு உள்ள சந்தேகம் நீங்கும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

அண்மையில் சில நாட்களாக நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை, விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில் முட்டை மீதான இந்த சர்ச்சை கோழிப்பண்ணை வைத்திருப்போர் மற்றும் முட்டை வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரசு சார்பில் பண்ணை உரிமையாளர்களுக்கு உதவி புரியும் வகையில் நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் முட்டை மாதிரிகளை பண்ணைகளில் இருந்து சேகரித்து ஆய்வு செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க (TNFPA) தலைவர் சிங்கராஜ் பேசுகையில், ''நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டைகளும் முட்டை பவுடர்களும் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. எவ்விதமான நச்சுப் பொருளும் முட்டையில் இல்லை என சான்று பெற்ற பின்னரே முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பொதுமக்கள் பயமின்றி முட்டைகளை வாங்கி சாப்பிடலாம்.

139
EGG Photograph: (FOOD)

சில தினங்களாக முட்டையை சாப்பிடக் கூடாது என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.நைட்ரோஃபுரான் (Nitrofuran) இந்தியாவில் வந்து தடை செய்யப்பட்ட ஒன்று. கோழி பண்ணைக்காரர்களுக்கு அந்த மருந்தை பற்றி தெரியாது. யாரும் யூஸ் பண்றதே கிடையாது. வெட்னரி டாக்டர்ஸ் அந்த மருந்தை பரிந்துரைப்பது இல்லை. நம்ம தமிழ்நாட்டில் இருந்து முட்டை ஏற்றுமதி நல்ல அளவுக்கு போகிறது. முட்டை பவுடர் ஏற்றுமதி பல கோடிகளுக்கு செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த சர்ச்சை காரணமாக முட்டையை ஆய்வு செய்ய கொடுத்திருக்கிறோம். அந்த ஆய்வின் முடிவுகளை உங்களுக்கு விரைவில் வெளிப்படுத்துகிறோம். முட்டை சாப்பிடுவதில் எந்த விதமான பயமும் வேண்டாம் என்பதை ஆணித்தரமாக சொல்கிறோம்'' என்றார். 

அண்மையில் இதேபோல் தர்பூசணி பழம் சர்ச்சையில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.