இந்தியாவின் தலைநகரான டெல்லியின் தெற்கு வசந்த் கஞ்ஜ் பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஆசிரமம். இந்த ஆசிரமத்தின் தலைவராக ஸ்வாமி சைதான்யானந்த சரஸ்வதி இருந்து வந்தார். இந்த ஆசிரமத்திற்கு உட்பட்டு ஸ்ரீ ஷாரதா இந்தியன் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் என்ற கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கல்வி நிறுவனத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் அடிப்படையில் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில், இந்தத் திட்டத்தில் கல்வி கற்று வந்த 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகப் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும், ஆசிரமத் தலைவராக இருந்த ஸ்வாமி சைதான்யானந்த சரஸ்வதி ஆபாசமாகப் பேசுவது, வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகள் அனுப்புவது மற்றும் உடல் ரீதியாகக் கட்டாயப்படுத்தி தொடர்பு கொள்வது என்று பல துன்புறுத்தல்களைக் கொடுத்ததாகக் கூறியுள்ளனர்.

அத்துடன், மூன்று பெண் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் தங்களைப் பிளாக்மெயில் செய்ததாகவும், ஸ்வாமி சைதான்யானந்த சரஸ்வதியின் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமாக மாறியதையடுத்து, டெல்லி தென்மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையர் அமித் கோயல் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில், 30-க்கு மேற்பட்ட மாணவிகளிடம் அறிக்கைகள் பெறப்பட்டதில், 17 மாணவிகள் ஸ்வாமி சைதான்யானந்த சரஸ்வதிக்கு எதிராகக் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும், விடுதி வார்டன்கள் மற்றும் சில பெண் நிர்வாகிகள் மாணவிகளை ஸ்வாமி சைதான்யானந்த சரஸ்வதியிடம் அறிமுகப்படுத்தியுள்ளனர் என்றும், அவர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி பாலியல் சுரண்டல்கள் அரங்கேறியுள்ளன என்றும் கூறப்படுகிறது.

ஸ்வாமி சைதான்யானந்த சரஸ்வதி சர்ச்சையில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறையல்ல; கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் மீது டெஃபென்ஸ் காலனியில் மோசடி மற்றும் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு வசந்த் கஞ்ஜில் ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இப்படித் தொடர்ச்சியாக ஸ்வாமி சைதான்யானந்த சரஸ்வதி மீது பாலியல் புகார்கள் வந்தவண்ணம் இருந்துள்ளன.

Advertisment

1

இந்நிலையில், தற்போது 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் அவர் மீது பாலியல் குற்றம் சுமத்தியுள்ளனர். அதன்பேரில், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல வழக்குகளைப் பதிவு செய்துள்ள போலீஸார், ஏற்கனவே உள்ள வழக்குகளையும் தூசு தட்டி எடுத்துள்ளனர். இதனிடையே, தலைமறைவாக இருக்கும் ஸ்வாமி சைதான்யானந்த சரஸ்வதியைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். அதே சமயம், அவர் வெளிநாடு தப்பிச் செல்லாதவாறு 'லுக்-அவுட் நோட்டீஸ்' வெளியிடப்பட்டுள்ளது.  ஆசிரமத்தில் அவர் தங்கியிருந்த அறையைச் சோதனை செய்தபோது, ஹார்ட் டிஸ்க் மற்றும் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த வோல்வோ காரைப் பறிமுதல் செய்த போலீஸார், போலி டிப்ளமாடிக் நம்பர் பிளேட்டுகளையும் கண்டுபிடித்துள்ளனர். இதனடிப்படையில், போலீஸார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட ஆசிரமம், “ஸ்வாமி சைதான்யானந்த சரஸ்வதி சட்டவிரோத, தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதனால், அவரைப் பொறுப்புகளில் இருந்து நீக்குவதுடன், அவருடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துள்ளோம். அவரது சட்டவிரோத செயல்கள் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்,” என்று விளக்கமளித்துள்ளது.

தலைமறைவாக இருக்கும் ஸ்வாமி சைதான்யானந்த சரஸ்வதியைத் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆன்மீகவாதி போர்வையில் அப்பாவி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் இதுபோன்ற சாமியார்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisment