கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி, 2024 மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கேரளாவில் பா.ஜ.க. சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் என்பதால், அவர் மீது டெல்லி பாஜக தலைமை தனி கவணம் செலுத்தியது. அதன் வெகுமதியாக, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுரேஷ் கோபியை பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக்கி அழகு பார்த்தது. சுரேஷ் கோபியின் இந்த வளர்ச்சி, அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
மத்திய இணை அமைச்சராகப் பணியாற்றி வந்தாலும், சுரேஷ் கோபி தனது சினிமா வாழ்கையை கைவிடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்கு பா.ஜ.க.வின் மேலிடத்தில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததாகத் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, அவர் நடிக்கவிருந்த ‘ஒட்டக்கொம்பன்’ என்ற திரைப்படத்திற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அனுமதி கோரியதாகவும், அந்தக் கோரிக்கையை அமித் ஷா நிராகரித்து, அவரது கடிதத்தைத் தூக்கி எறிந்ததாகவும் சுரேஷ் கோபி ஒரு பொது நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர், “சினிமா எனது ஆர்வம். நடிப்பதைத் தடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டால், இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகவும் தயார்,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்த கருத்து கேரள பாஜகவில் சல்சலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தான் சுரேஷ் கோபி தனது மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். கேரளாவின் கண்ணூரில், ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் சி. சதானந்தன் மாஸ்டருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி, “என்னைப் பதவியிலிருந்து நீக்கிய பிறகு, சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று மனதாரக் கோருகிறேன். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என்று நம்புகிறேன். பா.ஜ.க.வின் இளைய உறுப்பினராக இருந்தபோதிலும், நான் அமைச்சராக நியமிக்கப்பட்டேன். இது, கேரளாவிலிருந்து பா.ஜ.க.வின் முதல் மக்களவை எம்.பி.யாக மக்களின் ஆணையைப் பெற்றதன் விளைவாகக்கூட இருக்கலாம்,” என்று கூறினார்.
மேலும், அவர் தனது பேச்சில், “தேர்தலுக்கு முன்பே நான் அமைச்சர் பதவி விரும்பவில்லை. நடிப்பில் தொடர்ந்து ஈடுபட விரும்பினேன். எனது திரைப்பட வாழ்க்கையை விட்டுவிட்டு அமைச்சராக வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. நடிப்பு எனக்கு வருமானத்தைத் தருகிறது. அந்த வருவாயைக் கொண்டு எனது குடும்பத்தையும், மற்றவர்களையும் ஆதரிக்க விரும்புகிறேன். ஆனால், சமீப காலங்களில் எனது வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது,” என்று தெரிவித்தார்.
சுரேஷ் கோபி, 1980களில் மலையாளத் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது சமூக சேவைகளும், குறிப்பாக திருச்சூர் மக்களுக்காக அவர் செய்த நலத்திட்ட உதவிகள், அவருக்கு அரசியல் ஆதரவைப் பெற்றுத் தந்தன. 2016 முதல் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட்டு வந்த சுரேஷ் கோபி, 2016-ல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தற்போது, அவரது அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற முடிவு, கேரளாவில் பா.ஜ.க வகுத்து வைத்துள்ள அரசியல் உத்திகளைப் பாதிக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.