நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஏற்படும் நாய் கடி சம்பவங்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் ரேபீஸ் (rabies) நோயால் உயிரிழக்கின்றனர், இதில் 36% குழந்தைகள் என்கிறது உலக சுகாதார அமைப்பு.
குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் தெருநாய்கள் மக்கள் புழக்கத்தில் இருக்கும் இடங்களில் திரிந்து, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கடிக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த, தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு நாய் பிரியர்கள் மற்றும் விலங்கு உரிமைகள் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இதுகுறித்து பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து, தெருநாய்களுக்கு திறந்தவெளியில் உணவு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாக, நகர்புற திட்டமிடலில் நாய்களுக்கான பாதுகாப்பான இடங்களை அமைப்பது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகள் அளிப்பது போன்றவை அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து பல இடங்களில் இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கேரளாவில் நடைபெற்ற தெருநாய் கடி விழிப்புணர்வு நிகழ்ச்சியிலேயே நாடக கலைஞரை, ஒரு தெருநாய் கடித்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. கண்ணூர் மாவட்டம் மயில் கிராமத்தில் 5-ஆம் தேதி அன்று தெருநாய் கடி விழிப்புணர்வு நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த நாடகத்தை நாடகக் கலைஞர் ராதாகிருஷ்ணன் என்பவர் நிகழ்த்தி கொண்டிருந்தார். தெருநாய்களிடம் இருந்து எப்படித் தற்காத்துக் கொள்வது, நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கிராம மக்களுக்கு நடித்துக்காட்டினார். அப்போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒரு தெருநாய் திடீரென ராதாகிருஷ்ணனை கடித்தது. ஆனால், இதனை நாடகத்தின் ஒரு பகுதி என்று கருதிய கிராம மக்கள் கைத்தட்டி ரசித்தனர்.
இதையடுத்து, நாயை அங்கிருந்து விரட்டிவிட்டு, வலியைப் பொறுத்துக் கொண்டு ராதாகிருஷ்ணன் நாடகத்தை நடித்து முடித்தார். அதன்பிறகு, “சத்தியமா சொல்றேன், என்னை உண்மையாகவே நாய் கடித்துவிட்டது...” என்று ராதாகிருஷ்ணன் கூட்டத்தினர் முன்னிலையில் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தெருநாய் கடியில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியிலேயே நாடகக் கலைஞரை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.