Skip to main content

இந்த உலகம் யாருக்காகவும் காத்திருக்காது; மனித வாழ்வை உணர வைக்கும் ஜென் கதைகள்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

 zen story and Jay zen interview

 

ஜென் கதைகளின் பல்வேறு சிறப்புகள் குறித்து ஜெய் ஜென் நமக்கு விளக்குகிறார்.

 

நம்முடைய உடல் இயங்குவதற்கு தத்துவங்கள் தான் எரிபொருள். அவை தான் உங்களுடைய எண்ணங்களை உருவாக்குகின்றன. ஜென் கதைகள் காலத்துக்கு ஏற்றவாறு தத்துவங்களை எப்போதும் நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். ஒரு மடாலயத்தில் சிறுவயதில் ஒருவர் வேலைக்குச் சேர்கிறார். தன்னுடைய வேலைகளைச் சரியாகச் செய்யும் அவர் ஒரு கட்டத்தில் குருவாக மாறுகிறார். காலையில் விழித்த பிறகும் இரவு தூங்குவதற்கு முன்பும் மடாலய மணியை அடிக்கும் பழக்கம் அங்கு இருந்தது. ஒருநாள் அவர் இறந்து போகிறார். ஆனால் அடுத்த நாள் காலையிலும் மணி அடிக்கிறது. இது தான் கதை. 

 

நீங்கள் உண்மையாக ஒரு விஷயத்தைச் செய்தால் உங்களுக்குப் பிறகும் அதை வேறு யாராவது நிச்சயம் தொடர்வார்கள். ஜென் தத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஒருவன் எளிமையாக வாழ்வான். பகட்டைப் புரிந்துகொண்ட அளவுக்கு எளிமையை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. ஒரு மடாலயத்தில் குருவிடம் சீடர் கேட்கிறார் "நான் வந்து பல நாட்கள் ஆகிறது. நான் எப்போது துறவி ஆவது?" என்று. "என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்துவிட்டு வா" என்றார் குரு. அந்த நண்பரிடம் சென்றபோது ஒவ்வொரு வேளையும் உணவு உண்ட பிறகு பாத்திரங்களை சுத்தப்படுத்தி வைக்கச் சொன்னார். தொடர்ந்து ஐந்து நாட்கள் இதைச் செய்தார் சீடர். 

 

"நீ போகலாம்" என்றார் நண்பர். ஏன் இவை அனைத்தும் நடந்தது என்று குருவிடம் கேட்டார் சீடர். நடந்த அனைத்தையும் குரு கேட்டறிந்தார். "நீ துறவியாக முடியாது" என்றார் குரு. ஏன் என்று சீடர் வினவினார். "காலையில் எழுந்து ஏன் அனைத்தையும் கழுவி வைக்கவில்லை?" என்று கேட்டார் குரு. "இரவு தானே கழுவி வைத்தேன்?" என்றார் சீடர். "இரவிலிருந்து காலைக்குள் அந்தப் பாத்திரங்களில் தூசி படியாது என்று யார் உன்னிடம் சொன்னது? இந்தப் புரிதல் உனக்கு வரும்போது நீ துறவியாக முடியும்" என்றார் குரு. சீடருக்கு அப்போது புரிந்தது. ஜென் கதைகளை கேட்கக் கேட்க சலிப்பே வராது. 

 

ஒரு பட்டாம்பூச்சி பறக்கிறது. அதை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்து பிடித்தார். கையில் வைத்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். பட்டாம்பூச்சியின் உடலைத் திருப்பிப் போட்டார். ஒரு கம்பியை எடுத்து அதன் வயிற்றில் பெருக்கல் குறி போட்டார். அதன் உடலில் ரத்தம் வழிந்தது. அதைப் பார்த்து சிரித்தார். அதனால் பறக்க முடியவில்லை. இவை அனைத்தும் ஒரு துறவிக்கு கனவாக வந்தது. திடீரென்று எழுந்து பார்த்தபொழுது அவருடைய வயிற்றில் பெருக்கல் குறி போட்டிருந்தது. பட்டாம்பூச்சிக்கு காரணம் தெரியாதது போல் அவருக்கும் காரணம் தெரியவில்லை. அதோடு முடிகிறது கதை. 

 

ஜென் கதைகள் அனைவருக்கும் எளிதில் புரியும்படி இருக்கும். அவற்றுக்கு ஒரு ஆரம்பமும் முடிவும் கிடையாது. ஒரு துறவியும் நானும் ஒரே இடத்தில் இருந்தபோது இருவரும் நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். பிறகு அவர் சொன்னார் "நம் இருவருக்கும் இடையே மிகுந்த நம்பிக்கை இருப்பதால்தான் இவ்வளவு நேரம் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்க்க முடிந்தது" என்று. அதீத நம்பிக்கை இருப்பதால்தான் காதலர்கள் ஒருவரை ஒருவர் அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையின்மையால் தான் விவாகரத்து செய்பவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே விரும்புவதில்லை. 

 

ஒருமுறை இமயமலையில் ஒரு துறவியிடம் ஒருவர் வந்து "உலகத்தில் ஏன் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன?" என்று கேட்டார். அவரிடம் அந்தத் துறவி "அருகிலிருக்கும் செடியில் ஒரு காம்பில் உள்ள இலைகளை மட்டும் பிடுங்கி வாருங்கள்" என்றார். அவரும் அதைச் செய்தார். "இதில் ஏதாவது இரண்டு இலைகள் ஒன்று போல் இருப்பதை எனக்குக் காட்டி விடுங்கள்" என்றார். ஒவ்வொன்றுமே ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாகத் தான் இருந்தன. "நீங்கள் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம் என்பது உங்களுக்குப் புரிந்தால் இதுவும் புரியும்" என்றார் துறவி.

 


 

Next Story

காதலுக்காக அப்பாவை பிரிந்த மகள்; பாசப்போராட்டத்தில் டுவிஸ்ட் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 28

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 jay-zen-manangal-vs-manithargal- 28

காதலால் மகள் பிரிந்து சென்றதை தாங்க முடியாத நபர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் குறித்து ஜெய் ஜென் விவரிக்கிறார்.

இந்த நபர் என்னிடம் கவுன்சிலிங் வந்து தன் கதையை சொல்லும்போதே ஆச்சர்யமாக இருந்தது. என்னவென்றால் அவருக்கு விவாகரத்து ஆகி இருக்கிறது. பொதுவாக இப்படி கணவன், மனைவி பிரியும் போது, பெரும்பாலான குழந்தை அம்மாவிடம் தான் செல்லும். ஆனால் இவரது மகள் அப்பா கூடத் தான் போவேன் என்று தனது பத்து வயதில் சொல்லி இருக்கிறது. அவர் என்னிடம் சொல்லும்போதே மகள் இல்லை என்றால் தன் வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்ற அளவுக்கு இருக்கிறார். காலை எழுந்ததிலிருந்து அவரது மகள் குட் மார்னிங் சொல்லித் தான் அவர் அந்த நாளையே தொடங்குகிறார். இந்த பெண் கல்லூரி முடித்து வெளியே வந்தவுடன் தான் ஒருவரை காதலிப்பதாக சொல்கிறாள். 

இவரும் தன் பெண்ணிற்காக அந்த பையனை போய் பார்க்கிறார். கவனித்ததில் சரியான ஆள் இல்லை என்று தெரியவந்து மகளிடம் எடுத்துச் சொல்கிறார். முதன் முதலாக இருபது வருடத்தில் தனது மகளுக்கும், தந்தைக்கும் பிரச்சனை வருகிறது. சண்டை எப்போதாவது என்று இருந்தது, பிறகு அடிக்கடி இருவரும் வாக்குவாதம் செய்து செய்து அவர்களின் உறவு மாறி விடுகிறது. இப்படி திடீரென்று ஒருநாள் தன்னுடைய மகளை வீட்டில் எங்கு தேடியும் காணவில்லை. போன் பண்ணியும், நண்பர்களிடம் கேட்டும் தெரியவில்லை. அப்போது தான் புரிந்தது, தன் மகள் ஓடிவிட்டாள் என்று. மூன்றாவது நாள் என்னுடைய கவுன்சிலிங்கில் இருக்கிறார். இறந்தே போய்விடலாம் என்று முடிவெடுத்து வெறுத்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது தன் நண்பரின் சிபாரிசு மூலம் என்னை பார்க்க வந்திருக்கிறார்.

நான் அவரிடம் அந்த பையனை வேண்டாம் என்று சொல்ல ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று கேட்டேன். அந்த பையன் எந்த வேலைக்கும் போகாமல், எந்த ஒரு முதிர்ச்சியும் இல்லாமல், விளையாட்டுத்தனமாக இருந்தான். ஒன்றிரண்டு கெட்ட பழக்கம் வேறு இருக்கிறது, படிப்பில் சுமார். ஆனால் என் பெண் ரொம்ப முதிர்ச்சியான எண்ணம் உடையவள். அவன் எந்த வகையிலும் என் பெண்ணிற்கு ஏற்றவாறு இருக்கமாட்டான் என்றார். நான் அவரிடம், இப்போது உங்கள் மகள் எங்கு சென்றாள் என்று தெரியவில்லை அவ்வளவு தானே முதலில் அவர்களை வரச்சொல்லி பேசி பார்ப்போம். உங்கள் மகள் எடுத்திருக்கும் முடிவை நாம் மதிக்க வேண்டும் என்றேன்.  ஓரளவு அவள் எங்கிருப்பாள் என்று தனக்கு தெரிகிறது. ஆனால் யாரும் உண்மையை சொல்ல மறுக்கிறார்கள் சார் என்றார். 

எனக்கு தெரிந்த ஆட்களை வைத்தும் அவரும் முயற்சி செய்து இறுதியில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டோம்.  அந்த பெண் வர மறுக்கிறாள். அத்தோடு என் வாழ்க்கையில் தலையிடாதீர்கள் அப்பா  என்றாள். நான் அந்த பெண்ணிடம் பேசி நிலைமையை சொல்லி இப்படி கவுன்சிலிங்கில் பேசலாமா என்று கேட்டேன். நாங்கள் நண்பர்களுடன் பத்திரமாகத் தான் இருக்கிறோம் என்றாள். அத்தோடு நான் பேசியதை கேட்ட பிறகு அவரையும் கூட்டி வருகிறேன், அவர் இப்போது என்னுடன் இங்கு இல்லை. ஆனால் சொன்னால் வருவார் என்றாள். 

இந்த நபர் மிகவும் அழுது, ரொம்ப உடல் வருத்தப்பட்டு சோர்ந்து போயிருந்தார். அவரால் பேசவே முடியவே இல்லை. நண்பரை அழைத்து அவரை மருத்துவமனை கூட்டிச் செல்லுங்கள் என்றேன். பின்பு அந்த பெண் என்னை பார்க்க வருகிறார். அவள் மட்டுமே வந்தாள், அந்த பையன் வரவில்லை. நான் அவரிடம் பேசிக்கொண்டிருக்க, அவர் வந்து விடுவார் என்று உட்கார்ந்தே இருந்து, மதியம், மாலை என்று நேரம் ஆகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த பையன் வருவது போல தெரியவில்லை. இந்த பெண் வெளியே சென்று தனியாக போன் போட்டு, நெடுநேரம் கழித்து கடைசியாக பேசியபோது, அவன் சொல்லிய பதில், என்ன இது ஆள் எல்லாம் வைத்து கூப்பிட்டுக் கொண்டு, என்னால் இப்படி எல்லாம் வர முடியாது என்று சொல்லியிருக்கிறான். இந்த பெண் எவ்வளவோ எடுத்து சொல்லி நம் நிலைமை எல்லாம் எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள், அதற்கு பின் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எவ்வளவோ கெஞ்சி கேட்டு பார்த்தும் பதில் இல்லை. இறுதியாக ஆறு மணி நேரம் கழித்து நீ வருவியா மாட்டியா என்று கேட்க பதில் இல்லை.

எனக்கு புரிந்து விட்டது. நான் அந்த பெண்ணிடம், ஒரு அப்பாவாக நினைத்து என்னிடம் சொல்லுமா, உங்களுக்குள் ஏதும் நடந்து இருக்கிறதா என்று கேட்க, அந்த பெண் தயங்கி ஆமாம் ஒரு 3,4 மாதம் முன்பு என்று சொன்னார். இனிமேல் அவன் வரமாட்டான் என்று எனக்கு புரிந்தது. அந்த பெண்ணிற்கும் ஏழு மணி நேரம் கழித்து புரிந்து அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்புகிறாள். சரி இதான் நான் அனுப்பும் கடைசி மெசேஜ். இனி நாம் சந்திக்க ஒன்றும் இல்லை என்று அதோடு தொடர்பை துண்டித்து விட்டு வந்தார். அவர் அப்பா மருத்துவமனையிலிருந்து வந்ததும் மகள் அவர் காலில் விழுந்து மன்னித்துவிடுமாறு கதறி அழ, அவர் நீ என் பொண்ணு மா என்று பேசி அங்கு நிலைமை சீராகிறது. அவரிடம் நான் இதுவரை நடந்த எதுவும் பேசவேண்டாம். உங்கள் பெண் உங்களிடம் வந்து விட்டார் என்று சொல்ல, அந்த பெண்ணிற்கு தான் அவ்வளவு கோவம் இருந்தது, அவனை ஏதாவது செய்ய வேண்டும் சார் என்று. அது அப்பறம் இருக்கட்டும் நீ உன் அப்பா என்ற சிந்தனை மட்டுமே கவனத்தில் வைத்திரு. அதை பின்னர் பார்த்து கொள்ளலாம். நீங்கள் இருவரும் சேர்ந்து என்ன செய்யலாம் என்று பின்பு யோசியுங்கள்  என்று சொல்லி அந்த கவுன்சிலிங்க் முடிந்து விட்டது. 

அதன் பின்னர் அவர்கள் யோசித்து முடிவெடுத்து யாரோ வைத்து அந்த பையனை கூப்பிட்டு கண்டித்து என்று அடுத்தடுத்து நடந்து இருக்கிறது. ஆனால் பார்க்கவேண்டியது அந்த பெண் தன் தந்தையிடம் பத்திரமாக சேர்ந்தது தான். இன்றைய காலத்தில் இனிமேல் காதல் திருமணம் செய்ய இருக்கும் பெண்கள் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது, முதலில் அந்த பையனை வரவழைத்து குடும்பத்தோடு சந்திக்க வைத்து பேசுங்கள். அவன் வர தயங்குகிறான் என்னை எப்படி கூப்பிடலாம் என்று பேசினான் என்றாலே எப்படி அவனை நம்பி எதிர்காலத்தில் அத்தனை காலம் வாழ முடியும்.

Next Story

இது வேலையா? பாவமா? - இ.எம்.ஐ. வசூலிப்பவரின் குற்ற உணர்ச்சி -  ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 27

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 jay-zen-manangal-vs-manithargal- 27

தான் செய்கிற வேலை கொடுக்கும் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட நினைக்கும் ஒருவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

பொருள்கள் கொடுத்து அதற்கான இ.எம்.ஐ மாதாமாதம் வசூலிக்கும் நிறுவனத்தில் பணிபுரிபவர் அவர். வாடிக்கையாளர் கொடுக்க வேண்டிய மாத வட்டியை சொன்ன தேதிக்குள் வாங்கி விட்டால் இத்தனை ஸ்டார், சொன்ன தேதிக்கு முன்னரே வசூலித்து விட்டால் கோல்ட் ஸ்டார் என்றும் இன்சென்டிவ், பதவி உயர்வு, கார் என்று அந்த நிறுவனத்தில் வசூலிப்பவர்களுக்கு விதிகள் இருக்கிறது. இது பெரும்பாலும் வெளியே தெரியாது. என்னைப் பார்க்க வந்த நபர், அந்த பணியில் சிறப்பாக இருப்பவர். தன் வேலையை திறமையாகப் பார்த்துக் கொண்டிருப்பவர். என்னை பார்க்க வருவதே ஒரு முரண் தான்.

தன்னுடைய நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளரை ஒரு வண்டியோ, டிவியோ மாத வட்டி கொண்டு வாங்க வைக்க அந்த கம்பெனியில் ஒருவர் இருப்பார். என்னவெல்லாமோ இனிக்க இனிக்க பேசி சம்மதிக்க வைப்பார். அவருடைய வேலை அத்துடன் முடிந்தது. அதே நிறுவனத்தில் வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கு கட்ட வேண்டிய வட்டியை ஒவ்வொரு மாதம் சென்று வசூலிப்பவரின் வேலை வேறு விதமானது. ஆரம்பத்தில் திறம்பட நன்றாகத் தன் பணியை செய்கிறார். வட்டி வசூலித்து தனக்கான பெயரை நன்றாக சம்பாதிக்கிறார். இன்சென்டிவ் கிடைக்கிறது. ஆனால் இதுவே 365 நாட்கள் தொடர்ந்து ஒரு பொருளாதாரம் பாதித்திருக்கும் குடும்ப சூழலில் ஒவ்வொரு வீட்டிற்கும் வட்டி கேட்டு வற்புறுத்தி வாங்கி வருவது என்று தொடர அவரை அது உளவியல் ரீதியாக பாதித்திருக்கிறது. 

ஒவ்வொரு குடும்பத்திலும் பணம் கேட்கும்போது, அவர்களின் கட்ட முடியாத சூழ்நிலை, அவரிடம் காட்டப்பட்ட இயலாமை நிறைந்த சங்கடம் போன்றவை இவருக்கு ஓரளவுக்கு மேல் தாங்க முடியவில்லை. இதை சரியாக செய்தால் வேறு பதவி உயர்வு என்ற ஒரு விஷயம், இவருக்கு எப்படி இது சரியாக இருக்கும், நாம் செய்யும் இந்த வேலை முறையானது தானா என்று நெருடலாகிறார். மாறாக இவருக்கு கம்பெனியில் பெரிய திறமையானவர் என்று பெயர் வேறு. எப்பேர்ப்பட்ட சூழ்நிலை என்றாலும் சொன்ன தேதியில் நன்றாக பணம் வசூலிப்பார் என்று பாராட்டுகிறார்கள். ஆனால் அவர் தன் மீது இருக்கும் இந்த குற்ற உணர்ச்சி, கோபம் எல்லாம் தன் மனைவியிடம் காட்டி இருக்கிறார். தேவையில்லாமல் திட்டுவது, அடிப்பது என்று இருந்து இருக்கிறார். நிறுவனத்தில் எனக்கு இப்படி ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் நீ எப்படி என்னை நடத்துகிறாய் என்று சம்பந்தமில்லாத ஒரு வெறுப்பு. 

நான் நன்றாகத்தானே வேலை பார்க்கிறேன் அப்போது எனக்கு நிம்மதியும், சந்தோஷமும் தானே இருக்க வேண்டும். எனக்கு ஏன் மனசாட்சி உறுத்துகிறது சார் என்றார். என் வேலை அழுத்தம் என்னை வேறு விதமாக மாற்றுகிறது. நான் சாதாரணமாக மனைவியிடம் கோவம் கொள்ளும் நபர் கிடையாது. மற்றவர் பணத்தை உரிமையாக கேட்கும் ஆள் கிடையாது. ஆனால் என் நிறுவத்தினால் அந்த இடத்திற்கு சென்று எப்படியாவது மிரட்டி, பிடுங்கி என்று பணத்தை வாங்கி விடுகிறேன். எனக்கே தெரியாத அந்த வில்லத்தனமான புது ஆளாக நான் மாறி விடுகிறேன். கம்பெனியிலிருந்து வெளியே வந்தும் என்னால் அந்த புது ஆளிலிருந்து மாற முடியவில்லை அதுதான் என் பிரச்சனை என்றார்.

தான் வேறு வேலை மாறலாம் என்ற முடிவோடு வந்திருப்பதாகவும், அப்படி மாறுவது சரியா அல்லது இதே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை பார்க்கலாமா என்ற யோசனையில் வந்திருந்தார். அவர் இதை விட்டு வேறு எந்த வேலை சென்றாலும் அங்கேயும் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று வரும்போது, அதற்கான இலக்கை அடைய சில நியாயமில்லாத வேலைகளை செய்யும்படி வரத்தான் செய்யும். எனவே அதுவும் சரி இல்லை. அதே நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் அவர் செய்யும் வேலையை நியாயமானதாக இருக்க வேண்டும். எனவே மாற்ற வேண்டியது அவரை உறுத்திக்கொண்டிருக்கும் மனசாட்சியை தான். இதையெல்லாம் அவருக்கு எடுத்து சொல்லி, இதை விட்டால் நல்ல தொழில்கள் எவ்வளவோ இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு லாண்டரி சர்வீஸ் என்று எடுத்துக்கொண்டால், அழுக்கு துணியை கொண்டு வரும் கஸ்டமர் முகமும், அதை வாங்க வரும் அதே கஸ்டமர்சின் முகமும் வேறுபடும். சந்தோஷமாக சிரித்த முகத்துடன் பணத்தை கொடுத்து வாங்கி போவார்.

அதேபோல இந்த கம்பெனியில் நீங்கள் கொடுத்து வாங்கும் பணம் மற்றவர் வேதனையோடு, கஷ்டத்தில் வருகிறது. அது உங்களை வருத்துகிறது. வேறு தொழிலில் பொருளை திருப்தியோடு வாங்கி பணத்தை சந்தோஷமாக கொடுக்கும் வாடிக்கையாளர்கள் வரும் நல்ல தொழிலை நீங்கள் செய்யலாம் என்று எடுத்து சொன்னேன். அவரும் புரிந்ததை போன்று உணர்ந்தார். அவரும் வெளியே வந்து தற்போது வேறு தொழில் செய்து வருகிறார். தனக்கு முன்பு பண வசதி, பதவி உயர்வு என்று எல்லாம் இருந்தாலும் அங்கே கணவன் மனைவி சுமூகமாக இல்லை. ஆனால் இப்போது அவர் மனைவியும் தன் கணவர் பழைய மாதிரி கிடைத்துவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.