Skip to main content

'தி பிளாஸ்ட்' - யுவனின் பெருவெடிப்பும், சிறு தோல்வியும்!

Published on 31/08/2021 | Edited on 31/08/2023

 

yuvan shankar raja's album in 1999

 

"வாழவும் இறக்கவும் கற்பிக்கும் இந்த அமைப்புக்கு எதிராக என் இசை போராடுகிறது"
                                                                                                                           - பாப் மார்லி.

 

தமிழில் திரையிசைப் பாடல்களைத் தாண்டி சுயாதீன இசையில் உருவாகும் பாடல்கள் அண்மையில் உலகளாவிய கவனத்தைப் பெறுகின்றன. காதல், நட்பு என்ற வழமையைக் கடந்து சமூக உரிமைகளை மீட்டெடுக்கும் உள்ளடக்கத்தைக் கொண்ட பாடல்களும் பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. ஆனால், 24 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய இசை ஆல்பம் ஒன்று, அந்த இசையமைப்பாளர் பின்னாட்களில் பெரும்பான்மை ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், அக்காலகட்டத்தில் கவன ஈர்ப்பைப் பெறாமல் போனது. அக்காலகட்டத்தின் முக்கியமான இரண்டு திரைப்பிரபலங்கள் பங்களித்த முதல் இசை ஆல்பம் என்ற சிறப்பு இருந்தாலும், புதுமையான இசை கோவையுடன் பாடல்கள் அமைந்திருந்தாலும் சிறு அசைவைக் கூட அந்த ஆல்பத்தால் ஏற்படுத்த முடியவில்லை. முன்னதாக ஏ.ஆர். ரஹ்மானின் 'வந்தே மாதரம்' ஆல்பம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றபோதும், 17வயதான இந்த இசையமைப்பாளரின் முயற்சி அந்த அளவிற்கு கவனம்பெறவில்லை. அதுகுறித்து ஒன்றிரண்டு பேர் பின்னாட்களில் எழுதினாலும், அந்த ஆல்பம் தன் இலக்கை இன்னும் முழுமையாக அடையவில்லை. இருப்பினும் அதன் பாடுபொருளும் இசையனுபவமும் சமகாலத்திற்கும் ஏற்ற வகையில் இருப்பதென்பது மறுக்கமுடியாது.

 

திராவிட சினிமா மருவிய காலத்தில், லட்சியவாத கதாபாத்திரங்களில் இருந்து யதார்த்தவாத கதாபாத்திரங்கள் நோக்கி திரையுலகம் திரும்பியது. அந்தச் சூழலில் சமகால இளைஞர்களின் எண்ண ஓட்டங்களுக்கேற்ப இளையராஜாவின் பாடல்கள் அமைந்தன. கிட்டத்தட்ட, 80கள் காலகட்ட சமூக மனநிலையின் பிரதிபலிப்பென்றே இளையராஜாவின் இசையைக் குறிப்பிடலாம். அந்த வகையில் 90களில் பிறந்த புத்தாயிர இளைஞர்களின் முகமாக அமைந்தவர் யுவன்ஷங்கர் ராஜா. இன்றளவும் புத்தாயிர இளைஞர்களின் அடையாளம் யுவன்தான். இயல்பாகவே யுவனிடமிருந்த கலகக் குணமும், சமகால சமூகத்தின் உளவியலைப் பிரதிபலித்த அவரது இசையுமே இதைச் சாத்தியமாக்கியதெனக் கூறலாம். 1997இல் திரைத்துறையில் அறிமுகமான யுவன், 1999ஆம் ஆண்டு இசையமைத்த ஆல்பம்தான் மேற்குறிப்பிட்ட கவனிக்கப்படாத ஆல்பமான 'தி பிளாஸ்ட்' (The Blast). 

 

இந்த ஆல்பம் 1999ஆம் ஆண்டு வெளியானது; தலைப்பு 'தி பிளாஸ்ட்'; போர்கள் வேண்டாம் என்பதே இதன் உள்ளடக்கம்... கார்கில் போர் இந்திய எல்லையில் ரணங்களை உருவாக்கிக்கொண்டிருந்த காலகட்டம் அது. இந்த ஆல்பத்தில் மொத்தம் 12 பாடல்கள். இரண்டு பாடல்களைத் தவிர மற்ற அனைத்தையும் யுவனே பாடியிருக்கிறார். இரண்டு பாடல்களில் கமல்ஹாசன் பேசியிருக்கிறார் (!). ஆச்சரிய தகவல், நாகூர் ஹனிபா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். சுஜாதா ரங்கராஜன், அறிவுமதி, பார்த்தி பாஸ்கர், கவி ரவி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். உலக அமைதி, போர் நிறுத்தம் இவைதான் கருப்பொருள். சில காதல் பாடல்கள், தேச பக்தி பாடல், போர் எதிர்ப்பு பாடல் எனத் திரைப்படத்திற்கான வரையறையிலேயே உருவாக்கப்பட்டிருந்தாலும், உள்ளடக்கத்தை ஒட்டியே பாடல்களின் வரிகள் அமைந்திருப்பதும், ஒவ்வொரு பாடல்களின் இடையிலும் போர்ச் சத்தங்கள் ஒலிப்பதும் மாறுபட்ட உணர்வைத் தோற்றுவிக்கின்றன. 

 

1997ஆம் ஆண்டு 'அரவிந்தன்' பட வேலையின்போதே யுவன் இந்த ஆல்பத்தை தொடங்கியிருக்கக் கூடும். பிற்காலத்தில் தான் என்ன மாதிரியான இசையை அமைக்க வேண்டும் என்பதற்கான முன்னோட்டமாகவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் என்பதாகத் தோன்றும் அதேவேளையில், திரையிசை யுவனை பிற்காலங்களில் கட்டுப்படுத்திவிட்டது என்ற எண்ணமும் மேலோங்காமல் இல்லை. இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போலல்லாமல் யுவன் வளர்ந்துவந்த காலகட்டத்தில் பல இசையமைப்பாளர்கள் ஹிட் பாடல்களைத் தந்துகொண்டிருந்தனர். அவர்களையெல்லாம் மீறி இளைஞர்கள் யுவனை  கொண்டாடியதற்கான காரணம் ஒன்றுதான். 

 

முறையாக இசை பயிலாத யுவன், தனக்குள் எழும் உணர்வெழுச்சியையே பாடல்களாக உருமாற்றியிருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான இசையே யுவனின் ஸ்பெஷல். அதிலும் உணர்வுகள் ததும்பும் காதல் பாடல்களே யுவனை இளைஞர்களோடு பிணைத்துவைத்திருக்கிறது. இந்த ஆல்பத்திலும் 'நீதானே நீதானே...' என்ற பாடல் யுவனுடைய அக்மார்க் துள்ளலின் முதல் வெளிப்பாடு என்றே கொள்ளலாம். வழமையான கற்பனையில் காதலையும் காதலியையும் கொண்டாடுகிற பாடல், 

ஜாதிகள் காதலித்தால் கூரைகள் எரியாதே / மதங்கள் காதலித்தால் கோபுரங்கள் சரியாதே / தேசங்கள் காதலித்தால் யுத்தங்கள் தோன்றாதே / ஆதலால் காதல் செய்ய வா.. 

என சமகால அரசியலில் காதலின் முக்கியத்துவத்தையும் பாடுகிறது. யுவனின் தமிழ் உச்சரிப்பு அலாதியானது, நவயுக தமிழர்களுக்கானது. மெனக்கெடல் இல்லாது இசையின் தன்மையோடு ஸ்டைலாக யுவன் உச்சரிக்கும்போது நமக்குள்ளும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. அந்த உயிரோட்டம்தான் யுவனின் அடையாளம். புத்தாயிர இளைஞர்களின் காதல், காமம், கவர்ச்சி குறித்து அறியாமையையும் குழப்பத்தையும் இசையாக்கியதன் மூலம் அவர்களின் உளவியலோடு சற்றே உரையாடியிருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. அதனால்தான், 'உலகமெல்லாம் உனதல்லவா... உன் இதயம் மட்டும் எனதல்லவா...' என்று யுவன் பாடியபோது இவர்கள் ஆர்ப்பரித்தார்கள். விருதுகள் வழங்காது புறக்கணித்தபோதும் சிம்மாசனத்தில் அமரவைத்தார்கள். இந்த ஆல்பத்தின் 'ஒருநாள் போதுமா...' என்ற பாடலில் காதலின் தவிப்பையும் காத்திருப்பையும் ஏக்கத்தோடு கடத்தியிருக்கிறார் யுவன். ஒரே பாடலை இரண்டு விதமான வடிவத்தில் தரும் முயற்சியை இந்த ஆல்பத்திலேயே தொடங்கியிருக்கிறார் யுவன். 

 

தீம் மியூசிக் என்ற வகைமையைப் பிரபலப்படுத்தியதே யுவன்ஷங்கர் ராஜாதான். கதையின் தன்மையை 3 நிமிட இசைக்கோவைக்குள் வெளிப்படுத்துவது யுவனுக்கு இலாவகமாக வருகிறது. இந்த ஆல்பத்தில் 'உன் நினைவே...' என்ற இசைக்கோவை, தீம் மியூசிக் என்ற பிரிவில் சேராதென்றாலும் உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் தேவையில்லை, ஒலிக்குள் இருக்கும் மௌனமே போதும் என்ற உள்மெய்யை உணர்த்துகிறது. 'குறிப்புகளில் ஒலிப்பதல்ல இசை, அதனிடையே உள்ள மௌனத்தில் இருப்பது' என்பார் மொசார்ட். யுவன் குரலிலும் தீம் மியூசிக்கிலும் மௌனத்திலிருந்து கிளர்ந்தெழும் அந்த இசையை உணரலாம். 'அவள் தேவதை வருவாள்...' என்று ஆல்பத்தில் ஒலிக்கும் மௌனத்தை யுவன் இசையாக்கிய விதம் தேர்ந்த இசைஞனுக்குரியது. 

 

காதலையும் பிரிவையும் இசைக்க யுவனை விட்டால் வேறு எவரும் இல்லை என்பதே புத்தாயிர இளைஞர்களின் எண்ணம். தங்களை அழ வைப்பது யுவன் இசை மட்டுமே என சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிடுவது யாவரும் அறிந்ததே. "என்னால் யாரையும் வெறுக்கவே முடியாது. என் இயல்பே அதுதான்" எனப் பேட்டி ஒன்றில் யுவன் தெரிவித்திருக்கிறார். அதையே அவரது இசையும் சொல்கிறது. 'பூவே புதிரே..' என உருகும் பாடல், இந்த ஆல்பத்தில் துயரத்தைச் சுமக்கும் ஒரேயொரு பாடல். ஸ்ரீநிவாஸ் பாடியிருக்கும் இப்பாடல், இயல்பான வார்த்தைகளைக் கொண்டு காதல் பிரிவின் துயரத்தை அத்தனை வலியோடும் கடத்துகிறது. பொதுவாக யுவனை இளையராஜாவின் நீட்சி என்றே விமர்சனம் செய்வார்கள். அதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அது முற்றிலும் உண்மை கிடையாது. இளையராஜாவை மீறவே யுவன் முனைகிறார். ஒழுங்கின்மையின் ஒழுங்கோடு இசையமைக்கும் யுவன், தன் உள்ளெழுச்சியின் இசையையே நமக்குத் தருகிறார். சில நேரங்களில் அது இளையராஜாவின் சாயலைக் கொண்டிருப்பதுண்டு. ஆனால், இது யுவனுக்கு மட்டும் நேர்வதல்ல, சமகாலத்தில் வந்த அனைவரது இசையிலும் ராஜாவின் பாதிப்பு இருக்கவே செய்தது. மேலும், அதில் இயக்குநர்களின் பங்களிப்பும் உண்டு. தன் இசையில் ராஜாவைப் பாட வைத்த பாடல்களில் யுவனின் தனித்தன்மையும் தன்மீறலும் புலப்படும். நீரோட்டம் போல, காற்றலை போல, இடியைப் போலப் பாடலை உருவாக்க யுவனால் கூடும். இசையின் இலக்கணமோ, வார்த்தைகளோ யுவனைத் தடுப்பதில்லை. இசைக்குள் வார்த்தை பொருந்தவில்லை என்றால், இசையை நீட்டி வளைத்துக்கொள்கிறார். பெருங்குறையாக அது தோன்றுவதில்லை. இசையின் நீரோட்ட பாதையில் அது உள்ளிழுக்கப்படுகிறது. யுவன் இதைத் திட்டமிட்டும் செய்வதில்லை. அவருக்குள் இயல்பாகவே இருக்கும் கலக மனம் சாத்தியமாக்குகிறது. 

 

போரைப் பற்றின ஆல்பத்தில் இரண்டு பாடல்கள் தீவிரத் தன்மையோடு அமைந்திருக்கின்றன. 'ஒளி வீசும்...' பாடல் தேசப்பற்றுள்ள பாடலாக ஒலிக்கிறது. வழக்கமான ஒன்றாக இல்லாமல், சமூக விடுதலையிலிருந்தே தேச விடுதலை சாத்தியம் என்பதாகவும், தேசம் என்பது உழைக்கும் மக்களால் உருவானது என்பதாகவும் வரிகள் அமைந்திருப்பது சிறப்பு. இசையாகவும் அதீத உணர்வெழுச்சிகள் இல்லாமல் மெல்லிய அதிர்வுகளைக் கொண்ட ஒலிகளையே யுவன் பயன்படுத்தியிருக்கிறார். அமைதியைக் கோரும் பாடலாக 'போராடு போராடு...'   அமைந்திருக்கிறது. நாகூர் ஹனிபாவின் குரல் குறைவாகவே பயன்படுத்தப்பட்டாலும் சில்லிட வைக்கிறது. இது அமைதியாய் வாழ்வதற்கான இடம். போரிட விரும்புவோர் விண்வெளிக்கு அப்பால் சென்றுவிடுங்கள் என்பதுதான் பாடலின் சாரம்.

 

யுவனை புத்தாயிர இளைஞர்கள் கொண்டாடுவதற்கான காரணம் அவரது இசை மட்டுமல்ல... குரலும்தான். உள்ளிருந்து வெடித்தெழும் குரல் அவருடையது. 'உடைத்து உடைத்து வெளியேறும் தன்மை கொண்டது'. இதை அதே பொருளில் புரிந்துகொள்ளாதீர்கள். அவ்வார்த்தைகளின் ஒலியோடு தொடர்புப்படுத்திப் பாருங்கள். உள்ளிழுத்துப் பொங்கும் எரிமலை வெடிப்பு போன்ற குரல். அந்தக் குரல்தான் நவயுக இளைஞர்களின் உளவியலை வெளிப்படுத்துகிறது. சொல்ல முடியாத உணர்வுகள், எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாத மனநிலை, அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள், குழப்பமான மனநிலை என எல்லாவற்றுக்கும் யுவன் குரலே நமக்கான கருவி. அதன் வழியாகவே நாம் வெளிப்பட்டுக்கொள்கிறோம். இந்த ஆல்பத்திலும் 'சிப்பிக்குள்ளே...' என்ற பாடல் அத்தகைய மனவெழுச்சியின் வெளிப்பாடே. 

 

இயற்கையின் அற்புதங்கள் குறித்தும் வாழ்வனுபவம் குறித்தும் இசைக்கும் இந்தப் பாடலை யுவனின் குரலில் கேட்பது ஆகச்சிறந்த அனுபவம். மொத்தமாக இந்த ஆல்பம் யுவனின் புதுமையான முன்னெடுப்பு என்று சொல்லலாம். முறையாக இசை பயிலாத 17 வயது சிறுவனின் முயற்சி என்று யோசித்தாலும் தன்னிலிருந்து தன்னை மீட்கும் இசைக் கலைஞனின் முயற்சி என்று பார்த்தாலும் ' தி பிளாஸ்ட்' என்பது உண்மையில் பெருவெடிப்புதான். முன்னரே சொன்னதுபோல், இது கார்கில் போர் குறித்த ஆல்பம் என்று நீங்கள் நினைத்திருக்கக் கூடும். "1998ஆம் ஆண்டு இந்தியா நடத்திய அணு ஆராய்ச்சிதான் இந்த ஆல்பத்திற்கு தூண்டுதலாக இருந்தது" என யுவன் சொல்லியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் பெரிதும் கொண்டாடப்படாத இந்த ஆல்பத்தின் அனைத்து பாடல்களையும் இப்போது மீண்டும் கேட்டுப்பாருங்கள், நாகூர் ஹனிபாவின் பாடல் உட்பட. நீங்கள் உணரக்கூடியது ஒன்றுதான், "யுவன் - ஒரு மகா கலைஞன்".

 

 

 

Next Story

“இது எனக்கு மிகவும் கசப்பான தருணம்” - யுவன் சங்கர் ராஜா உருக்கம்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Yuvan Shankar Raja said in Bhavatharini AI voice in   song of the goat movie

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ லிரிக் வீடியோ வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், வழக்கமான விஜய் பாடல்களின் கொண்டாட்டம் சற்று கம்மி என்கின்றனர் சிலர். 

இந்த நிலையில் விஜய்யின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு ‘தி கோட்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சின்னசின்ன கண்கள்..’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலையும் விஜய் பாடியிருக்கும் நிலையில் அவருடன் இணைந்து மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுல் இடம்பெற்றுள்ளது. பவதாரிணி அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளது படக்குழு.  

சகோதரியின் குரலைப் பயன்படுத்தியது குறித்து யுவன் சங்கர் ராஜா, “இந்தப் பாடல் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெங்களூரில் இந்தப் பாடலுக்கான இசைப்பணியிலிருந்த போது நானும் வெங்கட் பிரபும் எங்களது சகோதரி பவதாரிணியை பாட வைக்க நினைத்தோம். இந்தப் பாடல் அவளுக்கானது என்று உணர்ந்தோம். அந்தநேரத்தில் பவதாரிணியும் குணமாகத்தான் இருந்தாள். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் பவதாரிணி உயிரிழந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. அவளது குரலை நான் இப்படி பயன்படுத்துவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எனது இசைக்குழுவுக்கும், இந்தப் பாடல் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி. இது எனக்கு மிகவும் கசப்பான தருணம்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 

Next Story

உலகம் முழுவதும் வெளியாகும் ‘குணா’; ரீ - ரிலிஸ் தேதி அறிவிப்பு

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Kamal Haasan  Guna movie worldwide re-release date announced

சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் தொடக்கத்தில் மலையாள படமான மஞ்சு மெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் நகரம் முதல் குக்கிராமத்தில் உள்ள திரையரங்குகள் வரை திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது. 

மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியதே. குணா திரைப்படம் வெளியானபோது கூட திரையரங்குகளில் குணா படத்தில் இடம்பெற்ற வசனங்கள், பாடல்களுக்கு இந்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இன்றைய தலைமுறை மஞ்சு மெல் பாய்ஸ் படத்தில் அதனை திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடியதைப் பார்த்து என் உடம்பு புல்லரித்து போனது என்றார் குணாபடத்தை இயக்கிய சந்தானபாரதி. 

இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன்,  ரோஷினி, ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம், எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட் , எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர். வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர். 

1991 ஆம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாடு அரசு வழங்கியசிறந்த திரைப்படத்திற்கான மூன்றாவது பரிசை குணா வென்றது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையிலும், தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்து வரும் குணா திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு கமல்ஹாசனின் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சூன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்படுகிறது. தமிழ் திரைப்பட ஆடியோ உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக முண்ணணி நிறுவனமாக, திகழ்ந்து வந்த பிரமிட் ஆடியோ குரூப் குணா படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது.