Skip to main content

"அந்த கடைசி அழைப்பு கொடுத்த வலி..." - நா.முத்துக்குமார் குறித்து யுகபாரதி

Published on 12/07/2019 | Edited on 12/07/2020

 

yugabharathi about na.muthukumar

 

 

கண்ணதாசன், வாலி, வைரமுத்து வரிசையில் தமிழ் சினிமாவால் தவிர்க்கவும், மறக்கவும் முடியாத பாடலாசிரியர் நா.முத்துக்குமார். எளிதில் கடந்துவிட முடியாத கனமான கவிதைவரிகளில் தனது தனித்துவத்தை நிலைபெறச்செய்த அவரின் பிறந்த நாளான இன்று, சமகால பாடலாசிரியரும், நா.முத்துக்குமாரின் நண்பருமான கவிஞர் யுகபாரதியின் மனதிலிருந்து நீங்காத முத்துவின் நினைவுகள்:

 

“நா. முத்துக்குமார், தன்னை முழுக் கவிஞனாக அறிவித்துக் கொள்ள ஆரம்பித்த தொண்ணூறுகளின் இறுதியில் இருந்தே எனக்கு அறிமுகம். நானும் அவனும் கவிதைகளின் வாயிலாக உறவு கொண்டிருந்தோம். என் கவிதைகளில் சில அவனுக்கும் அவன் கவிதைகளில் பல எனக்கும் பிடித்திருந்தின. அப்போது இருவருமே உலகத்தால் அறியப்படாதவர்கள். விளையாட்டுப்போல கவிதைகளை எழுதிவந்த முத்து, ஒரு கட்டத்தில் அக்கவிதைகளால் விளையாடப்பட்டான். சின்னச்சின்ன கவிதைகளின் மூலம் விரிந்த அவனுடைய உலகம், பின்னாட்களில் கவிதைகளே உலகம் என்ற கற்பனையில் மிதக்க வைத்தது. வார, மாத இதழ்களில் அங்கும் இங்குமாக பிரசுரிக்கப்பட்ட தன்னுடைய பெயர் பிரசுரமாவதைப் பார்க்கும் ஆவலுக்கு அவன் இரையானான். தொடர்ந்து எழுதுவது, தொய்வில்லாமல் உழைப்பது என்ற கட்டத்திற்கு வந்த முத்துக்குமார் இறுதிவரை அந்த செயல்பாட்டில் இருந்து தன்னை விலக்கிக்கொள்ளவே இல்லை.

 

முத்துக்குமார், தன்னுடைய அம்மாவை இளம் வயதிலேயே இழந்தவன் என்பதால் எல்லாப் பெண்களிடம் அவன் தன் தாயைத் தேடிக்கொண்டிருந்தான். அம்மாவின் சாயலை தேடுவதிலிருந்து கடைசிவரை அவன் விடுபடவில்லை. இப்போதும் அவன் தன் அம்மாவைத் தேடியே போயிருக்கிறான். அவனுக்காக அவனுடைய அம்மா பால்சோற்றோடு ஆகாயத்தில் அமர்ந்திருக்கிறாள். நிலவைக் காட்டி சோறூட்டாத தாய், நிலவுக்குள்ளிருந்து சோறூட்டப் போகிறாள். தொட்டிலிலிட்டு தூங்கவைக்க விரும்பிய அவன் தாய், அவனைத் தூங்க வைத்து தன் இதயத் தொட்டிலுக்குள் இடம்பெயர்த்துக் கொண்டாள். யாரையும் ஏமாற்றக்கூடாது என்று எண்ணுகிறவர்களைக்கூட, வாழ்க்கை மிக எளிதாக ஏமாற்றிவிடுகிறது. முத்துக்குமார் தன் சோகங்களை எழுத்தில் சொல்லிய அளவுக்கு நேர்ப்பேச்சில் வெளிப்படுத்தியதில்லை. "என்னடா, ஒருமாதிரி இருக்க' என்றால், "ஒண்ணுமில்லையே நல்லாதானே இருக்கேன்' என சமாளித்து சமாளித்து சகலத்தையும் தன்னுள் மறைத்துக்கொள்வான். வெடித்துச் சிரிக்கும் பொழுதுகளிலிலும் அவனுடைய கண்களில் கவ்வியிருந்த லேசான சோக ரேகையை அருகில் இருந்த நண்பர்கள் அறிந்திருக்கிறோம்.

 

"அடுக்குமாடிக் குடியிருப்பின்
மொட்டை மாடியில்
நிலா இருக்கிறது
சோறும் இருக்கிறது
ஊட்டுவதற்குத்
தாய் இல்லை'
என்றொரு கவிதை. "அனா ஆவன்னா' கவிதை நூலில் "ஆறு வித்தியாசங்கள்' என்னும் தலைப்பின் கீழ் வெளிவந்த இக்கவிதையை வாசித்துவிட்டு அப்போதே அவனிடமே பகிர்ந்துகொண்டதாக ஞாபகம். அப்பாவையும் அம்மாவையும் அவன் நினைவுகளில் சுமந்தவனாகவே திரிந்துகொண்டிருந்தான். "அவங்க எனக்கு அம்மா மாதிரி' என பலரை பல நேரங்களில் சொல்லியிருக்கிறான். தூக்குக்கயிற்றிலிருந்து அம்மாவைப் பிரேதமாக இறக்கிய காட்சியை அவனால் இறுதிவரை மறக்கமுடியவில்லை. சோகச் சித்திரமாக அக்காட்சியை மூளையில் அவன் தீட்டிக் கொண்டிருந்தான். அழிக்கவே முடியாத அந்தச் சித்திரம் அவனை துரத்திக் கொண்டிருந்தது. மிதிவண்டியில் இருந்து ஆகாய விமானம்வரை அவன் பறந்து பறந்து உலகத்தின் எந்தத் திக்கிற்குப் போனாலும் அவனை அச்சித்திரம் பயமுறுத்தியது. வீடு நிறைய புத்தகங்களை அவன் அப்பா வாங்கிக் குவித்திருந்தார். அதற்குள் மறைந்துகொண்டாலும் அந்த சித்திரம் அவன் காதைத் திருகி இழுத்துவந்தது. திரைப்பாடலில் ஷோபா மறைவில் அவன் தன்னை பதுக்கிக்கொண்டாலும் அந்த சித்திரம் அவனைத் தூங்கவிடாமல் செய்தது. முத்துக்குமாரின் எந்தக் கவிதை தொகுப்பிலாவது அம்மாவைப் பற்றிச் சொல்லப்படாமல் இருக்கிறதா என ஆராய்ந்தால் எல்லா தொகுப்பிலும் அம்மாவைப் பற்றி அவனால் தீட்டப்பட்ட அழகழகான சித்திரங்கள் இல்லாமல் இல்லை. அவனே அப்பாவாக மாறிய பின்னும் அவன் அம்மா பிள்ளையாகவே இருந்திருக்கிறான். உடனிருந்து ஒரு அம்மா என்னென்ன செய்வாளோ அவை அனைத்தையும் அவன் அம்மா இல்லாமல் செய்திருக்கிறான். நினைவுகளைக் கழித்துவிட்டால் வாழ்வில் ஒன்றுமில்லை என்பார்கள். நினைவுகள் ஒன்றுமில்லாமல் போக எந்தக் கவிஞனும் சம்மதிப்பதில்லை.

 

முத்துக்குமாரின் அநேக கவிதைகள் மத்தியதர வர்க்கத்து இளைஞனின் குரலை பிரதிபலிப்பவை. தனக்கு நேர்ந்த- நேராத சம்பவங்களின் ஏக்கங்களை அக்கவிதைகள் பேசுகின்றன. சின்னச்சின்ன சந்தோசத் தருணங்கள், வார்த்தைகளாக வடிவம் பெற்றிருக்கின்றன. அதிகபட்ச கனவுகளில் ஒன்றாக முனியாண்டி விலாஸுக்கு சென்று உணவருந்துவதையும், தீபாவளி, பொங்கலுக்கு துணியெடுப்பதையுமே அவன் கண்டிருக்கிறான். காற்று முழுக்க தன் ஆசைகளை பாடல்களாக உலவவிட்ட பிற்பாடும்கூட அக்கனவுகள் அவனிடமிருந்து அகல மறுத்தன. பெரிய உயரங்களைத் தொட்டு விட்டாலும் சின்னச்சின்ன பூக்களில் வசமிழக்கும் தன்மையோடே அவன் இருந்தான். இதழ்க்கடையில் எப்போதும் அரும்பியிருக்கும் அவனுடைய சிரிப்புப் பூக்கள் எதனாலும் உதிர்வதில்லை.

 

yugabharathi about na.muthukumar

 

சிறுசிறு கவிதைகள் எழுதிய காலத்தில் இருந்து திரைத்துறையில் தவிர்க்கமுடியாத இடத்தை முத்துக்குமார் பெறும் வரையிலும் உடனிருந்து  பார்க்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அந்த வகையில் முத்துக்குமாரிடம் பழக்கத்தில் எந்த மாறுதலையும் நான் கண்டதில்லை. சென்னை டிரஸ்ட்புர  வன்னியர் தெருவில் ஆரம்பித்த எங்கள் பழக்கம் வெளிமாநில, வெளிநாட்டு ஒலிப்பதிவுக் கூடங்கள்வரை ஒரேமாதிரி தான் இருந்தது. ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வதும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொள்வதும் இயல்பாக இருந்தன. இரண்டு கவிஞர்கள் இவ்வளவு நெருக்கமாக நட்புடன் நடந்துகொள்ள முடியுமா என சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களும் இயக்குநர்களும் கேட்கவும் செய்திருக்கிறார்கள். ஒரு புது மரபை ஏற்படுத்த முத்துக்குமார் விரும்பியது பலருக்குத் தெரியாது. நவீன கவிதைகளையும் நவீன சொல்லாடல்களையும் திரைப்பாடலுக்குள் கொண்டுவரும் தீவிரத்தை அவன் காட்டியதைப் போலவே நண்பர்களிடமும் அவனுடைய அன்பின் தீவிரம் எதன் பொருட்டும் குறையவே இல்லை. இரண்டு தேசிய விருதை, இளம் வயதில் பெற்ற பெருமையை எங்கேயும் அவன் காட்டிக் கொண்டதில்லை. சகஜமாக பழகுவதிலும் உடனிருக்கும் உறவுகளை விசாரிப்பதிலும் அவன் தன்னை கவிஞனாக அல்லாமல் மனிதனாகவே வைத்திருந்தான்.

 

சில இலக்கியவாதிகள் அவனுடைய கவிதைகள் குறித்து போதிய புரிதல் இல்லாமல் விமர்சித்தாலும் அவனுடைய இருப்பையும் முயற்சிகளையும் அவர்களால் தவிர்க்க முடியாது. வெகுசன பாடலாசிரியனாக அவன் புகழ்பெற்ற வேளையிலும்கூட அவன் வாசிப்பு நல்ல இலக்கியங்களை கண்டுகொள்ளத் தவறியதில்லை. ஒலிப்பதிவுக் கூடத்தில் அவனை சந்திக்க நேர்ந்த அத்தனை சந்தர்ப்பத்திலும் அவன் கையில் உயிர்மையோ, காலச்சுவடோ இருந்ததை நான் கவனித்திருக்கிறேன். "இதைப் படித்தாயா, அதைப் படித்தாயா' என அவன் தன் உரையாடலை ஆரம்பிக்கும் தொனி தீவிர இலக்கியவாதியை அடையாளப்படுத்துவதாகவே இருக்கும். இயக்குநராகும் அவனுடைய இலட்சியத்திற்கான தரவுகளை அவன் சேமித்துக் கொண்டே வந்தான். சேதாரங்களைக் கணக்கிடாமல் தன்னை செலவழித்துக் கொள்ளும் மனவுறுதி அவனுக்கு இயல்பிலேயே வாய்த்திருந்தது. கொஞ்ச நேர உரையாடலிலேயே அவன் தன்னுடைய உயரத்தைக் காட்டிவிடுவான். பூஃகோ, நீட்சே, பிராய்ட் என்று பேசும் ஒரு திரைப்பாடலாசிரியனை அவனுக்கு முன்னால் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. குறுக்கும் நெடுக்குமாக ஜெயகாந்தனை அவன் சொல்வான். குழப்பம் இல்லாமல் தி.ஜானகிராமனை, சுந்தர ராமசாமியை, கி.ராஜநாராயணனை அவன் உள்வாங்கிக்கொண்டிருந்தான். ஜெயகாந்தனும் ஜெயமோகனும் எதிரெதிர் நிலையில் உள்ளவர்கள் என்றபோதும் அவர்கள் இருவரையுமே காய்தல் உவத்தல் இல்லாமல் அவன் தன்னுள்ளே ஈர்த்து வைத்திருந்தான்.

 

இளையராஜாவிடம் முதல் பாடல் எழுதப் போன அனுபவத்தை எனக்குச் சொல்லி, அவரிடம் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவனே கற்பித்தான். பெரும் இசை ஆளுமையாக இருந்துவரும் இளையராஜா எதை விரும்புவார்? எதை விரும்ப மாட்டார் என அவன் சொல்லிய தன்மையில் கொஞ்சமும் பிசகாத தன்மையோடுதான் இளையராஜா என்னிடம் நடந்துகொண்டார். போட்டிகள் நிறைந்த திரைத்துறையில் ஒரு பாடலாசிரியன் இன்னொரு பாடலாசிரியனுக்கு இத்தகைய உதவிகளைச் செய்திருக்கிறான் என்பது திரைத்துறைக்கு அப்பாலுள்ளவர்களுக்கு ஆச்சர்யமளிக்கலாம். ஆனால், அத்தனை ஆச்சர்யங்களையும் முத்துக்குமாரால் நிகழ்த்தமுடிந்தது. இயக்குநர்களில் சிலர் தன்னுடன் முரண்படுகையில் எல்லாம் அவன் என் பெயரைச் சொல்லி அனுப்பியிருக்கிறான். "இந்தப் பாடலை முத்துக்குமார் உங்களை வைத்து எழுதிக்கொள்ளச் சொன்னார்' என்று அவர்கள் சொல்லிய நிமிடங்களை இப்போது நினைத்தால் பிரம்மிப்பாக இருக்கிறது. விருது, வியாபாரம் எல்லாவற்றையும் கடந்த நிலையை முத்துக்குமார் அடைந்திருந்தான். என் கவிதைகளை எங்கு பார்த்தாலும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தும் அன்பை அவன் பெற்றிருந்தான். முத்துக்குமாரிடம் இருந்து இனி எந்த ஒரு அழைப்பும் வராது என்று சொல்லிய, அந்தக் கடைசி அழைப்பு கொடுத்த வலியில் இருந்து விடுபட முடியாமலிருக்கிறேன்”.

 

- கவிஞர். யுகபாரதி

 


 

Next Story

"கொடுமையிலும் கொடுமை" - கொதித்தெழுந்த திரைப் பிரபலங்கள்

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

seenuramasamy, karthick subbaraj, yuga bharathi about nanguneri issue

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி மற்றும் அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை ஒரு வார காலம் பள்ளிக்கு போகாமலே இருந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மகனைப் பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்த போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த தொந்தரவு செய்த மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2  மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்களைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவில், "கொடூரமான வெட்கக்கேடான பரிதாபகரமான சாதி வெறியர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இதனிடையே சீனு ராமசாமி, "நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை உடன்படிக்கும்  பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய வெறிச் செயல் கொடுமையிலும் கொடுமை. காயம்பட்ட மாணவர்களுக்கு நீதிதான் சமூகநீதி. மாணவச் செல்வங்கள் உடல்நலம் தேறி விரைந்து இல்லம் வரவேண்டுகிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

 

மேலும் பாடலாசிரியர் யுகபாரதி, "சாதீய சமூகத்தின் கொஞ்சமும் மாறாத 'படி'நிலைகள், கோபத்தையும் கண்ணீரையும் சேர்த்தே கேட்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிரந்தர தீர்வும் இந்த மண்ணில் எப்போதுதான் கிடைக்குமோ?" எனத் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

Next Story

யுகபாரதி வரிகளில் கவனம் ஈர்க்கும் 'ஐஸ்வர்யா முருகன்' பட பாடல்

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

iswarya murugan movie third song released

 

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘ரேணிகுண்டா’ படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்கவைத்த இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம், தற்போது ‘ஐஸ்வர்யா முருகன்’ படத்தை இயக்கிவருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘கருப்பன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண் பன்னீர்செல்வம், வித்யா, ஹரிஷ் லல்வானி, ஸ்ரீ சாய் சங்கீத் உள்ளிட்ட பல புதுமுக நடிகர்களை வைத்து ‘ஐஸ்வர்யா முருகன்’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை மாஸ்டர் பீஸ் நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர். வெங்கடேஷ் மற்றும் கே. வினோத் ஆகியோர் தயாரிக்க, கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். காதல் திருமணத்திற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..’ என்ற படத்தின் மூன்றாவது பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. யுகபாரதி வரிகளில், கிராமிய பாடகர் முத்துசிற்பி குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.