Skip to main content

அடுத்த தலைமுறைக்கான இளைஞர் படை ரெடி!

Published on 05/02/2018 | Edited on 05/02/2018
அடுத்த தலைமுறைக்கான இளைஞர் படை  ரெடி!
 -உதயநிதி ஸ்டாலின்


தி.மு.க.வின் தலைமைக் குடும்பத்திலிருந்து மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியாக கட்சியின் இருவண்ணக் கொடியை கையில் ஏந்தி போராட்டக் களத்தில் இறங்கி தனது அரசியல் என்ட்ரியை உறுதிப்படுத்தியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க. மீதான குடும்ப அரசியல் என்ற இமேஜையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் தவிர்க்கும் வகையில் புதிய வியூகங்களை வகுப்பவராக அறியப்பட்ட அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் வாரிசே நேரடி அரசியலுக்கு வந்திருப்பதன் நோக்கம் என்ன என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் கடுமையாக எதிரொலிக்கிறது. அதுபற்றிய பதிலை அறிய, மதுரை வாடிப்பட்டியில் கடந்த 10 நாட்களாக சீனுராமசாமி இயக்கத்தில் "கண்ணே கலைமானே' படத்தின் பரபரப்பான படப்பிடிப்பிற்கிடையே உணவு இடைவேளையில் உதயநிதியை சந்தித்தோம். கையில் சேகுவேரா பற்றிய புத்தகத்துடன், கேள்விக்கணைகளை எதிர்கொண்டார்.

சினிமாவில் பிஸியாக இருக்கிறீர்கள்... ரஜினி, கமல் அரசியலில் இறங்குவதைப் பார்த்ததும் நீங்களும் திடீர் ஆர்வத்துடன் அரசியல் களத்தில் இறங்கிவிட்டீர்களா?

உதயநிதி: திடீரென நான் இறங்கவில்லை. சிறுவயதிலிருந்தே தாத்தா (கலைஞர்) கூட பொதுக்கூட்டங்களிலும் போராட்டங்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன். தந்தையுடன் (மு.க.ஸ்டாலின்) தேர்தல் பிரச்சாரங்களில் அதிகளவில் பங்குகொண்டிருக்கிறேன். என் ரத்தமே அரசியல் ரத்தம்தான்.…நான் கருவில் இருக்கும்போதே சமூகநீதி, இந்தி எதிர்ப்பு என திராவிட கொள்கையில் ஊறி வளர்ந்தவன். …

நீங்கள் தாத்தா வழியா? அப்பா வழியா?

உதயநிதி: நீங்க பெரியார் வழியா, அண்ணா வழியா என்று மறைமுகமாக கேட்கிறீர்கள் அப்படிதானே? செயல்தலைவரே சொல்லிருக்காரே "பெரியாரின் நீட்சிதான் அண்ணா' என்று.… எனக்கு இருவருமே இரு கண்கள்.

கடவுள் நம்பிக்கை?

உதயநிதி: அதில் நான் பெரியார் வழி.…அதற்காக யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை; ஆனால் நம் கருத்தை முன்வைப்பதில் தப்பில்லை.…அதையும் தாண்டி பெண்ணியம், ஆணாதிக்க எதிர்ப்பு, சமூகநீதி, மொழி, இனம் என பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் தி.மு.க. முன்னெடுத்து சென்றுகொண்டுதான் இருக்கிறது. அதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுப்பதில்லை.…

கையில் சேகுவேரா புத்தகம் வைத்துள்ளீர்கள் கம்யூனிசம் பிடிக்குமோ?

உதயநிதி: இத்தகைய புத்தகங்களை விரும்பிப் படிக்கிறேன். தாத்தாவே சொல்லியிருக்கிறாரே, "திராவிட இயக்கம் தோன்றவில்லை என்றால் நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்' என்று! கம்யூனிஸத்தையும் உள்வாங்கியதுதான் தி.மு.க.…

அரசியல் மேடை -போராட்டம் என நேரடியாகக் களத்திற்கு வந்துவிட்ட உங்களுக்கு கட்சியில் இளைஞர் அணி தலைமைப் பொறுப்பு தரப்படும் என செய்திகள் கசிகிறதே?

உதயநிதி: எனக்கு அப்படியெல்லாம் பதவிக்கு வரவேண்டும் என்ற  நினைப்பே இல்லை. போராட்டத்தில் உண்மையான உணர்வுடன் பங்கேற்றேன். சாதாரண மக்கள் அன்றாடம் போய் வரும் பேருந்தின் கட்டணத்தில்கூட இந்த அரசாங்கம் அநியாயமா கையவச்சா என்னங்க நியாயம்? அதையெல்லாம் தாங்கமுடியாமத்தான் கொடியை பிடிச்சுக் கலந்துகிட்டேன்.…

சரி முழுமையா அரசியலுக்கு எப்போது வருவீர்கள்?

உதயநிதி: எப்போதுமே நான் அரசியலில்தான் இருக்கிறேன்.…மக்களோடு மக்களாக, தொண்டனோடு தொண்டனாக முழுமையாக இருப்பேன்.

எம்.எல்.ஏ. அல்லது எம்.பி., தேர்தலில் நிற்பீர்களா?

உதயநிதி: கட்டாயம் நிற்கமாட்டேன்.

தி.மு.க.வின் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று உங்கள் அப்பா சொல்லியிருக்கிறாரே, அதில் நீங்களும் இடம்பிடிக்க விரும்புவீர்களா?

உதயநிதி: கழக செயல்தலைவர் மிகுந்த ஊக்கத்துடன் கழக வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். முந்தைய தலைமுறையின் வழிகாட்டுதலுடன் அடுத்த தலைமுறைக்கான வீரியமான திராவிட இளைஞர் படை உருவாகி, ரெடியாக இருக்கிறது. விரைவில் நீங்கள் அதைப் பார்க்கப்போகிறீர்கள்.

ஜெயலலிதா அரசு -எடப்பாடி அரசு ஓர் ஒப்பீடு?

உதயநிதி: மோசம் -படுமோசம்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் பற்றி?

உதயநிதி: முதல்ல, கவர்னர் உள்ளிட்ட அரசியல் சாசனப் பதவிக்குரியவர்கள் இருந்த அந்த மேடையில் அவருக்கென்று மேடையின்மேல் தனிமேடை போட்டதே தவறு என்பேன். மனிதன் அனைவரும் சமமே. …அதுவும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்காதது மன்னிக்கமுடியாத குற்றம்.…"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று பாடிய பாரதிதாசன்தான் என் நினைவுக்கு வருகிறார்.

ஆண்டாள்………-வைரமுத்து -ஜீயர்?

உதயநிதி: (சிரிக்கிறார்) அதுதான் வருத்தம் தெரிவித்துவிட்டாரே... விட்டுவிடலாமே. எனக்கு என்னமோ வேண்டுமென்றே அவர்கள் திரும்பத் திரும்ப பேசுவது நியாயமாகத் தெரியவில்லை.

நக்கீரன் பற்றி?

உதயநிதி: தைரியம் அதன் அடையாளம்; அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.…

அரசியல் பணிகளில் பிஸியாகிவிட்டீர்கள். தமிழ் சினிமா எப்படி இருக்கு?

உதயநிதி: தமிழ் சினிமா புதிய புதிய இளைஞர்களால் உலகத் தரத்திற்கு இணையாக போய்க்கொண்டிருக்கிறது.…அரசியலைப் போல சினிமாவும் எனக்கு புதுசு இல்லை.

துரைதயாநிதியுடன் உள்ள தொடர்பு, நட்பு இன்றையச் சூழ்நிலையில் எப்படி உள்ளது?

உதயநிதி: சினிமாவில் பிஸியா இருப்பதனாலோ என்னமோ, அவருடன் பேசி சில மாதங்கள் ஆகின்றன.

உங்க  பெரியப்பாவும் அப்பாவும் இணைப்பு சாத்தியமா? உங்களின் பங்களிப்பு என்ன?

உதயநிதி: அது பெரியவர்களின் சமாச்சாரம். நான் என்ன சொல்லுவது? ப்ளீஸ்... …

-சந்திப்பு: அண்ணல்

சார்ந்த செய்திகள்