Advertisment

அந்த ஆனந்தக் கண்ணீருக்காகத்தான் எல்லாமே! - புன்னகையை மீட்டுத்தரும் இளம் டீம்!

“சாக்ராபத்… சாக்ராபத்… என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் அவரிடமிருந்து வரவேயில்லை. அது பெயராகவோ, ஊராகவோ அல்லது அவருக்குத் தொடர்புடைய எதுவாகவோகூட இருந்திருக்கலாம். அதீத குழப்பத்திலும் வாய்ப்புகளைத் தேடினோம். விடை கிடைத்தது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருக்கும் ஷாகிராபாத்’தான் அது. அவரது பெயர் தப்ரீஷ் அகமது. பின்னர் அவரது குடும்பத்திற்கு தகவல்கொடுத்து, அவர்களின் முன்னிலையே தப்ரீஷ் தொலைந்துபோன காப்பகத்தில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டோம்” - என்று ஃபாரிஹா சுமன் சொல்வதை ஆர்வமும், ஆச்சர்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

Advertisment

fariha suman

ஃபாரிஹா சுமன்

ஃபாரிஹா சுமன், 23 வயது இளம்பெண். வேலூரைச் சேர்ந்தவர். சென்னை ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தில் முதுநிலை சமூகப்பணி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். சிறுவயதில் இருந்தே துடிப்பும், சமூக அக்கறையும் கொண்டவரான ஃபாரிஹா, நல்ல ஆதாயம் தரும் வாய்ப்புகள் பல கிடைத்தும், Aspiring Lives அறக்கட்டளையை தொடங்கி சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

manishkumar

மணீஷ்குமார்

Advertisment

அரசு மற்றும் தனியார்த் துறைகளில் மண்டிக்கிடக்கும் ஊழலைப் பொறுத்துக் கொள்ளாமல், லட்சக்கணக்கில் ஊதியம்கொடுத்த வேலைகள், செல்வச் செழிப்பான குடும்பம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்த அறக்கட்டளைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்படுகிறார் பீஹாரைச் சேர்ந்த மணீஷ்குமார். நிறுவனராக ஃபாரிஹா சுமனும், நிர்வாகத் தலைமையாக மணீஷ்குமாரும் என இருவர் மட்டுமே Aspiring Lives அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டே பணிகளைத் தொடங்கி, 2018, மே 08-ல் சட்டப்பூர்வமாக பதிந்துள்ள அவர்களது அறக்கட்டளையின் அடிப்படை நோக்கம் – இளைஞர் மற்றும் சமூக மேம்பாடு. அதன் தொடக்கப்புள்ளியாக வைத்ததுதான் ‘பிரத்யாஷா’ திட்டம். பிரத்யாஷா என்றால் நம்பிக்கை! இந்தத் திட்டத்தின் மூலம் பிறமாநிலங்களில் இருந்து தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து குடும்பத்தைப் பிரிந்ததால் மனநலம் குன்றியவர்களை, அவர்களது குடும்பத்தினரிடமே சேர்த்துவைப்பது.

இதுபற்றி Aspiring Lives நிறுவனர் ஃபாரிஹா சுமனிடம் கேட்டபோது, “ஒரு சிறு தனிமையைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது நம்மால். ஆனால், தன் குடும்பத்தினரை, நண்பர்களை கிட்டத்தட்ட 35 ஆண்டுகள்கூட பிரிந்திருப்பவர்களைப் நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகங்களில் இருப்பார்கள். காப்பகங்கள் எங்களை அணுகி, அவர்களிடம் பேச வைப்பார்கள். பாதிக்கப்பட்ட நபர் திடீரென ஆக்ரோஷம் அடையலாம். அவர்மீது துர்நாற்றம் வீசலாம். நமது பேச்சை சட்டை செய்யாமல் போகலாம். எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். ரீ-யூனியனில் இருக்கும் மிகப்பெரிய சவாலே பாதிக்கப்பட்டவரிடமிருந்து தகவலைப் பெறுவதுதான். அதைப் பெற்றுவிட்டாலே வேலைகிட்டத்தட்ட முடிந்துவிடும். கிடைக்கும் ஏதோவொரு தகவலை வைத்து இணையதளத்தில் தேடி, அந்த ஊரின் காவல்நிலையத்தை அணுகி முகவரியைப் பெறுவோம். குடும்பத்தினர் நேரே வந்து கூட்டிச் செல்வார்கள். பல ஆண்டுகளாக திரும்பவே மாட்டார் என்ற அவநம்பிக்கையில் காரியம் செய்தவர்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்திருக்கிறோம். ஆனந்தம் பொங்கி கண்ணீராக வழியும் அந்த நிமிடத்திற்காகத்தான் இதெல்லாம்” என்றார் உற்சாகமாக.

family rejoining

இதுவரை தமிழகம், கேரளாவில் இருந்து மட்டுமே 15 மாநிலங்களைச் சேர்ந்த 81 பேரை ஒரே வருடத்தில் அவர்களது குடும்பத்தினரிடம் சேர்த்திருக்கிறது Aspiring Lives அறக்கட்டளை. இதற்காக பணமோ, பொருளோ எதிர்பார்ப்பதில்லை. தன் மகளோடு மனநலம் குன்றியநிலையில், சென்னை லிட்டில் ஹார்ட்ஸ் காப்பகத்தில் இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சர்ளாவையும் அவரது மகள் பின்கியையும், அவரது கணவரிடம் சேர்த்துள்ளது Aspiring Lives அறக்கட்டளை. சர்ளாவின் கணவர் சுனிலிடம் பேசியபோது, “சர்ளாவும் மகள் பின்கியும் உறங்குகிறார்கள். இன்று நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம். எல்லா வளமும் கூடிவருகிறது” என்றார் மகிழ்ச்சியான குரலில்.

family rejoining 2

ஃபாரிஹா ரியூனியன் விவரங்களை விளக்கிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட மணீஷ்குமார், “வடமாநிலங்களில் அறக்கட்டளைகள் வெறும் கண்துடைப்புக்காகவே செயல்படுகின்றன. நாங்கள் அப்படி இருந்துவிடக்கூடாது என்கிற பயமே இப்போதுவரை நேர்மையாக இயங்கச் செய்கிறது. நம் இந்திய அரசுக்கோ, காவல்துறைக்கோ, பொதுமக்களுக்கோகூட ரியூனியன் பற்றிய புரிதல் கிடையாது. அதனால் ஏற்படும் அலட்சியமே எங்களது பணிக்கு வேகத்தடை. இந்தியா மாதிரியான குடும்பச் சூழலுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு நாட்டிற்கு இது மிகப்பெரிய பின்னடைவு. இந்தியாவிலேயே ஃபாரிஹா மட்டுமே ரியூனியன் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்கிறாள் என்பதே அதற்கு உதாரணம்” என்றார் ஆதங்கத்துடன்.

family rejoining 3

இதுதொடர்பாக அரசுகளுக்கு என்ன கோரிக்கை வைக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டபோது, “மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போகிறவர்களை மீட்டு மனநலக் காப்பகங்களில் சேர்த்துவிடுவதே காவல்துறையினர்தான். ஆனால், அவர்களை காவலர்கள் ஒரு புகைப்படம்கூட எடுத்துக் கொள்வதில்லை. எந்தத் தரவுகளையும் பெற்றுக் கொள்வதுமில்லை. இது முறைப்படுத்தப் படவேண்டும். மேலும், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினரும் ஒரு இணைப்பில் இருக்கும்போது, தரவு பரிமாற்றம் கடினமானதாக இருக்காது. அதேபோல், மத்திய அரசு இந்தியா முழுமைக்குமான ரியூனியன் இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தும் விதமாக உருவாக்கினால், அது தொலைந்து போகிறவர்களைக் கண்டுபிடிக்க பேருதவியாக இருக்கும்” என்று வலியுறுத்துகிறார்கள் இருவருமே.

குடும்பத்தைத் தொலைத்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, அவர்களது அன்பானவர்களின் அழகிய நினைவுகளும், நிமிடங்களும் சேர்ந்தே தொலைந்துபோகின்றன. அதை மீட்டெடுக்கும் Aspiring Lives அறக்கட்டளையின் முயற்சி பாராட்டுக்குரியது.

humanity motivation Social organization
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe