Skip to main content

ஒரு ஓட்டுப் போட ஒரு லட்சம் செலவு செய்து கடல் கடந்து பறந்து வந்த இளைஞர்கள்

Published on 02/04/2019 | Edited on 02/04/2019




 

    ஒவ்வொரு வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். உங்கள் ஓட்டு உங்கள் உரிமை. ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது. பணம் கொடுக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் பல கோடிகளை செலவு செய்து பல்வேறு வகையிலும் 100 சதவீதம் வாக்கு பதிவிற்கு பிரச்சாரங்களும், விளம்பரங்களும் செய்து வருகிறது. தன்னார்வ அமைப்புகளும், கல்லூரி, பள்ளி மாணவர்களும் விழிப்புணர்வு நாடகம், பேரணி, கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.  அப்படியும் முழு வாக்கு பதிவு நடந்துவிடவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அரசியல் கட்சிகளும் நிறுத்தவில்லை. வாக்காளர்களும் வாங்குவதை நிறுத்தவில்லை. பல இடங்களிலும் சிக்கியுள்ள பணத்தால் தேர்தல்களே ரத்து செய்யும் நிலை வரை சென்றுள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர், அரவாக்குறிச்சி தேர்தல்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் போய் தான் நிறுத்தப்பட்டது. 

 

    இந்த நிலையில் ஒரு ஓட்டு போட 3 ஆயிரம் கி.மீ கடல் கடந்து சுமார் ஒரு லட்சம் பணம் செலவு செய்து வாக்களிக்க வந்திருக்கிறார்கள் இளைஞர்கள். அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும். அவர்களைப் பார்த்து வாக்காளர்களும் விழிப்பணர்வு பெற வேண்டும்.



 

from abroad

  

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ளது மங்களநாடு கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த  பீர்முகமது மகன் முகமது பாரூக் (வயது 46), அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேக் இஸ்மாயில் (வயது 43 ) இவர்கள் இருவரும் மலேசியாவில் இருந்து ஓட்டுப் போட  சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இன்றும் சில நாட்களில் சுமார் 50 இளைஞர்கள் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வர உள்ளனர். இதில் பாரூக் கடந்த தனது முதல் ஓட்டை 1991 ல் பதிவு செய்தவர் பிறகு 1995 ல் வெளிநாடு சென்ற பிறகு ஒவ்வொரு பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலுக்கும் சொந்த ஊருக்கு வந்து வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் பல்வேறு காரணங்களால் வாக்களிக்க வரமுடியவில்லை என்று மன வேதனையில் இருந்துள்ளார். தற்போது 17 வது மக்களவை தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். வாக்களித்த மறுநாள் மலேசியா செல்கிறார். இவரைப் பற்றி 2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வந்த போது நக்கீரன் இணையத்தில் முதலில் செய்தி வெளியிட்டோம். அதைப் பார்த்த பிறகு பல இளைஞர்களும் தற்போதைய தேர்தலுக்கு வாக்களிக்க சொந்த ஊருக்கு வருகிறார்கள். அதில் முதல் ஆளாக அரசர்குளம் சேக் இஸ்மாயில் வந்துவிட்டார். அவர்கள் சொல்வதை கேட்கலாம்..
 

மங்களநாடு முகமது பாரூக்..
 

    என் தந்தை வெளிநாட்டில் இருக்கும் போது ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வீட்டுக்கு தகவல் கொடுப்பார். வாக்காளர் கணக்கெடுப்பு வந்தால் நான் ஓட்டுப் போட வந்துவிடுவேன் என்று பதிவு செய்யுங்கள். வெளிநாட்டில் இருப்பதாக மட்டும் சொன்னால் பெயரை நீக்கிவிடுவார்கள். அது செத்தவனுக்கு சமம் என்று சொல்வார். தவறாமல் வாக்களிக்க வருவார். 

 

from abroad


 

    நான் 1991 ல் என் முதல் வாக்கை பதிவு செய்தேன். பிறகு 1995 ல் பிழைப்பிற்காக மலேசியா சென்றேன். நான் அங்கே இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலுக்கு ஊருக்கு வந்து ஓட்டுப் போட்டுவிட்டு போவேன். இது ஜனநாயக கடமை இல்லையா. நான் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் அது என் விருப்பம். ஆனால் நம் ஓட்டை நாம் போட்டே ஆக வேண்டும்.  
 

    நான் ஓட்டுப் போட சொந்த ஊருக்கு போறேன்னு சொல்லும் போது எல்லாம் நண்பர்கள் என்னை கிண்டல் செய்வார்கள். ஒரு மாத சம்பளம் இழப்பு, 35 ஆயிரம் டிக்கெட் செலவு இப்படி ஒரு லட்சம் வரை செலவு செய்து போய் ஒரு ஓட்டு போடனுமா என்பார்கள். நான் அவர்களிடம் சொல்வத எல்லாம் நம் உரிமை அது. ஒரு முறை ஓட்டுப் போடலன்னா ஓட்டு பட்டியலில் பெயரை நீக்கிவிடுவார்கள். அப்பறம் நான் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை. அதனால் தான் பஞ்சாயத்து தேர்தல் வரை அத்தனை தேர்தலுக்கும் ஓட்டுப் போடுறேன். எனக்கு ஒரு லட்சம் செலவை விட ஒரு ஓட்டு முக்கியம் என்று சொல்வேன்.


    அப்படி தான் 2016 ல் நான் வந்து வாக்களித்த போது நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியானது. அதைப் பார்த்து மலேசியாவில் பல பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டது. அதன் பிறகு என்னை கிண்டல் செய்த இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்றனர். இப்போது பலரும் சொந்த ஊருக்கு வருவோம் ஓட்டுப் போடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். சிலர் வந்துவிட்டனர். பலர் 18 ந் தேதிக்குள் வந்துவிடுவார்கள் என்றவர்..
 

    முன்பு தேர்தலுக்கு நான் ஊருக்கு வரும் போது எல்லாம் கிராமங்களில் கொடி, தோரணங்கள், வீட்டு சுவர்களில் சின்னங்கள் இருக்கும் வீதிக்கு வீதி விளம்பர வாகனங்கள் அதையெல்லாம் பார்க்கும் போது திருவிழா போல இருக்கும். ஆனா இப்ப ஒரு விளம்பர வண்டிய கூட பார்க்க முடியல். தேர்தல் நாள் பக்கத்தில் வந்துவிட்டதுக்கு கூட அறிகுறி தெரியல. 


    நான் புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கி வட்டம். ஆனால் தொகுதி சீரமைப்பில் காலங்காலமாக இருந்த என் மாவத்தின் பெயரில் இருந்த தொகதி பறிக்கப்பட்டு 150 கி.மீ தூரத்தில் உள்ள சிவகங்கை தொகுதிக்கு வாக்களிக்கிறேன் என்ற மன வருத்தம் ஒவ்வொரு முறையும் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அதனால் மீண்டும் புதுக்கோட்டை என்ற பாராளுமன்றத் தொகுதியை மீட்கப்பட வேண்டும். அதற்கு தற்போது போட்டியிடும் வேட்பாளர்களில் வெற்றி பெறும் வேட்பாளர் அதற்காண முயற்சி எடுக்க வேண்டும் என்றார். மேலும் காசுக்கு ஓட்டுப் போடாதீங்க என்றார்.

அரசர்குளம் சேக் இஸ்மாயில்.. 


    43 வயதான நான் மலேசியாவில் வேலை செய்றேன். பாரூக் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓட்டுப் போட வரும் போது எல்லாம் நானும் கிண்டல் செய்தவன் தான். ஆனால் அவர் செய்யும் செயல் மிகப்பெரிய செயல் என்பதை செய்திகள் மூலம் அறிந்தேன். அதன் பிறகு நானும் ஓட்டுப் போட சொந்த ஊருக்கு போகனும் என்ற எண்ணம் கொண்டேன். 

    இப்ப என் ஒரு மாத சம்பளம், விமான செலவு எல்லாம் சுமார் ரூ. ஒரு லட்சம் எனக்கு இழப்பு தான். ஆனால் ஒரு ஓட்டு போடும் போது விரலில் வைக்கப்படும் மை எனக்கு மன நிறைவை கொடுக்கிறது. அதற்காகவே ஒரு லட்சம் எனக்கு பெரிதல்ல என்பதை உணர்கிறேன். நான் விரும்பியவருக்கு ஓட்டுப் போட உரிமை உள்ளது. யாரையும் பிடிக்கலன்னா நோட்டா இருக்கு. எதில் போட்டாலும் தவறாமல் ஓட்டுப் போடனும்.

    டீ கடையில் உக்காந்து ஊழல் பெருகிப் போச்சு என்று பேசிக் கொண்டு ஓட்டுப் போடாமல் வீட்டில் இருந்து முகநூலில் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்களே.. ஒரு நல்ல தலைவனை நல்ல அரசாங்கத்தை உன்னால் தான் தேர்ந்தெடுக்க முடியும். அதற்கு நீ முதலில் வாக்களிக்க வேண்டும். அப்போது தான் ஊழல் இல்லாத ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்பதை முதலில் நீ நம்ப வேண்டும்.  ஊழல் என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தால் நீ விரும்பும் நல்ல அரசாங்கத்தை உருவாக்க மடியாது. உன் ஒரு வாக்கு அரசாங்கத்தை மாற்றும் என்பதை உணர வேண்டும். அதனால் தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு செல் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களி.. 

    ஆனால் ஓட்டுக்கு பணம் வாங்காதே.. ரூ. 100, 200 க்கு ஓட்டுப் போடும் போது தான் நல்ல சமூதாயம் உருவாக்க முடியவில்லை. நீ 100 வாங்குவதால் என்ன பலன். என்னைப் போல பல இளைஞர்கள் பல லட்சம் செலவு செய்து வந்து ஓட்டுப் போடுகிறோம். நான் ஊருக்கு வந்த நாளில் ஒரு கட்சி வேட்பாளர் அழைக்கிறார் என்று ரூ. 100 கொடுத்து பெண்களை அழைத்துச் சென்றார்கள். அதைப் பார்த்து என் மனம் தான் வேதனை அடைகிறது. இனிமேல் அதை தடுத்து நிறுத்திவிட்டு சுயமாக சிநத்தித்து வாக்க்களிக்க வேண்டும். பணம் கொடுப்பது குற்றம் என்றால் வாங்குவது அதைவிடப் பெரிய குற்றம் என்றார். 

    ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையில் ஒரு ஓட்டு போட ஒரு லட்சம் செலவு செய்து சொந்த ஊருக்கு வரும் இளைஞர்களை பாராட்டுவோம். வாக்களிக்க வேண்டாம் என்று வீட்டில் இருப்பவர்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்போம்.
 

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.