Skip to main content

“நீ கேடின்னா.. நான் கில்லாடி”

 


அகில உலக தாதாவான அமெரிக்காவின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது வடகொரியா. வரிசையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வந்த அந்த நாடு, தற்போது ஹைட்ரஜன் குண்டு சோதனையையும் நடத்திவிட்டது. வடகொரியாவைப் பொருத்தவரையில் இது ஆறாவது அணுகுண்டு சோதனை. மேலும், இதற்கு முன்னர் அது நடத்திய ஐந்து சோதனைகளை விட இது ஆறு மடங்கு சக்திவாய்ந்தது. தரைக்கடியில் நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது 5.7 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தென்கொரியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சோதனை நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு மற்றொரு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சீனாவும் தெரிவித்தது. இவற்றிற்கெல்லாம் ஆதாரமாக ஹைட்ரஜன் குண்டினை வட கொரிய அதிபர் கிம் ஜாங் யுன் பார்வையிடுவது மாதிரியான புகைப்படமும் வெளியிடப்பட்டது.இந்த அணுகுண்டு சோதனையின் தாக்கம் அமெரிக்காவை மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை போர் வந்தால் யார் முதலில் தாக்குதலைத் தொடங்குவார்கள் என்ற கேள்வி வரை நிகழ்கால நிகழ்வுகள் நீட்டத் தொடங்கிவிட்டன. அமெரிக்காவின் மீது வடகொரியா இத்தனை வன்மத்துடன் தாக்குதல்களைத் தொடுக்கத் தயாராக இருப்பதன் பின்னணியில் இருப்பது நான்கு கோரிக்கைகள் மட்டுமே. அவை, நீண்ட நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் கொரியப் போரினை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதிக்கான ஒப்பந்தம், 1945ஆம் ஆண்டு முதல் பிரிந்து கிடக்கும் வட மற்றும் தென் கொரிய நாடுகளை இணைப்பது, தென்கொரியாவில் இருந்து அமெரிக்க ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைக் களைய பியான்யாங் மற்றும் வாசிங்டன் இடையே பேச்சுவார்த்தை. இதில் ஒன்றைக்கூட அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவேயில்லை.

கடந்த 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் இதழ்தான், முதன்முதலில் இளம் அதிபர் கிம் அமெரிக்காவின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தப் போவதாக செய்திகளை வெளியிட்டது. அப்போது இருந்த வடகொரியாவுக்கும், இப்போது இருக்கும் வடகொரியாவுக்குமான வித்தியாசம் தான் இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை. இந்த வித்தியாசத்தை அமெரிக்காவும் தெரிந்தேதான் வைத்திருக்கிறது. இப்போது வடகொரியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஹைட்ரஜன் குண்டினை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையோடு பொருத்திக்கொள்ளலாம். அதன் எடை 50 அல்லது 120 கிலோவாக இருக்கலாம். 1945ஆம் ஆண்டு ஹிரோஷிமாவின் மீது வீசப்பட்ட குண்டின் எடை 15 கிலோகிராம் தான் என்றால், தற்போதைய குண்டு ஏற்படுத்தும் பாதிப்பின் அளவை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ‘தென்கொரியா உடன் உடைக்க முடியாத உறவைக் கொண்டுள்ளோம். உலகின் அனைத்து நாடுகளும் நட்புறவுடன் இருக்கின்றன. வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நிறுத்தாவிட்டால், உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்படும்’ என எச்சரிக்கும் தொனியில் சொன்னார். வடகொரியா இன்றுவரை இதைக் கொஞ்சமும் மதிக்காதது தான் உண்மை. இத்தனைக்கும் ஒவ்வொரு முறை வடகொரியாவில் ஏவுகணை சோதனை நடத்தும்போதும் அந்நாட்டு மக்கள் ஆட்டமும், பாட்டமுமாக கொண்டாடித் தீர்க்கின்றனர்.கடந்த மாதம் அமெரிக்காவின் குவாம் தீவின் மீது தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அறிவித்தது. தாக்குதலை எதிர்கொள்ள முடியாமலா இருக்கும் அமெரிக்கா? தென்கொரியாவில் உள்ள அதன் ராணுவத் தளவாடங்களில் தாட் மற்றும் ஏஜிஸ் தொழில்நுட்பங்களின் மூலம் ஒரே நேரத்தில் 100 ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்க அமெரிக்காவால் முடியும். ஆனால், தற்போதைய நிலைமை வேறு! பாயப்போவது ஹைட்ரஜன் குண்டுகள். அவை எங்கு வெடித்தாலும் ஆபத்தின் அளவு குறையப்போவதில்லை. 

சீனாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது. ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தும் இந்த சமயம் அதே சீனாவில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளின் போதும் சீனாவின் வெளியுறவுத்துறை வடகொரியாவை கடுமையாக விமர்சித்தது. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட சீனாவும், ரஷ்யாவும் பேச்சுவார்த்தையின் மூலம் இதற்கு தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் என வடகொரியாவை அறிவுறுத்தியுள்ளன. அதேசமயம் கொரியாவை பொருளாதார ரீதியில் அமெரிக்கா ஒடுக்க நினைப்பது, ‘ஏற்றுக்கொள்ள முடியாது’ என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பேசியுள்ளார். பேச்சுவார்த்தை குறித்து பேச்சைத் துவங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரியவில்லை. போர் தொடங்குமா? என்ற கேள்விக்கும் ‘பார்ப்போம்’ என்ற ஒற்றைப் பதிலுடன் கடந்துசென்றுள்ளார் அதிபர் ட்ரம்ப். மேலும், இனி பேசிப் பிரயோஜனம் இல்லை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அவர்.ஈராக்கின் வளங்களைச் சுரண்ட, அந்த நாட்டில் அணு ஆயுதங்கள் இருப்பதாக ஒரு பொய்யைச் சொல்லி நேரடியாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அராஜகம் செய்தது அமெரிக்கா. தற்போது நேரடியாக தன்னிடம் அணுஆயுதம் இருப்பதாக ஒரு நாடு சொல்லிக் கொண்டிருக்கும் போது, அதே அமெரிக்கா அடக்கி வாசிப்பது வியப்பிற்குரிய ஒன்று. பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் மிகச்சிறிய நாடான வடகொரியா, உலகபெருமுதலாளியான அமெரிக்காவையும், உலகபெருமுதலாளி நாடுகளின் கூட்டமைப்பான ஐநாவையும் ஒருசேர எதிர்ப்பது மிகப்பெரிய விஷயம். போர் என்ற ஒன்று வந்தால், இரண்டு பக்கத்திற்கும் அழிவு நிச்சயம் என்பதை வடகொரியா அறியாமலா இருக்கும்?

- ச.ப.மதிவாணன்