Yogibabu's brother yogi raja's temple issue

நடிகர் யோகிபாபுவின் அண்ணன் சாமியாராக உள்ளார். அவர் கிராம மக்களை அழித்துவிடுவேன் என மிரட்டுகிறார், குடியிருக்கும் வீடுகளை காலி செய்யச்சொல்கிறார். பலி தருகிறார் என நமக்கு வந்த மின்னஞ்சல் புகாரைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கினோம்.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது மேல்நாகரம்பாடி கிராமம். முழுக்க முழுக்க விவசாயக் குடும்பங்கள் நிறைந்த கிராமம். அதே ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவரிடம் புகாரைச் சொல்லிக் கேட்டபோது, “ஆறுமுகம், பொக்கிஷம், முனியன் மூவரும் அண்ணன் தம்பிகள். இவுங்க குடும்பமே கலைக்குடும்பம். நடிகர் யோகிபாபுவின் தாத்தா பொக்கு என்கிற பொக்கிஷம் தெருக்கூத்துக் கலைஞர். தெருக்கூத்து குரூப் வைத்து நடத்திக்கொண்டிருந்தார்.தெருக்கூத்தில் எல்லா வேஷமும் கட்டுவார் பொக்கு. அவரின் மகன் விஸ்வநாதன்ஆர்மியில் வேலை செய்தவர். அவருக்கு வேலு, ராஜா, பாபு, விஜயன் என 4 மகன்கள்,ஒரு மகள். நடிகர் யோகிபாபு மூன்றாவது மகன். இரண்டாவது மகன் யோகிராஜா தான் சாமியாராக இருக்கிறார்.

Advertisment

Yogibabu's brother yogi raja's temple issue

இவர்களது குடும்பம் பக்கத்து ஊரான வாழைப்பந்தலுக்கு குடிபோய்விட்டது. திருமணம் செய்துகொள்ளாத யோகிராஜா சாமியாராகிவிட்டார். தினமும் ஊருக்கு வந்துவிடுவார். ஊர் புறம்போக்கு இடத்தில் காளி கோவில் கட்டினார். அங்கு மின் இணைப்பு வாங்க முயன்றபோது அதிகாரிகள் தரமறுத்துவிட்டார்கள். இதனால் இடிந்துபோயிருந்த அவர்களது பூர்வீக வீட்டை மொத்தமாக இடித்துவிட்டு அங்காளம்மன் கோவில் கட்டினார். அதன் பக்கத்தில் வராஹி அம்மன் சந்நிதி அமைத்தார். கருமாரியம்மன் சிலை அமைத்தார். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இரவில் ஆடு, கோழி, பன்றிகளை பலிகொடுக்கிறார். கோவிலில் தினமும் பக்திப் பாட்டு ரேடியோவில் போடுவார்கள். இரவு 11 மணி வரை பாடிக்கொண்டே இருக்கும். அது தெருவாசிகளுக்குத் தொந்தரவாக இருக்கிறது. அவர் பில்லி, சூனியம் வைப்பதாக கூறப்படுகிறது. இதனால் அத்தெருவிலுள்ள மக்கள் அவரை எதிர்த்துப் பேச மறுக்கிறார்கள்” என்றார்.

வேதபுரி என்கிற பெரியவர் நம்மிடம், “அந்த கோவில் இருக்கற வீட்டுக்கு மூணாவது வீடுதான் என்னோடது. கோவில் கட்டி குறி சொல்லிக்கிட்டு இருக்கார். அந்த கோவிலால எங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. அந்த சாமியார் பையன் மேல யாரோ வீணா புகார் சொல்றாங்க. அந்த பையன் குண்டா இருப்பார். யாரையும் வீட்டைக் காலி பண்ணி போன்னு சொல்லல. கருமாரியம்மன் கோவில் இருக்கற தெருவில் யாரும் குடியிருக்கக்கூடாது. அப்படியிருந்தா தெருவில் இருப்பவங்களை அம்மனே காலி செய்துடும்னு வந்துட்டுப் போற பெரியவங்க சொன்னதால் தெருமக்கள் பயந்துக்கிட்டு இருந்தாங்க. இப்ப அதை யாரும் கண்டுக்கறதில்லை. ஊர்க்காரங்க எல்லாருமே அந்த கோவிலுக்குப் போய் சாமி கும்பிடறாங்க. இருபது நாளைக்கு முன்னாடி கோவில்ல தினமும் பாட்டுப் போடறதால சத்தமா இருக்குன்னு தெருக்காரங்க சொன்னாங்க. அதுக்கப்புறம் அவுங்க போடறதில்ல. கோவிலுக்காக ஊர்ல யார்கிட்டயும் காசு வாங்கறதில்லை. கோவில் கும்பாபிஷேகம், திருவிழா எல்லாம் அவரே பார்த்துக்கறார். வர்றவங்க பணம் தந்தால் வாங்கிக்கறார்னு நினைக்கிறேன்” என எதார்த்தமாக நம்மிடம் பேசினார்.

Advertisment

Yogibabu's brother yogi raja's temple issue

கோவில் தகரஷீட் போட்டுக் கட்டப் பட்டிருந்தது. ஸ்ரீசக்தி யோகிராஜா அருள்வாக்கு சொல்லப்படும் என்கிற போர்டு நம்மை வரவேற்றது. உள்ளே அங்காளம்மன், வராஹி, கருமாரியம்மன், முத்தாலம்மன் சந்நிதிகள் இருந்தன. நடிகர் யோகிபாபுவின் மூத்த அண்ணன் பழனிவேலு என அறிமுகப்படுத்திக்கொண்டவர் நம்மிடம், “என்னோட தம்பிதான் சுவாமி யோகிராஜா. சென்னை போயிருக்கார். சுவாமி ஒரு கால் ஊனமுற்றவர், அவர் நடக்கவே இரண்டு பேர் உதவி தேவை. அப்படிப்பட்டவர் எங்கள் ஊர் மக்களை மிரட்டினார் எனச்சொல்வதை யாரும் நம்பவேமாட்டாங்க. அவர் பெயரில் ஒரு சென்ட் இடம்கூட கிடையாது. வாழைப்பந்தலில் ஒரு இடம் வாங்கி எங்கப்பா வீடு கட்டினார். அதுவும் பாதியில் நின்றுபோனது, அந்த வீட்டில்தான் அம்மா இருக்கிறார். நான் வாடகை வீட்டில் இருக்கிறேன், என் தங்கச்சி ஆரணியில் வாடகை வீட்டில் இருக்கிறார்” என்றார்.

Yogibabu's brother yogi raja's temple issue

செல்போன் வழியே நம்மிடம் பேசிய யோகி ராஜாவிடம் அவர் மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டபோது, “என் மீது யாரோ பொய்யாக புகார் சொல்லியுள்ளார்கள். என்னைப் பற்றி எங்கள் தெருவில் உள்ளவர்களிடம் விசாரித்துப்பாருங்கள். நான் மிரட்டி எங்காவது இடம் வாங்கியிருக்கிறேன் என்றால் எங்கே எனச் சொல்லச்சொல்லுங்கள். பக்கத்தில் ஒரு வீட்டை வாங்கிக்கொள்ளச் சொல்லி கேட்கிறார்கள். விலை அதிகமாக உள்ளது, நான் வேண்டாம் என்கிறேன். நான் ஆடு, கோழி பலி கொடுப்பதில்லை. கடவுளிடம் வேண்டுதல் வைத்திருப்பவர்கள் அது நிறைவேறியதும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். அதை எப்படி நான் தடுக்கமுடியும்?” என்றார்.