ADVERTISEMENT

யோகி ஆட்சியில் சிதைக்கப்படும் பெண்கள்!

12:12 PM Oct 08, 2020 | rajavel

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பூலாகார்கி கிராம வல்லுறவுச் சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் ஓயும்முன்னே, பல்ராம்பூரில் 19 வயதுப் பெண் ஒரு கும்பலால் வல்லுறவு செய்து கொள்ளப்பட்டி ருக்கிறாள். ஆஸம்கார்க் மாவட்டத்தில் 8 வயதுப் பெண் தனது உறவினர் ஒருவராலே சீரழிக்கப்பட்டிருக்கிறாள். உத்தரப்பிரதேச சம்பவங் கள் அதிர்ச்சி அலைகளைக் கிளப்புவதைத் தாண்டி, இதற்கொரு முடிவே இல்லையா என தேசத்தையே உளம் மரத்துப்போக வைத்திருக்கின்றன.

ADVERTISEMENT

செப்டம்பர் 14-ஆம் தேதிதான் அந்த துயரம் நடந்தது. வீட்டின் கடைக்குட்டிப் பெண்ணான அந்த 20 வயது தலித் சிறுமியின் பெயர் பரிதாபா என வைத்துக் கொள்வோம். தாயுடன் வீட்டுக்கு அருகிலுள்ள வயல் வேலைக்கு வந்திருந்தாள். வேலையில் மும்முரமாக இருந்த அவளது அம்மா தற்செயலாக திரும்பிப்பார்த்தபோது மகள் அங்கு இல்லை. அந்த சற்றுநேர இடை வெளிக்கெல்லாம் அனைத்தும் முடிந்திருந்தது.

தாய் தேடிப்போனபோது ரத்த வெள்ளத்துக்கிடையில் முறித்துப்போட்ட கிளையைப்போலக் கிடந்தாள் பரிதாபா. அவளை தாக்கூர் சாதியைச் சேர்ந்த நான்கு பேர் தூக்கிப்போய் சீரழித்திருந்தனர். கழுத்தில் நெரிக்கப் பட்ட தடம், வெட்டுப்பட்ட நாக்கு, முறிந்த முதுகெலும்பு என ஒரு தாய் காணக்கூடாத கோலத் தில் தன் மகளைக் கண்டார்.

போலீஸ் வந்து கொலைமுயற்சி வழக்கிலும், எஸ்.சி- எஸ்.டி. மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திலும் இரண்டு பேரை மட்டுமே பதிவுசெய் தது. வல்லுறவைப் பற்றி மூச்சுக்கூடவிடவில்லை. முதலில் ஹாத்ராஸ் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட பரிதாபா, பின் அலிகாரிலுள்ள ஜே.என்.யூ. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள்.

நினைவுதிரும்பி அவள் வாக்குமூலம் கொடுத்தபிறகே ரேப் கேஸ் பதிவானது. கிட்டத் தட்ட பத்து நாட்கள் வெளியுலகுக்கு எட்டாமல் மறைக்கப்பட்டிருந்த இந்த விஷயம், செப்டம்பர் 27-ஆம் தேதி அவளது நிலை சீர்கெட்டு பெரிய விவகாரமான பிறகே வெளிச்சத்திற்கு வந்தது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

செப்டம்பர் 28-ஆம் தேதி பரிதாபா நிலை மோசமானதும் டெல்லி ஜப்தர்ஜங் மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள். எனினும், அது அவளது உயிரைக் காப்பாற்றவில்லை. பரிதாபமாக இறந்து போனாள்.

பரிதாபா குடும்பத்தினர் நிலை இன்னும் பரிதாபம். அந்தக் கிராமத்தில் நான்கே நான்கு தலித் குடும்பம்தான். திரும்பிய பக்கமெல்லாம் தாக்கூர்கள். தனது மகளைச் சீரழித்த குடும்பத்தைப் பார்த்து நான்கு வார்த்தை ரோஷத்துடன் கேள்வி கேட்கக்கூட முடியாது. டெல்லி மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை. சொந்த கிராமத்துக்கு வந்த பிறகாவது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் படும் என பார்த்தால், குடும்பத்தினர் அனைவரையும் வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு போலீஸே உடலை எரித்துவிட்டு நடையைக் கட்டிவிட்டது. இறுதிச் சடங்குகூட நடத்தவும் அருகதையற்றவர் களாகிவிட்டோமா எனக் குமுறுகிறது குடும்பம்.

மிகக் கொடூரமான ஒரு நிகழ்வில் சம்பந்தப் பட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்யவேண்டிய உபி. காவல்துறை, எந்தெந்த வகையில் சாட்சியங்களை மறைக்கலாம் என்பதிலேயே கவனமாக இருந்ததையும், குடும்பத்தினரையும் உறவினர்களையும் அனுமதிக்காமல், பரிதாபாவின் உடலை வயல்வெளியில் இரவு நேரத்தில் எரிப்பதையும் ஆங்கில ஊடக செய்தியாளரான தனுஸ்ரீ பாண்டே என்ற பெண் துணிவாகப் பதிவுசெய்து வெளியிட்டபோது நாடே அதிர்ந்தது.

எதிர்க்கட்சிகள் இதனை மிகப் பெருமளவில் விவாதிக்கத் தொடங்கின. மத்தியிலும் மாநிலத் திலும் ஆள்கின்ற பா.ஜ.க. அரசு, இதனை அமுக்குவதிலேயே கவனம் செலுத்தியது. அதற்கேற்ப ஹாத்ராஸ் எஸ்.பி. விக்ராந்த், “இறந்த பெண்ணின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது என்பது தவறானது. அவளது அந்தரங்க பகுதியில் சிராய்ப்புக் காயங்கள் எதுவும் தட்டுப்படவில்லை. ரேப் நடந்தது என மருத்துவர்கள் உறுதிப்படுத்த வில்லை’’ என கடந்த வியாழக்கிழமை வரை தைரியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஏ.டி.ஜி.பி. பிரஷாந்த்குமார் இன்னும் ஒரு படி மேலேபோய், “""தடய அறிவியல் சோதனை அறிக்கையின்படி அந்தப் பெண்ணின் உடம்பில் ஆண் விந்து எதுவும் இல்லை. விந்து இல்லை என்றாலே, பாலியல் வல்லுறவு நடக்கவில்லை என்றுதான் அர்த்தம். சாதி மோதலைக் கிளப்புவதற்காக சிலர் இந்த விவகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள்''’என்றார்.

பரிதாபாவுக்கு சிகிச்சை அளித்த அலிகார் மருத்துவமனை டாக்டரை ஊடகத்தினர் ரகசிய கேமராவுடன் பேட்டி எடுத்தபோது, அந்தப் பெண்ணுக்கு பாலியல் வல்லுறவு சோதனையே நடத்தப்படவில்லை என்று சொல்லிவிட்டார். சோதனை நடத்தினால், உண்மையைப் பதிவுசெய்ய வேண்டியிருக்கும் என்பதால்தான் தவிர்க்கப்பட் டது என்கிறார்கள் மருத்துவத் துறையினர். இறந்த பரிதபாவின் உடலை கூராய்வு செய்த டெல்லி மருத்துவமனையின் அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும், உடலின் பல பகுதிகளில் கீறல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுவே பரிதாபா பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதை உறுதிப்படுத்துவதாக இருந்தும் அதனை மறைப்பதிலேயே காவல்துறை தீவிரமாக இருந்தது.

ஹாத்ராசுக்கு தொடர்ந்து வந்தபடியே இருந்தனர் உ.பி. அரசு அதிகாரிகள். “ஊடகங்களிடம் பேசாதீர்கள். நேற்று இருந்த அளவுக்கு இன்றைக்கு ஊடகத்தினரின் எண்ணிக்கை இல்லை. நாளைக்கு மொத்தமாக அவர்கள் எல்லாரும் போய்விடுவார்கள். நாங்கள்தான் இங்கே இருந்தாகவேண்டும். புரிகிறதா?’’ என்கிற மிரட்டல் தொனி அதிகாரிகளிடமிருந்து வெளிப்பட்டது.

பரிதாபாவின் குடும்பத்தினரும் உறவினர்களும், “எங்கள் பெண் சம்பந்தப்பட்ட வழக்கை முடிக்கும்படி நெருக்கடி கொடுக்கிறது காவல்துறை. இங்கே எங்களை வாழவிடமாட்டார்கள்’’ என வேதனையை வெளிப்படுத்தினார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவுப் பையன் ஒருவன் போலீசார், குடும்பத்தையே தடுத்து வீட்டுக்குள் முடக்கிவைத்திருப்பதாகவும், பெண்ணின் தகப்பனாரின் முகத்தில் போலீசார் குத்தியதாகவும் செய்தியாளர்களைத் தேடிவந்து தகவல் தெரிவிக்க புதிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

பா.ஜ.க அரசோ, எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்குகின்றன எனக் குற்றம்சாட்டியபடியே, ஹாத்ராஸ் கொடூரத்தை முடிவுக்கு கொண்டுவரும் வேலைகளில் இறங்கியது. இந்நிலையில், அக்டோபர் 1-ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும், பிரியங்காவும் ஹாத்ராஸுக்கு வருகைதந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்கப்போவதாக அறிவிக்க, உடனே மாவட்ட நீதிபதியோ கிராமத்தில் 144 தடை அறிவிக்கப் பட்டிருப்பதாகவும் விசாரணை அதிகாரிகளைத் தவிர யாருக்கும் அனுமதியில்லை என்றும் அறிவித்தார். எனினும் தடையைமீறி வந்த ராகுல்காந்தியை போலீசார் தடுத்து, தள்ளிவிட, அவர் தரையில் விழுந்தார். அந்த நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பாக, நாடு முழுவதும் பரபரப்பானது. தள்ளிவிடப்பட்ட ராகுலை பிரியங்கா ஆசுவாசப்படுத்தினார்.

இதனையடுத்து, ஹாத்ராசுக்கு அரசியல் தலைவர்களோ, மீடியாக்களோ செல்லாதபடி கடுமையான தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது உ.பி. அரசு. திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ ப்ரையன் அங்கே சென்ற போது, போலீசார் அவரை உருட்டிவிட்டனர்.

விவகாரம் பெரிதாகக்கூடாது என்பதற்காக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு பேசும் செய்தியாளர்களின் போன்களை உ.பி. அரசு ஒட்டுக்கேட்டுள்ளது. இதை பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் ஒருவரே விவாதத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் மாநில அளவிலான தலித் அமைப்புகள் இவ்விவகாரத்தில் காட்டும் எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்த முதலில் அறிவித்த 10 லட்சம் இழப்பீட்டை 25 லட்சமாக உயர்த்தியதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என யோகி அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி ஹாத் ராஸ் மாவட்ட எஸ்.பி. மற்றும் நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தவிர சம்பந்தப்பட்ட போலீசா ருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கும் நார்கோ டெஸ்ட் எனும் உண்மையறியும் சோதனை நடத்த முடிவெடுத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கூடுதலாக தேசத்துக்கு வெளியே உத்தரப்பிரதேசத்தின் மானம் போவதைத் தடுக்க உ.பி. அரசு, மும்பையைத் தலைமை யிடமாகக் கொண்ட செய்தி வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கு சில குறிப்பிட்ட தொனியிலான செய்திகளை தொடர்ந்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஹாத்ராஸ் சிறுமி கற்பழிக்கப்படவில்லை என ஆரம்பகட்ட தடயவியல் விசாரணை வெளிப்படுத்துவதாகவும், சாதிய மோதலை இலக்காகக் கொண்டு செயல்படும் சிலர் இச்சம்பவத்துக்குப் பின்னிருப்பதாகவும் அந்தச் செய்திகள் வலியுறுத்தின

ஹாத்ராஸ் சிறுமிக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத்தும் தங்கள் ஆதரவாளர்களுடன் டெல்லியில் போராட, இந்தியா கேட் அருகே மக்கள் குவிந்து போராட்டம் தொடர் வதைத் தடுக்கும்விதமாக அவ்விடத் தில் ஒன்றுசேர தடைவிதிக்கப் பட்டுள்ளது.

ஒரு பரிதாபா சிதைத்துக் கொல்லப்பட்டதற்கே இத்தனை குரல்கள் ஒலித்தும் நீதி கிடைக்காத நிலையில், இரண்டாவது பரிதாபா பல்ராம்பூரின் கைசாரி கிராமத்தைச் சேர்ந்த பி.காம். மாணவி. கல்லூரிக்குப் போய்விட்டு திரும்பும்போது கடத்திச் செல்லப்பட்டிருக்கிறாள்.

ரிக்சா ஒன்றில் அவள் திரும்பிவந்த நிலை பரிதாபகரமானது. நினைவிழந்த நிலையில் அவளது கால்களும் முதுகும் உடைபட்டு, குளுகோஸ் ட்ரிப் ஏற்றிய நிலையில் வர, பயந்துபோன பெற்றோர் அவளை அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டுபோயினர். ஆனால் மருத்துவமனையை எட்டும்முன்னே அவள் இறந்துபோயிருந்தாள். வலிதெரியாமலிருக்க அவளுக்கு போதை ஊசி போடப்பட்டிருந்ததாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக இருவர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கிலும் மகளின் கைகால்கள் உடைபட்டிருந்ததாக பெற்றோர் கூற, போலீஸ் அப்படியெல்லாம் இல்லையென்றது. போஸ்ட்மார்ட்டம் அறிக்கைக்குப் பின்பே வல்லுறவு நடந்ததை போலீஸ் ஒப்புக்கொண்டிருக்கிறது.

மூன்றாவது பரிதாபா, ஆஸம்கார்க் மாவட்டத்தின் ஜியான்பூர் கிராமத்தைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமி. அவளிடம் அத்துமீறிய மிருகம் அண்டை வீட்டைச் சேர்ந்த 20 வயது வாலிபன்.

சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறாள். குற்றவாளியும் கைதுசெய்யப்பட்டாகிவிட்டது. கிழக்கு உத்தரபிரதேசத்திலும் இதே போன்ற கொடூரத்தில், பகோதி என்ற இடத்தில் 14 வயது பெண் தலையில் செங்கல்லால் நசுக்கப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். தொடர் வல்லுறவுக் குற்றங்களால் உ.பி.யில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.

ஹாத்ராஸில் இறந்துபோன பெண்ணை பிரேவ்ஹார்ட் என அழைத்து வருத்தம் தெரிவித்திருந்தார் மோடி. இத்தனை கொடிய குற்றங்கள் நிகழ்ந்தபிறகும் ஆமைவேகத்தில் நடவடிக்கை எடுக்கும், குற்றங்களை மறைக்கும் காவல்துறையைக் கண்டுகொள்ளாமலிருக்கும் உத்தரபிரதேசத்து யோகி அரசைவிட யாருக்கு பிரேவ் ஹார்ட் எனும் துணிந்த இதயம் இருந்துவிடமுடியும்?


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT