Advertisment

சசிகலாவை காப்பாற்றும் எடியூரப்பா...செம்ம கடுப்பில் மோடி...ரெய்டில் எஸ்கேப் ஆன சசிகலா!

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார். அந்த சிறையை பெங்களூரு போலீசார் திடீர் என சோதனை நடத்தினர். அக்டோபர் 9-ம் தேதி அதிகாலை முதல் நான்கு மணி நேரம் நடைபெற்ற அந்த ரெய்டு பற்றிய செய்தி வெளியானதும் சசிகலா சொந்தங்கள் பரபரப் படைந்தன. சிறைக்குப் போன நாளில் இருந்து சிறிது காலம் முன்பு வரை புகழேந்திதான் சசிகலாவிற்கு தேவையானவற்றை செய்து வந்தார். அதற்காக சிறை வளாகத்திலும், சிறைக்கு பக்கத்தில் சசிகலாவுக்கு தேவையானவற்றைக் கொண்டு வருவதற்காக வாங்கப்பட்ட அப்பார்ட் மெண்ட்களிலும், "எலக்ட்ரானிக் சிட்டி' எனப்படும் அந்த சிறைப்பகுதி அமைந்துள்ள லாட்ஜ்களிலும் புகழேந்தியின் இருநூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் தங்கியிருந்தனர். அவர்களில் எழுபது பேர் சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் சசிகலாவின் தேவைகளை கவனித்து வந்த அவர்களை திடீரென "வேண்டாம்' என டி.டி.வி.தினகரன் நீக்க முயன்றார்; அதை சசிகலா ஏற்கவில்லை.

Advertisment

sasi

டி.டி.வி.தினகரன், புகழேந்திக்கிடையே மோதல் வலுத்து வரும் நிலையில்தான் சிறையில் ரெய்டு நடந்துள்ளது. போலீசார் நடத்திய ரெய்டில் சிறையில் கத்தி, கஞ்சா, குடிக்க உபயோகப்படுத்தும் குடுவை, சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. சுதாகரன் அறையில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதேபோல் பெண்கள் சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோர் அறையிலிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என சிறைத்துறை அறிவித்தது. மற்ற கைதிகள் உபயோகிக்கும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும்போது சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உபயோகிக்கும் செல்போன்கள் போலீசார் கண்களில் எப்படி படாமல் போனது?

ammk

Advertisment

சசிகலா முறைகேடாக சிறையில் சலுகைகளை அனுபவித்து வருகிறார். அவருக்கு பணிவிடை செய்ய பெண் கைதிகள் இருக்கிறார்கள். சமையல் முதல் அறைகளை சுத்தப்படுத்துவது வரை பெண் கைதிகளை வைத்திருக்கும் சசிகலா... தனக்கான சிறை வளாகத்திலேயே இரண்டு, மூன்று அறைகளை கொண்ட காம்ப்ளக்ஸையே ஆக்கிரமித்திருக்கிறார். அவருக்காக சமைக்க எலெக்ட்ரிக் ஸ்டவ், குளிர்சாதன பெட்டி எல்லாம் இருக்கிறது. சிறையில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளில் சசிகலா அடிக்கடி சிறைக்கு வெளியே சென்றுவிட்டு உள்ளே வருகிறார். இதற்காக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார். சிறைத்துறை தலைவராக இருந்த ஒருவருக்கு ஹைதராபாத் நகரில் உயர்ந்த ரக ப்ளாட் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த சிறைத்துறை அதிகாரியும், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனுக்கு உதவினார் என போலீசாரால் குற்றஞ்சாட்டப்படும் ஆஸ்திரேலியன் பிரகாஷும் சந்தித்து பேசினார்கள் என சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபா குற்றம் சாட்டியிருந்தார். ரூபாவின் குற்றச்சாட்டுகள் உண்மையா என ஆராய, வினய்குமார் என்கிற ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அப்பொழுது முதல்வராக இருந்த சித்தராமையா அமைத்தார்.

jail

வினய்குமார் நடத்திய விசாரணையில் "சசிகலா சிறை விதிகளை மீறினார். விதிகளை மீறி சசிகலா சலுகைகள் அனுபவிப்பதற்கு அதிகாரிகளின் லஞ்ச ஊழலே காரணம். சிறைத் துறை அதிகாரிகள் சசிகலாவிடம் லஞ்சம் பெற்றிருக்கிறார்கள். அதைப் பற்றி கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்' என அறிக்கை கொடுத்தார். ஆனாலும் சசிகலா விஷயத்தில் சித்தராமையா கண்டுகொள்ளாமலேயே இருந்தார். அதன்பின், குமாரசாமி அரசிலும் தேவேகவுடா மூலம் சசி தரப்பு இதே செல்வாக்குடன் இருந்தது. சிறையிலேயே கன்னடம் கற்க ஆரம்பித்தார் சசிகலா. நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலைக்கு முயற்சி செய்து வரும் சசிகலா, சமீபத்திய ரெய்டிலும் தப்பித்து விட்டார் என்றார்கள் அவரது உறவினர்கள். ரெய்டுக்கு காரணம் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் எதிரிகள்தான். எடியூரப்பாவிற்கும் நரேந்திர மோடிக்கும் ஏழாம் பொருத்தம். ஆனாலும், கர்நாடகாவில் எடியூரப்பா தயவின்றி பா.ஜ.க. வெற்றிபெற முடியாத நிலையே நீடிக்கிறது.

roopa

சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அரசியலுக்குரிய அத்தனை வழிகளையும் பயன்படுத்தி முதல்வரானார் எடியூரப்பா. அவரது இந்த திறமை மோடிக்குப் பிடிக்கவில்லை. எடியூரப்பாவை இன்று வரை மோடி சந்திக்கவேயில்லை. அமைச்சரவை கூட அமைக்க விடவில்லை. முதல்வராக இருக்கக்கூடாது என்கிற மோடியின் விருப்பத்திற்கு மாறாக அமைச்சரவையை உருவாக்கினார். அதில் நான்கு துணை முதலமைச்சர்களை நியமித்தார். தனக்கு நெருக்கமான ஷோபாவையும் தனது மகனையும் அமைச்சராக்க எடியூரப்பா முயன்றார். மோடி அதற்கு சம்மதிக்கவில்லை. எடியூரப்பா எதை பேசினாலும் அதற்கு எதிராக கர்நாடகா பா.ஜ.க. தலைவர்களை பேச வைக்கிறார் மோடி. எடியூரப்பா ஒரு ஊழல் பேர்வழி. அவருக்கு பதில் இளைஞர் ஒருவரை முதல்வர் ஆக்க வேண்டும் என மோடி முயல்கிறார். அதற்காகத்தான் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை குறி வைத்தார். ஆனால் எடியூரப்பா உதவியுடன் ரெய்டிலிருந்து சசிகலா தப்பித்தார்'' என கர்நாடகா அரசியலில் சசிகலாவின் தலை உருட்டப்படுவதை விளக்குகிறார்கள் கர்நாடக அரசியல்வாதிகள்.

modi sasikala Yeddyurappa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe