Skip to main content

இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகமாக கூகுளில் தேடியது இவைகளைத்தான் - ரீவைண்ட் 2021

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

இரண்டும் இரண்டும் எவ்வளவுன்னு கேட்டாலே ஃபோனில் கால்குலேட்டரை ஓப்பன் செய்யும் நாம், எந்த சந்தேகம் வந்தாலும் முதலில் திறப்பது கூகுளைத்தான். கூகுளில் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை, அதன் பயன்பாட்டை ஏகத்துக்கு உயர்த்தியுள்ளது. எல்லா வகையான தகவல்களையும் மக்கள் கூகுளில் தேடும் நிலையில், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அவ்வாண்டில் அதிகம் தேடப்பட்டவை என்ன என்ற பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021ல் இந்தியர்களால் அதிகமாக தேடப்பட்டவைகளின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது கூகுள். கூகுளின் புள்ளிவிவரப்படி 2021 -ல்  இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியவை என்ன என்பதை பார்ப்போம்.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

கூகுளில் அதிகமாக தேடப்பட்டவை (பொதுவானவை)

இளந்தலைமுறை அதிகமாக இருக்கும் இந்தியாவில் எப்போதுமே கிரிக்கெட் மோகம் கொஞ்சம் அதிகம் தான். அதிலும் ஐ.பி.எல். என்றால் சொல்லவே வேண்டாம். கரோனாவால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடத்தப்பட்டது. ரொம்ப தொலைவில் தொடர் நடந்ததாலோ என்னவோ நம்ம ஆளுங்க கிரிக்கெட்டை அதிகமாக தேடிட்டாங்க போல. இதனால், இப்பட்டியலில் முதலிடத்தை ஐ.பி.எல். தொடர் பிடித்துக்கொண்டது. அதேபோல, மூன்றாவது இடத்தை டி20 உலக கோப்பை பிடித்தது. கோவிட் தடுப்பூசி முன்பதிவு தளமான கோவின் இப்பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இவற்றிற்கு அடுத்தபடியாக யூரோ கோப்பை கால்பந்து, டோக்கியோ ஒலிம்பிக்ஸ், கோபா அமெரிக்க தொடர் ஆகியவை முறையே நான்கு, ஐந்து மற்றும் எட்டாவது இடத்தை பிடித்துள்ளன. இப்பட்டியலில் ஆறாவது இடத்தில் கோவிட் தடுப்பூசியும், ஏழாவது இடத்தில ஃப்ரீ ஃபயர் மொபைல் கேமும் இடம்பிடித்துள்ளன. இவை மட்டமல்லாமல், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பற்றியும் இந்தியர்கள் அதிகளவில் தேடியுள்ளார். இதன் காரணமாக, இப்பட்டியலில் அவரது பெயர் ஒன்பதாவது இடத்தில் இடம்பிடித்துள்ளது. இப்படி சாதனை இளைஞரை பற்றி தேடியது போலவே சர்ச்சை இளைஞரான ஆர்யன் கானையும் 2021 -ல் மக்கள் அதிகளவில் கூகுளில் தேடியுள்ளார். இதன் காரணமாக அவரும் இப்பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

எனக்கு அருகில் இருக்கும்...

2020 -ல் மரண பயத்தை காட்டிய கரோனா 2021 -ல் மெல்ல குறைந்துவிடும் என மக்கள் நம்பிக்கொண்டிருந்தபோது, மார்ச் மாதத்தில் பரவ தொடங்கியது அதன் இரண்டாவது அலை. புதிய திரிபுகள், அதிகரித்த பரவல் என மக்களை மீண்டும் ஆட்டுவித்தது கரோனா. இதன் காரணமாக இந்த ஆண்டு ‘எனக்கு அருகில்’ (Near Me) தேடல்கள் பெரும்பாலும் கரோனா தொற்று தொடர்பான சேவைகளைச் சுற்றியே இருந்தன. தடுப்பூசிகள், கோவிட் சோதனைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எங்கு கிடைக்கும், கோவிட் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் CT ஸ்கேன்கள் ஆகியவை அதிகம் தேடப்பட்ட இடங்கள் பட்டியலில் முறையே 1,2,4,5,7 ஆகிய இடங்களை பிடித்துள்ளன. இவற்றிற்கிடையே உணவகங்கள் மற்றும் உணவு டெலிவரி குறித்த தேடல்கள் மூன்று மற்றும் எட்டாவது இடத்தை பிடித்துள்ளன. டிரைவிங் ஸ்கூல் இப்பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்...

2021ஆம் ஆண்டு இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறார் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா. இந்திய ராணுவத்தின் தரைப்படையில் இளநிலை அதிகாரியாக பணியாற்றி வரும் நீரஜ் சோப்ரா, இதற்கு முன் பல போட்டிகளில் பற்பல பதக்கங்களை வென்றிருந்தாலும், ஒலிம்பிக்கில் அவர் அடித்த தங்கம் இந்திய இளைஞர்கள் மத்தியில் ஆவாரை ஒரு ஹீரோ ஸ்தானத்திற்கு உயர்த்தியது எனலாம். பதக்கம் வென்ற நாளிலிருந்து இவரை பற்றி தெரிந்து கொள்ள கூகுள் செய்த இந்தியர்கள் இவரது சமூக வலைதள கணக்கையும் அதிகளவில் பின்தொடர துவங்கினர். இவருக்கு அடுத்தபடியாக இப்பட்டியலில் இருப்பவர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான். போதைப்பொருள் வழக்கில் கைதான இவர் அதன் காரணமாக இவ்வாண்டு கூகுளிலும் அதிகம் தேடப்பட்டார். இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களை நடிகை ஷெனாஸ் கில், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்ரா, உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க், நடிகர் விக்கி கொளசல், பி.வி.சிந்து, பஜ்ரங் புனியா, சுஷில் குமார் மற்றும் நடாஷா தலால் ஆகியோர் பிடித்துள்ளனர்.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

அதிகம் தேடப்பட்ட படங்கள்...

இந்தியர்களின் உணர்விலிருந்து என்றைக்குமே பிரிக்க முடியாத ஒரு விஷயம் என்றால் அது சினிமா தான். வீக்எண்ட் என்றாலும் சரி, விசேஷம் என்றாலும் சரி, நமக்கு முதலில் மனதில் உதிக்கும் பொழுதுபோக்கு சினிமா தான். இப்படிப்பட்ட சினிமா இவ்வாண்டில் திரையரங்குகளை கடந்து ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் நேரடியாக சென்றது எனலாம். 2021 -ல் கரோனா பரவலால் பெரும்பாலான இடங்களில் திரையரங்குகள் திறக்கப்படாததால், அதிக அளவிலான படங்கள் ஓடிடி -யிலும் வெளியானது. இப்படி வெளியான திரைப்படங்களில் மக்கள் அதிகம் தேடியது எந்த படம் என்பது குறித்த பட்டியலையும் கூகுள் வெளியிட தவறவில்லை. அதன்படி, சூர்யா நடித்த ஜெய் பீம் படம்தான் இந்த ஆண்டு மக்களால் அதிகம் தேடப்பட்ட படமாக இப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஓடிடி -யில் ரிலீஸ் ஆகி தியேட்டரில் இந்த படத்தை பார்த்தே ஆகணுமே என ரசிகர்களை ஏங்கவைத்த ஒரு படமென்றே இதனை சொல்லலாம். இதேபட்டியலில் இன்னொரு தமிழ் படமும் உள்ளது. ஜெய் பீம் படத்துக்கு மாறாக தியேட்டரில் வெளியாகி ரசிகர்களால் விசில் பறக்க கொண்டாடி பார்க்கப்பட்ட மாஸ்டர் தான் அந்த படம். மாஸ்டர் இப்பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இவை தவிர ஷெர்ஷா, ராதே, பெல் பாட்டம், எடர்னல்ஸ் ஆகிய படங்கள் முறையே இரண்டு முதல் ஐந்தாவது இடங்கள் வரை பிடித்துள்ளன.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

அதிகம் தேடப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள்...

2020 ஆம் ஆண்டில் கரோனாவின் கோரத்தாண்டவத்தால் மக்கள் அனைவரும் பாதுகாப்புக்காக வீட்டிலேயே முடங்கியிருக்க, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் கூட தள்ளிவைக்கப்பட்டன. இதனால் 2020 ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த பல விளையாட்டு நிகழ்வுகள் 2021 -ல் நடந்தன. அதிலும் பல தொடர்களில் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டன. இவை அனைத்தையும் கடந்துதான் இவ்வாண்டு நடைபெற்ற பல தொடர்கள் விளையாட்டு ரசிகர்களை எண்டர்டைன் செய்தன. கிரிக்கெட், கால்பந்து, ஒலிம்பிக், பராலிம்பிக் என பல போட்டிகள் இந்த ஆண்டில் வரிசையாக நடைபெற்றது. இதில் இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்டது ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை தான். இவற்றிற்கடுத்து, யூரோ கோப்பை, டோக்கியோ ஒலிம்பிக், கோபா அமெரிக்கா, விம்பிள்டன், பாராலிம்பிக்ஸ், பிரெஞ்ச் ஓபன், லா லிகா, இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

 

This year, the most searched on Google by the indians - Rewind 2021

 

என்னவா இருக்கும்...?


எதாவது ஒரு  புது பெயரையோ, நிகழ்வையோ கேள்விப்படும்போது அதை பற்றி எப்படியாவது உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம் மக்களிடையே அதிகம். அப்படி அவர்களின் கேள்வி ஆர்வத்திற்கு தீனி போடுவதில் முக்கிய பங்கு கூகுளுக்கு தான். அப்படி எந்த விஷயத்தை பற்றி தெரிந்துகொள்ள மக்கள் கூகுளில் அதிகம் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள் என்ற பட்டியலில் கருப்பு பூஞ்சை முதலிடம் பிடிக்கிறது. கருப்பு பூஞ்சை என்றால் என்ன.? என்ற கேள்வியே இந்த ஆண்டு இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்ட கேள்வியாக உள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களை, ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது..? தலிபான் என்றால் என்ன..? ரெம்டெசிவிர் என்றால் என்ன..? ஸ்டெராய்டு என்றால் என்ன..? ஸ்க்விட் கேம் என்றால் என்ன..? போன்ற கேள்விகள் பிடித்துள்ளன.

 

fadf

 

அதிகம் தேடப்பட்ட செய்திகள்...

ஊடகம் என்பது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகி வரும் இந்த காலகட்டத்தில், செய்தித்தாள் படிக்கும் தலைமுறையும், தொலைக்காட்சிகளில் செய்தி பார்க்கும் தலைமுறையும் கூட ஏதேனும் ஒரு செய்தியின் சமீபத்திய அப்டேட்டை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் உடனடியாக செல்லும் இடம் கூகுள் தான். அப்படி மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகளில் முதலிடத்தை பிடித்துள்ளது டோக்கியோ ஒலிம்பிக்ஸ். இதற்கடுத்தடுத்த இடங்களை ஆப்கானிஸ்தானை பற்றிய செய்திகள், மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் குறித்த செய்திகள் பிடிக்கின்றன. மேலும், ஊரடங்கு குறித்த செய்திகள், சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியது, விவசாய போராட்டம் ஆகியவையும் இப்பட்டியலின் டாப் 10 -ல் வருகின்றன.
 

 

 

 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.