ADVERTISEMENT

”10 டன் பீரங்கியால் மாவீரன் சிங்கம் செட்டி உடலை சிதறவைத்த வெள்ளைக்காரன்” - கமுதி போரின் பின்னணி விளக்கும் ரத்னகுமார் 

04:04 PM Jun 11, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கழுதி கோட்டை போர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

"இன்றைக்கு தாஜ்மகாலையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும் வரலாற்று பொக்கிஷங்கள் என்கிறோம். ஆனால், அதைவிட பெரிய வரலாற்றுப் பொக்கிஷமாக கமுதி கோட்டை உள்ளது. அங்கு நம் ஆட்களைப் பீரங்கி முன்னால் நிற்க வைத்து வெள்ளைக்காரன் சுட்டுத் தள்ளியிருக்கிறான். அவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கோட்டை இன்று கவனிப்பற்று கிடைக்கிறது. நம்முடைய வரலாறு அனைத்தையுமே வெள்ளைக்காரன் ஆவணமாகப் பதிவு செய்துள்ளான். ஆனால், இன்றைக்கு நம் ஆட்கள் அதை எடுத்துப் படித்துப் பார்ப்பதுகூட இல்லை.

மயிலப்பன் சேர்வை, முத்துக்கருப்பத் தேவர், சிங்கம்செட்டி, ஜெகநாத ஐயர் பற்றியெல்லாம் பலருக்கும் தெரிவதில்லை. ஆஷ் துரைக்கு வாஞ்சிநாதன் குறிவைப்பதற்கு முன்னரே, லூசிங்டன் என்ற கலெக்டருக்கு குறி வைத்தவர்கள் மயிலப்பன் சேர்வையும் ஜெகநாத ஐயரும். இவர்களது குறியிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக லூசிங்டனே எழுதியிருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மனை கொல்வதற்கு முன்பாக பானர்மேன், கொடூரமான படைத்தளபதியான மில்லர், அக்னியூவ் கமுதிக்கு படையெடுத்துவருகின்றனர். அப்போது மயிலப்பன் சேர்வை தலைமையிலான நம்முடைய புரட்சிக்காரர்கள் கமுதி கோட்டையை கைப்பற்றி விடுகின்றனர். அங்குதான் நெல் உள்ளிட்ட அனைத்தையும் வெள்ளைக்காரன் சேமித்து வைத்திருந்தான். அதைக் கைப்பறி நம்முடைய ஆட்களுக்கு விநியோகம் செய்ததால் வெள்ளைகாரனுடன் மிகப்பெரிய சண்டை வெடிக்கிறது. அந்தச் சண்டையில் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த சிங்கம்செட்டி வெள்ளைக்காரனிடம் சிக்கி விடுகிறார். 10 டன் எடைகொண்ட பீரங்கி முன்னால் நிற்க வைத்து அவரைச் சுட்டு வீழ்த்துகிறார்கள். கவர்னர் எட்வர்ட் க்ளைவுக்கு எழுதிய கடிதத்தில் கலெக்டர் லூசிங்டன் இதைப் பதிவு செய்திருக்கிறான்.

ஜெகநாத ஐயரை யார் என்றே அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஐயர் என்றால் கொண்டை போட்டுக்கொண்டு சாதுவாக இருப்பான் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஜெகநாத ஐயர் திடகாத்திரமான உடலமைப்புடன் பயங்கரமாக சண்டை செய்துகொண்டிருந்தார். அந்தச் சண்டையில் வெள்ளைகாரனின் கையில் படமால் மயிலப்பன் சேர்வை, முத்துக்கருப்பத் தேவர், ஜெகநாத ஐயர் தப்பித்துவிட்டனர். அதன் பிறகான மயிலப்பன் சேர்வை மற்றும் ஜெகநாத ஐயரின் எழுச்சி மிகப்பெரியது.

இது மாதிரியான நம்முடைய வரலாறெல்லாம் தூசி படிந்து கிடக்கிறது. அதைத் தட்டியெடுத்து படிக்க வேண்டும். நம்முடைய சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வரலாற்றை படிக்கும்போதுதான் நமக்கு தேசப்பற்றும், அந்தத் தலைவர்களின் மீது மரியாதையும் வரும்".


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT