writer rathnakumar

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ஆண் குழந்தை மோகம் அதிகம் இருப்பதற்கான காரணம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

Advertisment

கருத்தம்மா படத்தில்கூட சமூகத்தில் இருக்கும் ஆண் குழந்தை மோகம் பற்றிதான் எழுதியிருந்தேன். ஆண் வாரிசு கேட்டு மொக்கையன் படாதபாடு பட்டுக்கொண்டு இருப்பான். அவனுக்கு பெண் பிள்ளைகள் பிறந்துகொண்டே இருக்கும். இரு குழந்தைகளை கொலை செய்துவிடக் கூறிவிடுவான். இரண்டு பிள்ளைகளை வளர்த்துக்கொண்டு இருப்பான். பிழைத்த ஒரு பெண் குழந்தை டாக்டராக வந்து அப்பனை காப்பாற்றும். மற்றொரு குழந்தை கைகால் வராமல் கிடந்த அப்பனை பார்த்துக்கொள்ளும்.

Advertisment

அப்பனை மகள் குளிக்க வைக்கும் காட்சியில், ஆம்பளையா பெத்திருந்தா என்னைக்கோ என் பொழப்பு திண்ணைக்கே வந்திருக்கும் நான் பெத்த மகளே... ஒரு பொட்டச்சிய பெத்ததால கையொடிஞ்ச என் பொழப்பு கையூன்றி நிக்குது நான் பெத்த மகளேனு... பாடல் ஒலிக்கும். எந்த மகனும் அப்பனை இப்படி குளிப்பாட்ட மாட்டான். அப்பனின் மூத்திரத்தையும் மலத்தையும் எங்கையாவது மகன் கழுவியிருக்கிறானா?

மொக்கையன் மாதிரி ஆண் குழந்தையை எதிர்பார்ப்பவர்கள் எல்லா காலத்திலுமே இருந்தார்கள். அதற்கு காரணம் ஆண் ஆதிக்கம் என்பது அந்தக் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. மனிதர்களிடம் மட்டுமல்ல, அனைத்து உயிரினத்திலுமே இது இருந்தது. தங்களை பாதுகாத்துக்கொள்ள ஆண் குழந்தை தேவை என்று மனிதர்கள் நம்ப ஆரம்பித்தனர். குறிப்பாக, ஒருவர் இறந்துவிட்டால் அவரை தூக்கிச் சென்று அடக்கம் செய்ய ஆண்கள் தேவைப்பட்டனர். தன்னை பெற்றவர்களை குழி தோண்டி புதைக்கும் கொடுமையையோ, நெருப்பிட்டு எரிக்கும் கொடுமையையோ எந்த பெண் குழந்தையாலும் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால்தான் பெண்கள் சுடுகாடு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Advertisment

இதன் காரணமாகவும் ஒருகட்டத்தில் ஆண் குழந்தை இருப்பது கௌரவம் என்பது போல ஆகிவிட்டது. ஒரு பெண் குழந்தை பிறந்தால் நிறைய செலவு இருக்கிறது என்று பெற்றோர் நினைக்க ஆரம்பித்தனர். ஒரு ஆண் குழந்தை பிறந்தால் வரவு இருக்கிறது இருக்கிறது என்று பெற்றோர் நினைக்க ஆரம்பித்தனர். இதுதான் ஆண் குழந்தை வேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம். ஆனால், உண்மையிலேயே பெண் குழந்தை பெற்றவர்கள்தான் யோகக்காரர்கள்.