Advertisment

கரிசல் குயில் கி.ரா... கரிசல் இலக்கியத்தின் பிதாமகன்!

காசி விஸ்வநாதன்

kr

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை மையமாகக் கொண்டு கழுகுமலை,கயத்தாறு,சாத்தூர்,சிவகாசி,திருவில்லிபுத்தூர், ஒட்டப்பிடாரம்,குறுக்குச்சாலை,விளாத்திகுளம்,நாகலாபுரம்,புதூர்,பூதலபுரம் வட்டாரங்கள் எல்லாம் கரிசல்பூமியாகும்.

இங்கு பல எழுத்தாளர்கள் மண் வாசத்தைப் பிரதிபலிக்கும் எழுத்துக்களை எழுதினார்கள்.இதற்கு ‘‘முன்னத்தி ஏர்’’ ஆக திகழ்ந்தவர் கி.ராஜநாராயணன்.

இளமைக்காலம் தொட்டே எழுதத் தொடங்கிய கி.ரா மழைக்குத்தான் நான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன் என்று கூறினார்.

Advertisment

1923 செப்டம்பர் 16 இல் இடைசெவல் கிராமத்தில் பிறந்த ராஜநாராயணனின் பெயர் ராயங்குல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணபெருமாள் இராமானுஜ நாயக்கர். இவருடைய தந்தை ஸ்ரீ கிருஷ்ணர் இராமானுஜன். தாயார் லட்சுமி அம்மாள்.ஐந்தாவதுமகனாக பிறந்தார் கி.ரா. மனைவி கணவதி. இரண்டு பிள்ளைகள்.திவாகரன்,பிரபாகர்.

முதல் சிறுகதை ‘‘மாயமான்’’ 1958 ஆம் ஆண்டு விஜய பாஸ்கரனின் சரஸ்வதி இதழில் வெளிவந்தது.தன் தடங்களை பல தளங்களில் பதிக்கத் தொடங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்ட கி.ரா பொதுவுடைமை சித்தாந்தத்தை ஏற்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோ.அழகர்சாமியுடன் இணைந்து பல போராட்டங்கள் கண்டவர்.

1969 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் இலக்கியப் பேரவை ஒன்றைத் தொடங்கினார்.எஸ்.எஸ்.தியாகராஜன், கோ.நம்மாழ்வார்(இயற்கை விஞ்ஞானி),பால்வண்ணன் உட்பட பன்னிரெண்டு பேர் நிர்வாகிகள்.இதன் துணைத் தலைவராக கி.ரா செயல்பட்டார்.மாத சந்தா ஒரு ரூபாய்.ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை முன்னிரவு இலக்கியப் பேரவை கூடும்.

kr

கோவில்பட்டி வட்டாரத்தில் பொதுவுடமைக் கொள்கைகள் வேகமாகப் பரவிய காலத்தில் விவசாயிகளுடைய பஞ்சம் துயரம் எதைப்பற்றியும் கவலைப்படாத காங்கிரஸ் அரசு கெடுபிடி வசூலில் இறங்கியது. பண்டபாத்திரங்கள், ஆடுமாடுகள், வீடுகளின் கதவுகள் கூட ஜப்தி செய்யப்பட்டன. நாச்சியார்பட்டி ரெங்கசாமி என்ற விவசாயியின் வீட்டில் உழவு மாடுகள் ஜப்தி செய்யப்பட்டன.மிகுந்த துயரங்களுக்கு ஆளான மக்கள் மாட்டை ஏலம் விடாதபடி தடுப்பதற்காக நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தினார்கள்.

கழுகுமலை, வானரமுட்டி, குறுக்குச்சாலை, எட்டயபுரம், கோவில்பட்டி என பல ஊர்களில் அரசு ஏலமிடச் சென்ற பொழுது அதை விவசாயிகள் தடுத்தார்கள்.தடுத்த விவசாயிகளில் கி.ராவும் ஒருவர். அந்த விவசாயிகளின் கண்ணீர்க் கதைகளையே அவருடைய கதைகள் எதிரொலித்தன.

அவருடைய வீடு ஒரு அன்னச்சத்திரம்.வரும் அனைவருக்கும் அங்கு தாராளமாக உணவு கிடைக்கும். கம்பங் கஞ்சிதான்.

1991 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டது. இவர் எழுதிய கோபல்லகிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் முதலிய நாவல்கள் பிரசித்தி பெற்றவை.

kr

கிரா புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக அழைக்கப்பட்டார்.கரிசல் வட்டார அகராதி ஒன்றைத் தயார் செய்தார்.பேராசிரியர் நா.வானமாமலை அவர்களுடன் இருந்த தொடர்பு அடிப்படைக் காரணம்.

இலக்கியச் சிந்தனை விருது,தமிழக அரசு விருது போன்றவையும் கிடைத்தாலும் விருதுகள்தான் கவுரவம் அடைந்தன.

கி,.ராவின் இளம் வயது நண்பர் எழுத்தாளர் கு.அழகர்சாமி. இருவரும் இசையில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள்.கர்நாடக இசை இருவரையும் மயக்கியது. கு.அழகர்சாமியின் காதலுக்கு துணை நின்றவர்கள் நாதஸ்வர மேதை ராஜரத்தினம்பிள்ளை மற்றும் குற்றாலம் டி.கே.சி.யினுடைய ‘‘வட்டத் தொட்டி’’ரசிகர்கள். கி.ரா தன்னுடைய நூல்களின் ராயல்டி தொகையை அடைகின்ற உரிமையை தன்னுடைய வாசகரான புதுவை இளவேனில் என்ற சங்கருக்கு தன் மகன்களோடு இணைத்து உயில் எழுதி வைத்தார்.

கரிசல் அறக்கட்டளை உருவாக்கி தன்னுடைய இறுதிக் காலத்தில் கூட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூட இணைந்து ‘கதை சொல்லி’ என்ற காலாண்டு இதழை வெளிக்கொண்டு வந்தார். கடைசி காலத்திலும் கை நடுக்கம் இன்றி எழுதக்கூடிய ஆற்றல் கிராவுக்கு இருந்தது.

அண்டரண்டபச்சி என்ற குறுநாவலை எழுதினார்.இந்த மண்ணின் மைந்தர்களுக்கு நவீனகால இலக்கியங்களுக்கு முன்னோடி மகாகவி பாரதி. வ.வே.சு, அய்யர் வ.ரா. திருமலாச்சாரியார் போன்ற சுதந்திரப்போர் வீரர்களை அரவணைத்த புதுச்சேரி கி.ரா.வையும் அணைத்துக் கொண்டது.

தான் எழுதுவது மட்டுமின்றி பலரையும் எழுத வைத்து சுடர்களை ஏற்றி வைக்கும் சுடராக விளங்கினார்.

தனுஷ்கோடிராமசாமி,பூமணி,தமிழ்ச்செல்வன், நாறும்பூ நாதன்,கோணங்கி, சோ.தர்மன்,உதயசங்கர்,அப்பணசாமி,பா.ஜெயப்பிரகாசம், வண்ணதாசன் மாரீஸ், கலாப்பிரியா, சங்கர்ராம் என பல எழுத்தாளர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பேராசிரியர் வானமாமலை, இரகுநாதன், வல்லிக்கண்ணன், தி.க. சிவசங்கரன் போன்றவர்களை நண்பர்களாகப் பெற்றிருந்தார். சட்டமன்ற உறுப்பினர் சோ.அழகர்சாமி, எஸ்.எஸ்.டி.தியாகராஜன்,ஸ்டேட் பாங்க் பால்வண்ணம், கோபாலகிருஷ்ணன், முரளி என பலருடைய அன்பும், தோழமையையும் கொண்டவர்.

தமிழக முதல்வர் கரிசல்குயில் என அழைத்தது மிகப் பொருத்தமானது.ஒரு எழுத்தாளனைஅரசு மரியாதையுடன் அடக்கம் செய்வது என்பது புதிய வரலாறு. தி.மு.க. அரசு புதிய பாதையில் செல்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக கரிசல்குயில் விழாவுக்கு கோவில்பட்டியில் சிலை அமைப்பது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது பெருமைக்குரிய ஒன்றாக கரிசல்காரர்கள் கருதுகிறோம்.அந்தச் சிலையை நகரின் மையமான பகுதியில் வைக்க வேண்டும் என்றும் காலதாமதமின்றி வைக்கப்பட வேண்டும் என்பதும் கரிசல் மக்களின் இதயகீதமாக ஒலிக்கிறது. காலத்தின் குரலாக கிரா வாழ்ந்தார். ஒலித்தார்.

history writer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe