Skip to main content

கரிசல் குயில் கி.ரா... கரிசல் இலக்கியத்தின் பிதாமகன்!

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

காசி விஸ்வநாதன்  

 

kr

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை மையமாகக் கொண்டு கழுகுமலை, கயத்தாறு, சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ஒட்டப்பிடாரம், குறுக்குச் சாலை, விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், பூதலபுரம் வட்டாரங்கள் எல்லாம் கரிசல்பூமியாகும்.

 

இங்கு பல எழுத்தாளர்கள் மண் வாசத்தைப் பிரதிபலிக்கும் எழுத்துக்களை எழுதினார்கள். இதற்கு ‘‘முன்னத்தி ஏர்’’ ஆக திகழ்ந்தவர் கி.ராஜநாராயணன்.

 

இளமைக்காலம் தொட்டே எழுதத் தொடங்கிய கி.ரா மழைக்குத்தான் நான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன் என்று கூறினார்.

 

1923 செப்டம்பர் 16 இல் இடைசெவல் கிராமத்தில்  பிறந்த ராஜநாராயணனின் பெயர் ராயங்குல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணபெருமாள் இராமானுஜ நாயக்கர். இவருடைய தந்தை ஸ்ரீ கிருஷ்ணர் இராமானுஜன். தாயார் லட்சுமி அம்மாள். ஐந்தாவதுமகனாக பிறந்தார் கி.ரா. மனைவி கணவதி. இரண்டு பிள்ளைகள். திவாகரன்,பிரபாகர்.

 

முதல் சிறுகதை ‘‘மாயமான்’’ 1958 ஆம் ஆண்டு விஜய பாஸ்கரனின் சரஸ்வதி இதழில் வெளிவந்தது. தன் தடங்களை பல தளங்களில் பதிக்கத் தொடங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்ட கி.ரா பொதுவுடைமை சித்தாந்தத்தை ஏற்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோ.அழகர்சாமியுடன் இணைந்து பல போராட்டங்கள் கண்டவர்.

 

1969 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் இலக்கியப் பேரவை ஒன்றைத் தொடங்கினார். எஸ்.எஸ்.தியாகராஜன்,  கோ.நம்மாழ்வார்(இயற்கை விஞ்ஞானி), பால்வண்ணன் உட்பட பன்னிரெண்டு பேர் நிர்வாகிகள். இதன் துணைத் தலைவராக கி.ரா செயல்பட்டார். மாத சந்தா ஒரு ரூபாய். ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை முன்னிரவு இலக்கியப் பேரவை கூடும். 

 

kr

 

கோவில்பட்டி வட்டாரத்தில் பொதுவுடமைக் கொள்கைகள் வேகமாகப் பரவிய காலத்தில் விவசாயிகளுடைய பஞ்சம் துயரம் எதைப்பற்றியும் கவலைப்படாத காங்கிரஸ் அரசு கெடுபிடி வசூலில் இறங்கியது. பண்டபாத்திரங்கள், ஆடுமாடுகள், வீடுகளின் கதவுகள் கூட ஜப்தி செய்யப்பட்டன. நாச்சியார்பட்டி ரெங்கசாமி என்ற விவசாயியின் வீட்டில் உழவு மாடுகள் ஜப்தி செய்யப்பட்டன. மிகுந்த துயரங்களுக்கு ஆளான மக்கள் மாட்டை ஏலம் விடாதபடி தடுப்பதற்காக நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தினார்கள்.

 

கழுகுமலை, வானரமுட்டி, குறுக்குச்சாலை, எட்டயபுரம், கோவில்பட்டி என பல ஊர்களில் அரசு ஏலமிடச் சென்ற பொழுது அதை விவசாயிகள் தடுத்தார்கள். தடுத்த விவசாயிகளில் கி.ராவும் ஒருவர். அந்த விவசாயிகளின் கண்ணீர்க் கதைகளையே அவருடைய கதைகள் எதிரொலித்தன.

 

அவருடைய வீடு ஒரு அன்னச்சத்திரம். வரும் அனைவருக்கும் அங்கு தாராளமாக உணவு கிடைக்கும். கம்பங் கஞ்சிதான்.

 

1991 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டது. இவர் எழுதிய கோபல்லகிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் முதலிய நாவல்கள் பிரசித்தி பெற்றவை.

 

kr

 

கிரா புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக அழைக்கப்பட்டார். கரிசல் வட்டார அகராதி ஒன்றைத் தயார் செய்தார். பேராசிரியர் நா.வானமாமலை அவர்களுடன் இருந்த தொடர்பு அடிப்படைக் காரணம்.

 

இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது போன்றவையும் கிடைத்தாலும் விருதுகள்தான் கவுரவம் அடைந்தன.

 

கி,.ராவின் இளம் வயது நண்பர் எழுத்தாளர் கு.அழகர்சாமி. இருவரும் இசையில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். கர்நாடக இசை இருவரையும் மயக்கியது. கு.அழகர்சாமியின் காதலுக்கு துணை நின்றவர்கள் நாதஸ்வர மேதை ராஜரத்தினம்பிள்ளை மற்றும் குற்றாலம் டி.கே.சி. யினுடைய ‘‘வட்டத் தொட்டி’’ ரசிகர்கள். கி.ரா தன்னுடைய நூல்களின் ராயல்டி தொகையை அடைகின்ற உரிமையை தன்னுடைய வாசகரான புதுவை இளவேனில் என்ற சங்கருக்கு தன் மகன்களோடு இணைத்து உயில் எழுதி வைத்தார்.

 

கரிசல் அறக்கட்டளை உருவாக்கி தன்னுடைய இறுதிக் காலத்தில் கூட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூட இணைந்து ‘கதை சொல்லி’ என்ற காலாண்டு இதழை வெளிக்கொண்டு வந்தார். கடைசி காலத்திலும் கை நடுக்கம் இன்றி எழுதக்கூடிய ஆற்றல் கிராவுக்கு இருந்தது.

 

அண்டரண்டபச்சி என்ற குறுநாவலை எழுதினார். இந்த மண்ணின் மைந்தர்களுக்கு நவீனகால இலக்கியங்களுக்கு முன்னோடி மகாகவி பாரதி. வ.வே.சு, அய்யர் வ.ரா. திருமலாச்சாரியார் போன்ற சுதந்திரப்போர் வீரர்களை அரவணைத்த புதுச்சேரி கி.ரா.வையும் அணைத்துக் கொண்டது.  

 

தான் எழுதுவது மட்டுமின்றி பலரையும் எழுத வைத்து சுடர்களை ஏற்றி வைக்கும் சுடராக விளங்கினார்.

 

தனுஷ்கோடிராமசாமி, பூமணி, தமிழ்ச்செல்வன்,  நாறும்பூ நாதன், கோணங்கி, சோ.தர்மன், உதயசங்கர், அப்பணசாமி, பா.ஜெயப்பிரகாசம், வண்ணதாசன் மாரீஸ், கலாப்பிரியா, சங்கர்ராம் என பல எழுத்தாளர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

பேராசிரியர் வானமாமலை, இரகுநாதன், வல்லிக்கண்ணன், தி.க. சிவசங்கரன் போன்றவர்களை நண்பர்களாகப் பெற்றிருந்தார். சட்டமன்ற உறுப்பினர் சோ.அழகர்சாமி, எஸ்.எஸ்.டி.தியாகராஜன், ஸ்டேட் பாங்க் பால்வண்ணம், கோபாலகிருஷ்ணன், முரளி என பலருடைய அன்பும், தோழமையையும் கொண்டவர்.

 

தமிழக முதல்வர் கரிசல்குயில் என அழைத்தது மிகப் பொருத்தமானது. ஒரு எழுத்தாளனை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வது என்பது புதிய வரலாறு. தி.மு.க. அரசு புதிய பாதையில் செல்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக கரிசல்குயில் விழாவுக்கு கோவில்பட்டியில் சிலை அமைப்பது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது பெருமைக்குரிய ஒன்றாக கரிசல்காரர்கள் கருதுகிறோம். அந்தச் சிலையை நகரின் மையமான பகுதியில் வைக்க வேண்டும் என்றும் காலதாமதமின்றி வைக்கப்பட வேண்டும் என்பதும் கரிசல் மக்களின் இதயகீதமாக ஒலிக்கிறது. காலத்தின் குரலாக கிரா வாழ்ந்தார். ஒலித்தார். 

 

 

  

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
1000 year old Mahavira sculpture discovered

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கி.பி.11ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி பகுதியில் கள ஆய்வின் போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ. சரத் ராம் ஆகியோர் கண்டுபிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறியதாவது, ‘விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ் இடையன்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில் மகரத் தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்திய விநோதம், சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இவை ஆதாரமாக உள்ளன. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இச்சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக’ அவர் தெரிவித்தார்.