ADVERTISEMENT

உலகின் புகழ்பெற்ற புகைப்படத்தின் கதை !!!

04:04 PM Jun 14, 2018 | vasanthbalakrishnan

சே - பிறந்த தினம் இன்று

ADVERTISEMENT


சென்னை இளைஞர்களின் டீ-ஷர்ட்களிலும், பைக் வைசர்கள், சாவிக்கொத்துகளிலும், ஃபேஸ்புக் புகைப்படங்களிலும், கடிகாரங்கள், ஏன், காலணிகளிலும் கூட இருக்கும் இந்தப் படம் உலகப் புகழ் பெற்றது. சென்னை மட்டுமல்ல, ஜியோ நெட்வொர்க் சரியாகக் கிடைக்காத குக்கிராமங்களிலும் இவரைப் பார்க்கலாம். இவர் யாரென்றே தெரியாதவர்களுக்கும் கூட, தீர்க்கமும் கோபமும் உறைந்த இந்தப் புகைப்படமும், 'சே' என்னும் சொல்லும், இன்று வரை புரட்சியின் அடையாளமாக இருக்கிறது. இந்தப் படத்திற்கும் படம் போட்ட பொருள்களுக்கும் உலக இளைஞர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பினால், உலகின் மிகப்பெரிய வணிக அடையாளமாக ஆக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் புகழ் பெற்ற கலைகளுக்கான கல்லூரியான மேரிலாண்ட் கல்லூரி, இந்தப் படத்தை உலகின் மிகப் புகழ் பெற்ற புகைப்படமாக அறிவித்துள்ளது. லண்டனில் உள்ள, விக்டோரியா-ஆல்பர்ட் அருங்காட்சியகம், 'இந்தப் படம் அளவுக்கு உலகில் வேறு எந்தப் படமும், பல வடிவங்களில் மிக அதிகமாக மருவுருவாக்கம் செய்யப்படவில்லை" என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT

இத்தகைய புகழ் பெற்ற இந்தப் புகைப்படத்தை எடுத்தவர், ஆல்பர்டோ கோர்டா என்ற பத்திரிகை புகைப்படக்கலைஞர். 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி, கியூபாவின் தலைநகரான ஹவானாவில் நடந்த ஒரு நினைவஞ்சலி நிகழ்வின் போது இது எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்தின் முதல் பிரதியில் சேகுவேராவுக்கு அருகில் ஒரு மரத்தின் பகுதியும், இன்னொரு பக்கம் வேறொருவரும் இருந்தனர். "சேவின் கண்களில் நான் கண்ட சலனமற்ற தன்மையும், கோபமும், சோகமும் ஒருங்கே இருந்த முகமும் என்னை ஆச்சரியப்படுத்தின", என்று கூறிய ஆல்பர்டோ, அந்தப் புகைப்படத்தில் சே மட்டும் தனியே இருக்கும் வண்ணம் வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர், 1963 ஆம் ஆண்டு, அயர்லாந்தைச் சேர்ந்த ஜிம் ஃபிட்ஸ்பாட்ரிக் என்ற மாணவர், சேகுவேராவைச் சந்தித்து, பழகி அவர் மீது மிகுந்த மதிப்பு உருவாகி, இந்தப் புகைப்படத்தை மேலும் மெருகூட்டி வடிவமைத்தார். அந்த வடிவம் மெல்லப் புகழ் பெற்றது. இணையம் உலகத்தை இணைத்த பின், கட்டுக்கடங்காத சுதந்திரத்தையும், எந்த அடக்குமுறையையும் எதிர்க்கும் தைரியத்தையும் வெளிப்படுத்தும் அந்தப் புகைப்படம் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானது. சே, எதிர்த்த அமெரிக்காவிலும் கூட அவரது படம் போட்ட பொருட்களின் விற்பனை அதிகம் தான்.


சேகுவேராவைப் பற்றிய மேலும் சில தகவல்கள்...

'சே' ஒரு மருத்துவர். தொழுநோய்க்கான சிகிச்சையில் மிகுந்த ஆர்வமும் அறிவும் கொண்டவர்.

அயர்லாந்தைப் பூர்விகமாகக் கொண்ட தந்தைக்கு அர்ஜென்டினாவில் பிறந்த எர்னஸ்டோ குவேரா, கியூபா மக்களால் நேசிக்கப்பட்டு, பின் உலகப் புகழ் பெற்றிருக்கிறார்.

1950ஆம் ஆண்டு, ஒரு சைக்கிளில் தனியாக சுமார் 4500 கிமீ வடக்கு அர்ஜென்டினா முழுவதும் சுற்றினார். பின்னர், 1951இல் தன் நண்பர் அல்பர்டோ க்ரேனடோவுடன் இணைந்து இவர் சென்ற 8000 கிமீ மோட்டார் சைக்கிள் பயணம் புகழ்பெற்றது. 'சே' வின் புரட்சி வாழ்வுக்கு அடித்தளமாக அமைந்த இந்தப் பயணம், 'மோட்டார் சைக்கிள் டைரிஸ்' என்ற புத்தகமாகவும், பின்னர் திரைப்படமாகவும் வந்தது.


சே - ஃபிடல் இருவருக்குமான நட்பும் உலகப்புகழ் பெற்றது. இவர்கள் இருவரும் முதலில் சந்தித்தது 1955இல். முதல் சந்திப்பிலேயே தொடர்ந்து பத்து மணிநேரம் புரட்சி குறித்து உரையாடினர். அடுத்த வருடம் 'மெக்சிகோ'வில் இவர்கள் இருவரும் சிறைவைக்கப்பட்டனர். ஃபிடலை மட்டும் முதலில் விடுவித்தபோது, 'சே இல்லாமல் நான் போக மாட்டேன்' என்று காத்திருந்து சேகுவாரவுடன் தான் விடுதலையானார் ஃபிடல்.

படிஸ்டா அரசை வீழ்த்தி, க்யூபப் புரட்சி பெற்ற வெற்றிக்குப் பின் சில காலம் கியூபாவில் அமைச்சராகப் பணியாற்றினார் சே. அப்பொழுது, கல்வியில் மிகுந்த அக்கறை காட்டினார். 60 சதவிகிதமாக இருந்த கியூபாவின் கல்வி விகிதம், 'சே'வின் காலத்தில் 96 சதவிகிதமாக உயர்ந்தது.

இறுதிக்காலத்தில், சே-ஃபிடல் நட்பில் விரிசல் உருவானது. ரஷ்யாவுடனான உறவு விஷயத்தில் இருவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தன. இதனால், சேகுவேராவை ஃபிடல் கேஸ்ட்ரோ ஒதுக்கினார் என்றும் கூறப்படுகிறது. கியூபாவின் தலைவனாகத் தான் மட்டுமே அறியப்படவேண்டுமென ஃபிடல் விரும்பியதாகவும் கூறப்பட்டது.

போராடிப் பெற்ற கியூப வெற்றியில் சொகுசாக நிற்காமல், காங்கோ, பொலிவியா மக்களின் புரட்சியை வழிநடத்தச் சென்றார் சே. ஆனால், அவை வெற்றி பெறவில்லை.

சேகுவேராவின் முதல் மனைவி கில்டா. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆனால், காதல் வாழ்க்கை நீடிக்கவில்லை. இரண்டாம் மனைவி அலீடா மார்ச்சுடன் வாழ்ந்த காதல் வாழ்வில் நான்கு பிள்ளைகள் பெற்றார்கள்.

பொலிவியாவின் காடுகளில், அமெரிக்காவின் உதவியுடன் செயல்பட்ட பொலிவிய ராணுவம், 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 8 அன்று இவரைப் பிடித்தது. அடுத்த நாளான அக்டோபர் 9 அன்று கொல்லப்பட்டார் சே. கொல்லப்பட்ட போதும் கண்கள் மூடாத நிலையில் இருக்கும் இவரது புகைப்படம் அடக்கப்படும் ஒவ்வொரு தேசத்தின் இளைஞர்களையும் போராட அழைப்பதாய் இருக்கும். இவர் கொல்லப்பட்ட பின், இவரது கைகள் வெட்டப்பட்டு, கைரேகைச் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் உறுதி செய்யப்பட்டது. இந்தக் கதை நமக்கு நெருக்கமாகத் தோன்றுகிறதல்லவா?

கொல்லப்பட்ட பின், இவரது உடலைத் தர மறுத்து, புதைத்த இடத்தையும் ரகசியமாக வைத்திருந்தது பொலிவியா. முப்பது ஆண்டுகள் கடந்து, 1997இல் அவரது மிச்சங்களைக் கொண்டு சென்று, நினைவிடத்தில் வைத்தது கியூபா.

இத்தகைய வாழ்வு வாழ்ந்த சேகுவேராவை வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். அவர், தேவையே இல்லாமல், பல உயிர்களைக் கொன்றார் என்றும் ஒரு பேச்சு உண்டு. ஆனால், அவர் ஒரு போதும், மக்களை சந்தையாக மாற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தை விரும்பியதில்லை. இன்று, அவரது படமே ஒரு மிகப்பெரிய நுகர்பொருளாக மாற்றப்பட்டு, கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யப்படுவது, மிகப்பெரிய முரண். என்றாலும், அம்பேத்கர், காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் எல்லாரும் நமக்கு மத்தியில் படும் பாட்டில், இது நமக்குப் பெரிய விஷயமல்ல...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT