நெருக்கடிகளே திவ்யாபாரதியின் வேலைக்கான அங்கீகாரம்!: பாலாஜி சக்திவேல்

சாதிமத ஏற்றத்தாழ்வுகள், மூட நம்பிக்கைகள், சமூக பிரிவினைகள் மற்றும் பெண்ணடிமைத் தனங்களை வாழும் காலம்வரை எதிர்த்து வாழ்ந்து காட்டியவர் பெரியார் சாக்ரடீசு. பொது செயல்பாடுகளில் அவரது அறிவும், அனுபவமும் ஒப்பற்றது. அதனால்தான் தன் மகளுக்கு ‘தமிழீழம்’ எனப் பெயர்சூட்டி அழகுபார்த்தார். அவரது நினைவைப் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ‘பெரியார் சாக்ரடீசு நினைவு விருது’ சமூக செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
Advertisment



அதேபோல் 2017-ஆம் ஆண்டுக்கான பெரியார் சாக்ரடீசு நினைவு விருது வழங்கும் விழா, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கொளத்தூர் மணி, சி. மகேந்திரன், இயக்குனர் பாலாஜி சக்திவேல் என பலர் கலந்துகொண்டனர். எழுத்தாளரும், மஞ்சள் நாடகத்தின் கதையாசிரியருமான ஜெயராணி மற்றும் கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யா பாரதி ஆகிய இருவருக்கும் பெரியார் சாக்ரடீசு நினைவு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisment

கடந்த சில தினங்களுக்கு முன்பு திவ்யா பாரதி, அவரது கல்லூரிக்காலத்தில் போடப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி கைதுசெய்யப்பட்டார். அன்றுமுதல் கக்கூஸ் ஆவணப்படத்தில் தவறான கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளதாகக் கூறி, குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலரால் அவர் தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக வலைதளங்களின் வாயிலாக தாக்கப்பட்டார். மேலும், இதே காரணங்களால் சில நெருக்கடியான அரசியல் சூழலுக்குள்ளும் அவர் தள்ளப்பட்டார். இதனால் பெரியார் சாக்ரடீசு நினைவு விருது வழங்கும் விழாவிற்கு தன்னால் வரமுடியாத சூழலை திவ்யா பாரதி விளக்கியிருந்தார்.

திவ்யா பாரதி போன்ற சமூக செயற்பாட்டாளர்களின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் குறித்து பெரியார் சாக்ரடீசு விருது வழங்கும் விழாவில் பேசிய இயக்குனர் பாலாஜி சக்திவேல், ‘இந்த இரு தோழர்களும் பெரியார் சாக்ரடீசு விருது பெறத் தகுதியானவர்கள். திவ்யா பாரதி இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லையென கேள்விப்படேன். அவர் வேலையைச் சரியாக செய்கிறார். அதனால் தான் இத்தனை இடர்பாடுகளும், தலைமறைவு வாழ்க்கையும் அவரைத் துரத்துகின்றன. அவரது வேலை வரலாற்றில் பதியக்கூடியது என்பதை உணர்த்துகின்றது இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி.
Advertisment

ஒருபக்கம் அவர்மீது சமூகவிரோதிகள் அவதூறுகளைப் பதிவு செய்யும் அதேவேளையில், இங்கு அவர் செய்த பணியின் சிறப்பைப் பதிவு செய்திருக்கிறீர்கள். ஒரு முற்றிய சர்வாதிகாரப் போக்கான அரசியல் சூழலில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் பெண் செயல்பாட்டாளர்களின் ஒப்பற்ற பணியினைக் கொண்டாடக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த நெருக்கடியாளர்களுக்கு ஒருவிதத்தில் நாம் நன்றி சொல்லவேண்டும். இதுமாதிரியான கூட்டங்கள் நெருக்கடியாளர்களின் மத்தியில் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்புகிறேன். ஜெயராணி கேட்டுக்கொண்டதற்கிணங்க முற்போக்குக் கொள்கைகளைத் தாங்கிச் செல்லும் புனைக்கதைகளை என் வரைமுறைக்குட்பட்டு சினிமாவில் நிச்சயம் பதிவுசெய்வேன்’ என்றார் உறுதியாக.

போராட்டங்களும், புரட்சியும் தமிழகத்திற்கு புதியதல்ல. வரலாறுகளும் அதைத்தான் உரக்கச் சொல்கின்றன. சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புரட்சியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஒருபோதும் வென்றதில்லை. திவ்யா பாரதி மீதான ஆணாதிக்க, பிற்போக்குத் தனமான தாக்குதல்களும் அதுபோலவே. காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

- ச.ப.மதிவாணன்