Advertisment

மகளிர் தினம் ஸ்பெஷல்: 3500 ரூபாய்க்கு விற்கப்பட்ட அடிமை நான்!

சேலம் மாவட்டம் புத்தூர் அக்ரஹாரம் சந்தனக்காரன் காடு பகுதியில், 'செட்டியாரம்மா' என்றால் சின்ன குழந்தைகளும் சொல்லி விடும். ஆமாம். ஜெயந்தியை (50) அப்பகுதியில் அப்படித்தான் அழைக்கிறார்கள். சத்தியமங்கலத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் பிழைப்புத்தேடி கைக்குழந்தைகளுடன் சேலம் வந்த அவர், சந்தனக்காரன் காடு கிராமத்தின் அடையாளமாக மாறி இருக்கிறார்.

''தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்து சோர்விலாள் பெண்''

Advertisment

என்ற அய்யன் வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப, தன்னையும் உயர்த்திக்கொண்டு கரம் பற்றிய கணவரையும், பெற்றெடுத்த பிள்ளைகளையும் கரை சேர்த்திருக்கிறார் ஜெயந்தி. கணவர் கிருஷ்ணராஜ். ஒரு மகன், ஒரு மகள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

womens day special salem women life story

கைத்தறி நெசவாளர் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் ஜெயந்தி. கைத்தறி நாடாவின் ஊசலாட்ட ஓசைதான் அவரின் கு-ழந்தை பிராய தாலாட்டு. 'தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்; தெரியாத தொழிலில் நுழைந்தவனும் கெட்டான்' என்பதை புரிந்து கொண்ட ஜெயந்தி, தன் வீட்டிலேயே சொந்தமாக ஐந்து கைத்தறிகளை போட்டிருக்கிறார். கோவை, ஆரணி ரக சேலைகளை நெய்து வருகின்றனர். தவிர, வெளியிலும் ஆறு கைத்தறி நெசவாளர்களிடம் பாவு கொடுத்து சேலைகளை நெய்து வாங்கி விற்பனை செய்து வருகிறார். அத்தனையும் சுத்தப்பட்டு.

Advertisment

டிஸ்கவரி சேனல் ரசிகர்களுக்கு பேர்கிரில்ஸ் ரொம்பவே பரிச்சயம். அடர்ந்த வனத்திற்குள் இருந்து, கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு எப்படி அவர் கொடிய விலங்குகள், பாம்புகளிடம் இருந்து தப்பித்து வெளியே வருகிறார் என்பதுதான் பேர்கிரில்ஸின் தொடரில் சொல்லப்படுவது. ஜெயந்தியும் கிட்டத்தட்ட பேர்கிரில்ஸ் போன்றவர்தான் என்பதை அவருடனான உரையாடலில் இருந்து உணர முடிந்தது.

''ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்தான் என்னோட பூர்வீகம். சுத்தப்பட்டு சேலைகளை கைத்தறியில் நெய்வதுதான் எங்களோட குடும்பத்தொழில். அதனால், சுத்தப்பட்டு கைத்தறியில் எல்லாமே எனக்கு அத்துபடி. சேலம் மாவட்டம் ஓமலூர்தான் என் கணவருடைய பூர்வீகம். அவங்க குடும்பத்தோட சந்தனக்காரன் காடு கிராமத்தில்தான் இருந்தாங்க. அவங்க குடும்பத்தோடு பிழைப்பு தேடி சத்தியமங்கலம் வந்து தறிப்பட்டறைகளில் வேலை செய்துட்டு இருந்தாங்க.

womens day special salem women life story

தெரிந்தவர் மூலமாக அவருக்கு கல்யாணம் செய்து வைக்க என்னை பெண் கேட்டு வந்தனர். என்னுடைய அத்தை மகனே அப்போது திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தார். ஆனால் அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு பெண் கொடுக்க அப்பா, அம்மா ஒத்துக்கல. வசதி இல்லைனாலும் நல்ல பையனாக தெரிகிறாரேனு இவருக்கே (அருகில் இருக்கும் கணவரை காட்டுகிறார்) கட்டிக்கொடுத்தனர்.

ஆனால் கல்யாணத்துக்குப் பிறகுதான், என் வீட்டுக்காரர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்னு தெரிஞ்சது. ஒழுங்காக எந்த வேலைக்குப் போறதில்ல. சினிமா பைத்தியம்னு சொல்ற அளவுக்கு படம் பார்ப்பாரு. சிவாஜி படம்னா எத்தனை முறைனாலும் பார்த்துடுவாரு. எப்போது பார்த்தாலும் தண்ணீ அடிக்கிறது... காசு வெச்சி தாயக்கரம் ஆடறதுமாவே திரிஞ்சாரு.

மளிகை சாமான் வாங்கிட்டு வரச்சொல்லி பணம் கொடுத்துவிட்டாலும் அந்த காசுக்கும் குடிச்சிட்டு வந்துடுவாரு. அவ்வளவு ஏங்க... துணிப்பையைக் கூட இரண்டு ரூபாய்க்கு வித்து ஊறுகா வாங்கிடுவாரு. இதுக்கிடையில எங்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் பொறந்தது. சாராயம் குடிக்கறதுக்காக அவர், ஊரைச் சுத்தி கடன் வாங்கிட்டதால கடன்காரங்க எங்க வீட்டுக்கு வர்றதும் போறதுமாவே இருந்தாங்க.

எங்களால இனியும் சொந்த ஊர்ல மானத்தோட வாழ முடியுமானு தெரியல. இது பத்தாதுனு, என்னையும் என் பிள்ளைகளையும் தறிக்காரர் ஒருத்தர்கிட்ட 3500 ரூபாய்க்கு அடமானம் வெச்சிட்டு, சொல்லாம கொள்ளாம என் வீட்டுக்காரரும் அவங்க அம்மாவும் சத்தியமங்கலத்துல இருந்து சேலத்துக்கு ஓடிவந்துட்டாங்க.

கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க வழிதெரியாததால, சொந்த ஊரைவிட்டு வெளியேறிடணும்னு நினைச்சேன். அப்போது என் பிள்ளைகள் ரெண்டு பேரும் கைக்குழந்தைங்க. அவங்களையும் இழுத்துக்கிட்டு மாத்துத் துணிகளையும், சமையலுக்குத் தேவையான பண்டபாத்திரங்களையும் ஒரு சாக்குமூட்டையில போட்டுக்கிட்டு பிழைப்புத்தேடி இந்த ஊருக்கு வந்துட்டேன். இருபது வருஷம் ஓடிப்போச்சு. கூட என் மாமியாரும் இந்த ஊருலதான் இருந்தாங்க.

இப்போ நாங்கள் குடியிருக்கிற இந்த வீட்டுலதான் 70 ரூபாய் வாடகைக்கு குடி வந்தோம். கைத்தறி நெசவு வேலைக்குப் போவேன். ஒரு சேலை நெய்தால் 175 ரூபாய் கூலி கிடைக்கும். அப்போது இந்த வீடு மேற்கூரை ஓடுகூட போடாமல் அட்டை மட்டும்தான் போட்டிருந்தது. என் மாமியார் எனக்கு சப்போர்ட்டாக இருந்தாங்க. ஆனா என் வீட்டுக்காரர்கிட்ட பெரிசா எந்த முன்னேற்றமும் வரல.

womens day special salem women life story

சேலத்துக்கு வந்த கொஞ்ச நாள்லயே பண்ணாரியம்மன் களஞ்சியம்கிற ஒரு மகளிர் குழுவிலிலும் சேர்ந்துக்கிட்டேன். இந்த நிலையிலதான் இப்போது நாங்க குடியிருக்கிற இந்த வீடும், அதோடு சேர்ந்த காலி நிலமும் என மொத்தம் ஆறு சென்ட் நிலத்த (ஒரு கிரவுண்டு பரப்பளவுக்கும் சற்று அதிகம்) வித்துடப் போறதா வீட்டு உரிமையாளர் சொன்னாரு. வீடு வாங்கறதுக்காக களஞ்சியம் குழு மூலமாக ஒரு லட்சம் ரூபாய் கடன் எடுத்தேன். அதை வைத்து, இந்த வீட்டையும் நிலத்தையும் சொந்தமாக விலைக்கு வாங்கினேன்,'' என தான் வாடகைக்கு குடியிருந்த வீட்டையே சொந்தமாக்கியதில் பெருமிதமாகச் சொன்னார் ஜெயந்தி.

ஒற்றை சாக்கு மூட்டையுடன் இந்த ஊருக்கு வந்து, வாடகைக்கு ஒண்டியிருந்த வீட்டை அடுத்த ஏழே ஆண்டுகளில் விலைக்கு வாங்கி, அதே வீட்டின் உரிமையாளராக உயர்ந்தபோது, 'எப்படி வந்த செட்டியாரம்மா இன்னிக்கு இப்படி ஒசந்துட்டாங்களே...' என்று அந்த ஊரே அவரைப்பற்றி இன்றளவும் வியந்து பேசிக்கொண்டு இருக்கிறது.

அவருடைய முன்னேற்றத்திற்கு அவர் சார்ந்துள்ள மகளிர் குழு வழங்கிய கடனுதவி பெரும் பக்கபலமாக இருந்திருக்கிறது. வீட்டிலேயே சொந்தமாக முதன்முதலில் இரண்டு கைத்தறி இயந்திரங்களை நிறுவுவதற்காக அந்த மகளிர் குழு மூலமாக 1.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். வீட்டை விரிவாக்கம் செய்யவும் 1.25 லட்சம் ரூபாய் கடன் எடுத்திருக்கிறார். இரண்டு தறியில் தொடங்கிய அவருடைய சுயதொழில், இன்றைக்கு 5 கைத்தறி இயந்திரங்களை சொந்தமாக நிறுவிய அளவுக்கு வளர்ந்திருக்கிறார். தவிர, அவுட்சோர்சிங் முறையில் வெளியில் 6 கைத்தறி நெசவாளர்களிடமும் பாவு நூல் கொடுத்து, பட்டுச்சேலை நெய்து வாங்குகிறார்.

ஆரணி மற்றும் கோவை ரக பட்டுச்சேலைகளை நெய்கின்றனர். கோயம்பத்தூர் ரக பட்டுச்சேலை பாவைக்காட்டிலும் ஆரணி ரக பாவின் நீளம் ஒரு மீட்டர் வரை அதிகம். கோயம்பத்தூர் ரகத்தில் ஒரு சேலை நெய்தால் 1600 ரூபாயும், ஆரணி ரக சேலைக்கு 2600 ரூபாயும் கூலி கிடைக்கும். கூலித்தொகையில் நான்கில் ஒரு பங்கு, நெசவாளர்களுக்கு வேலை கொடுப்பவர்கள் பங்குத்தொகையாக பெற்றுக்கொள்வார்கள் என்கிறார் ஜெயந்தி. சிறு குறைபாடுள்ள பட்டுப்புடவைகளை வெளிச்சந்தையில் நேரடியாக விற்று விடுவதால் அதன்மூலமும் கணிசமான வருவாய் கிடைக்கிறது என்கிறார்.

நெசவாளர்களுக்கு கூலி கொடுப்பது முதல் பட்டுச்சேலைகளை கடைகளுக்குக் கொண்டு சென்று கொடுப்பது வரை எல்லா வேலைகளையும் ஆண்களுக்கு நிகராக ஜெயந்தியே செய்து விடுகிறார்.

womens day special salem women life story

இப்போதும் தன் கணவரின் போக்கில் பெரிதாக மாற்றங்கள் இல்லை எனக்கூறும் அவர், கணவருக்கும் தினமும் 150 ரூபாய் கூலி கொடுத்து விடுவாராம். குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்ட ஒருவருக்கு கையில் பணம் கொடுத்தால் மேலும் மதுப்பழக்கத்திற்கு தூண்டுவதுபோல் ஆகாதா? எனக் கேட்டோம்.

''கையில காசு இல்லேனா வீட்டுல இருக்கற பொருள எடுத்துட்டுப்போய் வித்துக் குடிச்சிடுவாரு. அதுமட்டுமில்லீங்க... குடிச்சிட்டு ரோட்டுல எங்காவது விழுந்து கிடந்தா நமக்குதானேங்க அவமானம்? நாம நாலு பேருக்கு புத்தி சொல்ற இடத்துல இருக்கும்போது நமக்கு நாலு பேரு புத்தி சொல்ற மாதிரி இருந்தா நல்லாருக்கும்களா? அதனாலதான், நானே அவருக்கு தினமும் கைச்செலவுக்குனு 150 ரூபாய் கொடுத்துடுவேன். இப்போலாம் முன்னாடி மாதிரி இல்ல. எவ்வளவு போதையானாலும் வீட்டுலதான் வந்து கிடப்பாரே தவிர ரோட்டுல விழுந்து கிடக்கறதில்ல...,'' என்கிறார் ஜெயந்தி.

சுத்தப்பட்டு நெசவில் மட்டுமின்றி, உள்ளூரில் பத்தாண்டுக்கும் மேலாக அரிசி சீட்டும் நடத்தி வருகிறார். வருவாயைப் பெருக்கும் வழிகளை அவர் தெரிந்து வைக்கிறார்.

''பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி என் பொண்ணுக்கு கல்யாணம் செய்தேன். வீட்டுக்காரர் மற்றும் சொந்தக்காரர்களிடம் இருந்து எந்த ஒரு சப்போர்ட்டும் இல்லாத நிலையில் தனி மனுஷியாக போராட வேண்டிய நிலை இருந்தது. வட்டிக்குக்கூட கடன் கொடுக்க தயங்கினாங்க. பணத்துக்கு வழி தெரியாததால நான் ரோட்டுல நின்னு அழுதுட்டு இருந்தேன்.

என் நிலைமையை புரிஞ்சுக்கிட்ட மகளிர் குழு நிர்வாகத்தினர், என்னுடைய கடன் பாக்கியை கழிச்சுட்டு புதிதாக 75 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர். அதை வைத்து என் மகளின் கல்யாணத்தை ரொம்ப எளிமையாக நடத்தி முடிச்சிட்டேன். மாப்பிள்ளை தரப்பில் ஏதும் கேட்கலைனாலும்கூட, அந்த நிலைமையிலயும் என் பொண்ணுக்கு ரெண்டு பவுன் நகை போட்டேன்.

என் ரெண்டு புள்ளைங்களோட வெத்து மனுஷியாக இந்த ஊருக்கு வந்தபோது ஒருவேளை சோத்துக்குக்கூட கஷ்டப்பட்டிருக்கோம். அந்த நேரத்துல எங்களுக்கு இந்த ஊருல பக்கபலமாக பல பேர் இருந்தாங்க. களஞ்சியம் மகளிர் குடும்பத்துல ஒருத்தர் போல கூடவே இருந்தது,'' எனும்போது ஜெயந்தியின் கண்களில் இருந்து அவரையும் அறியாமலேயே கண்ணீர் கசிந்தது.

happy womens day Salem special story
இதையும் படியுங்கள்
Subscribe