Advertisment

மகளிர் தினம்: வட தமிழகத்தில் விழா... தென்மண்டல பெண் காவலர்களுக்கு ‘அடக்கி வாசி’ உத்தரவு?

wd-police-3

சென்னை

உலகம் முழுவதும் பெண்களின் உரிமை, சமத்துவம் மற்றும் சமூகப் பங்களிப்பை நினைவூட்டும் நாளாக சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களிலிருந்தே இந்த நாள் உருவானது. சம ஊதியம், வாக்குரிமை, வேலை நேரக் குறைப்பு போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்திய அந்த இயக்கங்கள் பின்னர் உலகளவில் பரவின. ஜெர்மன் பெண்ணியவாதி கிளாரா ஜெட்கின் முன்வைத்த முயற்சியின் மூலம் இந்த நாள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது. பின்னர் 1975இல் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக மார்ச் 8ஐ சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. இந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் பெண்களின் சாதனைகள் போற்றப்படுகின்றன. காவல்துறை, அரசுத் துறை, தனியார் துறை என பல்வேறு இடங்களில் பெண்களின் பங்களிப்பு நினைவுகூரப்பட்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

Advertisment

வடதமிழகத்தில் உற்சாகம் :

தமிழ்நாட்டிலும் பல இடங்களில் மகளிர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில், பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், ஐபிஎஸ் காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆணையர் அலுவலக வளாகத்தில் பெண் பணியாளர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதேபோல் கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், ஐபிஎஸ் கலந்து கொண்டு பெண் காவலர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் காவலர்களின் பெண் குழந்தைகளும் பங்கேற்று கலைநிகழ்ச்சிகள் வழங்கினர். சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பெண்களை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக காவல்துறை சமூக வலைத்தளப் பக்கங்களில் புகைப்படங்கள் வெளியானது.

Advertisment

wd-police

தென்மண்டலத்தில் கப்-சிப் :

ஆனால் இதற்கு மாறாக தென்மண்டல காவல் துறையில் மகளிர் தினம் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை எனக் குமுறல் வெளிப்பட்டது. தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி வாய்மொழியாக “அடக்கி வாசிக்க வேண்டும்” என்ற உத்தரவு வழங்கியதாக காவல்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் காலம் என்பதால் வெளிப்படையான நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம், தனியாக மண்டபம் எடுத்து கொண்டாட கூடாது; காவல் நிலையங்களுக்குள் எளிமையாகவே நிகழ்ச்சி நடத்தலாம் என்ற அறிவுறுத்தல் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பல மாவட்டங்களில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விருதுநகரில் மாற்றப்பட்ட திட்டம் : 

wd-police-2

இந்த விவகாரம் குறித்து  விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் காவல்நிலையங்களில் ஆதங்கம் வெளிப்பட்டுள்ளது. அங்கு சில பெண் காவலர்கள் முன்கூட்டியே மண்டபம் முன்பதிவு செய்து மகளிர் தின விழாவை நடத்த திட்டமிட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பின்னர் வந்த உத்தரவால் அந்த மண்டப நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதனால் வெளிப்படையான கொண்டாட்டம் நடைபெறாமல், காவல் நிலையங்களுக்குள் ரகசியமாக நடந்தது.  சில இடங்களில் பெண் காவலர்கள் அமைதியாக ஒன்றுகூடி பிரியாணி பகிர்ந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் பெரிதாக புகைப்படங்கள் வெளிவராததற்கும் இதுவே காரணம் என கூறப்படுகிறது. இருந்தாலும் ஒரு இடத்தில் எடுத்த குழு புகைப்படம் மட்டும் முகநூலில் வெளியாகியுள்ளது.

“நாங்களும் பெண்கள்தான்”  -  பெண் காவலரின் வருத்தம் : 

இந்த நிலை குறித்து தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒரு பெண் காவலர் கூறியதாவது:  “ஆண்களுக்கு இணையாக காக்கி சீருடை அணிந்து, நேரம் காலம் பார்க்காமல் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அந்த கடினமான காக்கி சீருடை, நாங்களும் பெண்கள்தான் என்பதையே மறக்கச் செய்து விடுகிறது. மகளிர் தினம் போன்ற நாட்களில் தான் ‘ஆமாம்… நாங்களும் பெண்கள்தான்’ என்று நினைத்து சற்றே கொண்டாடுவோம். அந்த வாய்ப்பிற்கும் கட்டுப்பாடு வந்தது வருத்தமாக இருக்கிறது. சென்னையில் பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆனால் தென்மண்டலத்தில் மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது போல தெரிகிறது. இது ஏன்?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

பழைய சம்பவத்தின் பின்னணி? : 

wd-police-1

முன்பு  ஒரு பொங்கல் விழாவை காவல் நிலையத்தில் கொண்டாடிய போது, பெண் காவலர்கள் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதன் பின்னர் சிலர் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் அது கைவிடப்பட்ட சம்பவமும் நடந்தது. அந்த அனுபவம் காரணமாகவே இம்முறை தென்மண்டலத்தில் கொண்டாட்டங்களைக்  கட்டுப்படுத்தியிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அமைதியாக கடந்து சென்ற மகளிர் தினம் : 

இவ்வாறு வடதமிழகத்தில் புகைப்படங்களும் நிகழ்ச்சிகளும் வெளிப்படையாக நடந்த நிலையில், தென்மண்டலத்தில் மகளிர் காவலர்களின் மகளிர் தினம் பெரும்பாலும் அமைதியாகவே கடந்து சென்றுள்ளது. பெண்களை கௌரவிக்கும் நாளில் கூட கட்டுப்பாடுகள் விதித்தால், அந்த நாளின் உண்மையான அர்த்தத்தை வலை வீசி தேட வேண்டியதிருக்கிறது.  

Tamil Nadu International Women's Day woman police tn police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe