ADVERTISEMENT

அமெரிக்காவின் சில பெண்கள்..!

05:53 PM Apr 21, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல நூற்றாண்டுகளாக பெண்கள் இச்சமூகத்தில், கலை, அரசியல் மற்றும் தலைமை பொறுப்புகள் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இன்றைய நவீன கால கட்டத்திலும், அரசியல்வாதிகள், தத்துவவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மேலோங்கி காணப்படுகிறது. அந்தவகையில், அன்று முதல் இன்று வரை வரலாற்றில் நமக்கு முன் மாதிரியாகச் செயல்பட்ட, சில சாதனை பெண்கள் அடங்கிய சில தொகுப்பே இது.

ரூத் பேடர் கின்ஸ்பர்க்:

1993-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனால், அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் பெண் உரிமை ஆர்வலர் ரூத் பேடர் கின்ஸ்பர்க். இவர், அமெரிக்காவில் முக்கிய பெண்ணியவாதியாகவும், தாராளவாதிகளுக்கான ஒரு முக்கிய தலைவராகவும் இருந்தார். பெண்ணுரிமை சார்ந்து இவர் வழங்கிய பல தீர்ப்புகள், அமெரிக்க மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. இவர் உயிருடன் இருந்த வரையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பழைமைவாதிகள் ஐந்து பேரும், தாராளவாதிகள் நான்கு பேரும் நீதிபதிகளாக இருந்தனர். குற்றவாளிகளுக்கான மரண தண்டனைகள் குறைக்கப்பட வேண்டும் என இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ரூத் பேடர் கின்ஸ்பர்க், அந்நாட்டின் மிகவும் பழமையான நீதிபதி மற்றும் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 2-வது பெண் நீதிபதி என்கிற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஆவார்.

செப்டம்பர் 2020 இல் ரூத் பேடர் கின்ஸ்பர்க் காலமானபோது, 'பாலின சமத்துவத்தின் முன்னணி சாம்பியன்களில் ஒருவரின் இழப்பு' என அமெரிக்கா இரங்கல் தெரிவித்தது. அவரது இழப்பு குறித்து தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "நம் நாட்டின் வரலாற்றை நாம் இழந்துவிட்டோம்" என்று தெரிவித்திருந்தார். கின்ஸ்பர்க்கின் பதவிக்காலத்தில் ஊனமுற்றோர் மற்றும் 18 வயதுக்குக் குறைவான கொலையாளிகளுக்கு மாகாண நீதிமன்றங்கள் மரண தண்டனை விதிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ரோசா மெக்காலே பார்க்ஸ்:

ஜேம்ஸ் மெக்காலே மற்றும் லியோனா எட்வர்ட் மெக்காலே தம்பதியினரின் மகளான ரோசா மெக்காலே பிப்ரவரி 4, 1913 இல் பிறந்தார். தனது தந்தை இறந்த பிறகு தாயுடன் அலபாமாவின் பைன் பவனில் வசித்து வந்த இவர், 1932 ஆம் ஆண்டில் ரேமண்ட் பார்க்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நிறவெறிக்கு எதிராகவும், மக்களின் சமத்துவத்திற்காகவும் போராடிய ரோசா மெக்காலே பார்க்ஸ் சிவில் உரிமைகள் இயக்கத்தின் ஒரு முக்கிய நபராவார்.1965-1966 -ல் இவர் மான்ட்கோமரி பஸ் புறக்கணிப்பைத் தூண்டியது அந்த இயக்கத்தின் திருப்புமுனை போராட்டங்களில் ஒன்று. சிவில் உரிமைகள் மீதான தனது உறுதிப்பாட்டை ரோசா பார்க்ஸ் இறக்கும் வரை தொடர்ந்தார். நகரப் பேருந்தில் தனது இருக்கையை வெள்ளையின நபர் ஒருவருக்கு விட்டுக்கொடுக்க மறுத்ததற்காகக் கைது செய்யப்பட்டார். இவர் ஒரு சிவில் உரிமை ஆர்வலர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் இன நீதிவாதி ஆவார். அதுமட்டுமின்றி, அலுவலக எழுத்தர், உள்நாட்டு மற்றும் செவிலியர் உதவியாளராகவும் பணியாற்றியவர் ஆவார். தனது 92 வது வயதில் அக்டோபர் 24, 2005 அன்று தனது டெட்ராய்ட் வீட்டில் இயற்கை எய்திய அவர், உரிமைகள் தொடர்பான தனது படைப்புகள் மூலம் இன்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

மாயா ஏஞ்சலோ:

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல்-4 அன்று பிறந்த மாயா ஏஞ்சலோ ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர் ஆவார். மாயா ஏஞ்சலோ, மிக எளிய குடும்பத்தில் பிறந்திருந்ததாலோ என்னவோ, தனது வாழ்நாளில் எண்ணற்ற ஒடுக்குமுறைகளைச் சந்தித்தவர். இவர் எழுத்தாளர், கவிஞர், நடிகை, நாடக ஆசிரியர், பாடலாசிரியர், நடனக் கலைஞர், பத்திரிகையாளர் மற்றும் பெண்ணுரிமைப் போராளி என்று பல்வேறு பரிமாணங்களில் சிறந்து விளங்கியவர். மேலும் நவீன அமெரிக்க இலக்கியங்களில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்படுபவர். மாயாவுக்கு எட்டு வயதாக இருக்கும்போது, அவரின் அம்மாவின் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். குழந்தைப் பருவ பாலியல் துஷ்பிரயோகம், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக, ஏஞ்சலோவால் பல ஆண்டுகளாகப் பேச முடியவில்லை என்று தேசிய மகளிர் வரலாற்று அருங்காட்சியகம் தகவல் தெரிவித்துள்ளது.

பின்னர், அவர் தனது எழுத்தின் மூலம் தான் இழந்த குரலை மீட்டெடுத்தார். வயது வந்தவராக, அவர் சிவில் உரிமைகள் இயக்கத்தில் ஈடுபட்டார். மால்கம் எக்ஸ் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றோருடன் நட்பு கொண்டிருந்தார். மாயா தனது 17வது வயதில் தன் வலிகளை எழுத்தாக இறக்கி வைத்து 'I Know Why the Caged Bird Sings' (1969) என்ற நூலை எழுதுகிறார். அவரின், கற்பனையான சுயசரிதை அமெரிக்காவில் ஒரு இளம் கறுப்பினப் பெண்ணாகத் தனது அனுபவத்தை விவரித்தது. கறுப்பினப் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வலிமிகுந்த சிக்கலான தருணங்களை, தனது படைப்புகளில் பதிவு செய்பவராக மாயா அப்போது திகழ்ந்தார். அவரது சுயசரிதை மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றார். இந்த புத்தகம் அதன் புரட்சிகர அணுகுமுறையால் பாராட்டப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகளை ஒட்டுமொத்த உலகிற்கும் பறைசாற்றும் விதமான தனது எழுத்துக்களுக்காகச் சர்வதேச அளவில் பலவித விருதுகளையும் வாங்கி குவித்தார். தனது வாழ்நாளில் பெண்ணுரிமைக்காகவே வாழ்ந்த மாயா, கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 86வது வயதில் இயற்கை எய்தினார்.

கமலா ஹாரிஸ்:

அமெரிக்க அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தற்போதைய அமெரிக்கத் குடியரசுத் துணைத் தலைவருமான கமலா ஹாரிஸ், 1964ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி ஓக்லாந்தில் பிறந்தார். கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவைச் சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றதையடுத்து, இவர் தாய் ஷியாமலா கோபாலன் அரவணைப்பில் வளர்ந்தார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பயின்று சட்டக் கல்வியில் பட்டம் பெற்ற இவர், ஒரு வழக்கறிஞராகத் தனது தொழிலைத் துவங்கினார். 2003ல் அவர் சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலானார். இதையடுத்து, கமலா ஹாரிஸ், அமெரிக்க செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் என்ற சாதனையைப் படைத்தார். தமிழக வம்சாவளியைச் சேர்ந்த 55 வயதான கமலா ஹாரிஸ், அந்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியை வகித்த முதல் ஆசிய அமெரிக்கக் கறுப்பின பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT