Advertisment

ஆடிட்டர் குருமூர்த்தியால் எனது உயிருக்கு ஆபத்து... பெண் எழுதிய கடிதத்தால் பரபரப்பு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

kanchi

சங்கரராமன் படுகொலைக்குப் பிறகு மீண்டும் ஒரு ரத்தக் களரி நடக்கும் அறிகுறிகள் காஞ்சி சங்கர மடத்தில் தெரிகின்றன எனப் பதற்றத்தோடு தெரிவிக்கின்றனர் உண்மையான பக்தர்கள்.

Advertisment

அதற்கு வலு சேர்ப்பதுபோல, "ஆடிட்டர் குருமூர்த்தியால் எனது உயிருக்கும், எனது குழந்தையின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது'' எனக்காமாட்சி என்கிற பெண்மணி பரபரப்பான கடிதத்தை விஜயேந்திரருக்கு எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் நமக்குக் கிடைக்கவே, நாம் கௌரி காமாட்சியைத் தொடர்பு கொண்டோம். அவர் மடத்தில் நடக்கும் விவகாரங்களை ஒரு ஆடியோ பேட்டியாக நமக்கு அளித்தார்.

Advertisment

"நமஸ்காரம். என் பெயர் கௌரி காமாட்சி. திருவனந்தபுரத்தில் இருக்கிற காலேஜில் சி.இ.ஓ.அண்டு டிரஸ்டி. 2011இல் இந்தக்காலேஜோட மேனேஜ்மெண்ட்ட ஜெயேந்திரர் சுவாமிகள் எனக்குக் கொடுத்தார். இந்தக்காலேஜ் காஞ்சிபுரம் சங்கர மடத்தினுடையது. 2011இல் இருந்து நான்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். பல தடவை இந்த டிரஸ்டீஸ் சைடில் இருந்து விற்கணும் விற்கணும் எனச் சொல்லுவா. ஜெயேந்திரர் வேண்டாம் எனத் தடுத்துடுவா. இப்ப பெரியவா மறைவுக்கு அப்புறம் விஜயேந்திரர் ஸ்வாமிகள்தான் இந்தக் காலேஜோட பேர்ட்டன். அவர்தான் முடிவு எடுக்கணும். நான் ஜெயேந்திரரால் நியமிக்கப்பட்டேன். மடத்தில் இருந்து ஜெயேந்திரர்தான் நீக்கணும். டிரஸ்டீஸ் கிடையாது. டிரஸ்டீஸ் இருந்தாலும் காலேஜ் பேர்ட்டன் யாரோ அவர்கள்தான் முடிவு எடுக்கணும். எந்தச் சொல்லும் அவா முடிவுப்படிதான் நடக்கணும்.

ஜெயேந்திரர் மறைவுக்குப் பின்னர் இந்தக் காலேஜ் பேர்ட்டன் பால பெரியவா (விஜயேந்திரர்). பால பெரியவாவும் என்னிடம் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கியோ அதை அப்படியே பண்ணு. என்னோட பரிபூரண அனுக்ரஹம் உண்டுன்னு சொன்னார். ஆனா, டிரஸ்டீஸ் எல்லாம் குருமூர்த்தி அறிவுரைப்படி காலேஜை விக்கணும். அந்த காலேஜை ரன் பண்ண வேண்டாம் என்ற கான்செப்டில் 2015இல் ஆல்ரெடி ஏ.சி.சண்முகம் கிட்ட 85 கோடி ரூபாய்க்கு ஒரு அக்ரிமெண்ட் போட்டா, அதே அக்ரிமெண்ட்டை 2017இல் திரும்ப ரெனிவல் பண்ணிருக்கா. அப்பவும் ஜெயேந்திரர் பெரியவா வேண்டாம் எனச் சொல்லியிருக்கா. திரும்பவும் 2020 மார்ச் 30 அக்ரிமெண்ட்டை ரினிவல் பண்ணி, 122 கோடிக்கு பைனலைஸ் பண்ணி, காலேஜை வித்தாச்சி. சேல் டீல் நடக்கப்போறது. மண்டே அன்னைக்கு ரிஜிஸ்டிரேசனுக்கு அப்ளிகேசன்ஸ் கொடுத்துட்டாங்கன்னு தெரிய வர்றது.

auditor

அப்படித் தெரிய வரும்போது வெள்ளிக்கிழமை ஒரு நாள்தான் ஒர்க்கிங் டே. அதைப் பற்றி விசாரிக்கும்போது 40 கோடிதான் ரிஜிஸ்டிரேசன் வேல்யூ வைத்து கொடுத்திருக்கிறார்கள். எனக்கு இதெல்லாம் ஒன்னும் புரியல. இந்த கரோனா நேரத்தில் அவசர அவசரமாக ஒரு நிர்வாகத்தைக் கைமாற்ற வேண்டிய அவசியம் என்ன? இதுல குருமூர்த்திக்கு என்ன ஆர்வமுன்னு தெரியல. அவர் ஏன் ரொம்ப ஆர்வமாக ட்ரஸ்டீஸ வழி நடத்துகிறார். ஜெயேந்திரர் பெரியவா எதைச் சொன்னாலும், அப்படியே குருமூர்த்திகிட்ட சொல்லித்தான் டிரஸ்ட்டீஸ் பண்ணியிருக்காளோன்னு ஒரு டவுட் வருகிறது. கல்லூரியை இரவோடு இரவாக ரிஜிஸ்டிரேசன் பண்ணவேண்டிய அவசியம் என்ன? இதில் தலையிடும் அளவுக்கு குருமூர்த்திக்கு என்ன ஆதாயம்? குருமூர்த்தி ஒரு சமூக சேவகர், நல்லவர் என்றால் என்னுடைய நிர்வாகத்தின்மீது தவறு இருந்திருந்தால், மடத்துக்கு சம்மந்தப்பட்டவர் என, விஜயேந்திரர் சுவாமிகள் என்னைக் கூப்பிட்டு இனிமே இந்த நிர்வாகத்தை நீ பார்க்க வேண்டாம். நாங்க பார்த்துக்கிறோம் எனச் சொல்லியிருக்கலாம்.

அதைவிட்டுவிட்டு இரவோடு இரவாக ரிஜிஸ்டிரேசன் புக் பண்ணி, ஆன்லைனில் அதை நிறைவேற்ற சார்ட்டடு விமானத்தில் கரோனா காலத்தில் 75 வயசுக்கு மேலே உள்ளவர்கள் திருவனந்தபுரத்திற்கு வருகிறார்கள். இதை எப்படி தமிழக அரசு அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.

குருமூர்த்தி ஏன் மடத்தோட விசயத்துல இவ்வளவு போல்டா ஜெயேந்திரர் மறைவுக்குப் பிறகு இறங்குகிறார்? எனக்கு இதைக் கேட்க அதிகாரம் இல்லை. இருந்தாலும் ஜெயேந்திரர் பெரியாவளோட பத்து வருடம் நல்லது கெட்டதுக்கு ட்ராவல் பண்ணியதால எனக்கு ஒரு கேள்விக்குறியா இருக்கு. ஒரு நாள்கூட எந்த விசயத்திற்கும் குருமூர்த்தியைக் கேட்கணும், சொல்லணும் என ஜெயேந்திரர் சொல்ல மாட்டார். இப்ப ஜெயேந்திரர் மறைவுக்குப் பிறகு, ட்ரஸ்ட் விசயமாக இருக்கட்டும், மடத்தோட விசயமாக இருக்கட்டும் குருமூர்த்தி ஏன் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கிறார். பாலபெரியவாவுக்கு இதுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியாது. பால பெரியவாவால முடிவு எடுக்க முடியாதபடி இருக்கிறாரா? பால பெரியவா குருமூர்த்திக்கு பயந்துபோய் இருக்கிறாரான்னு தெரியல. ஆனால் இவாளால ரெஜிஸ்ட்ரேசன் பண்ண முடியல. கோர்ட்டில் நாங்கள் தடை வாங்கியுள்ளோம். நாளைக்கு என்ன நடக்கப்போகுது என்பது பகவானுக்குத்தான் வெளிச்சம். அவாளுக்கு எல்லா செல்வாக்கும், பவரும் இருக்கு.

என் மீது பொய்யான ஊழல் குற்றச் சாட்டுக்களைச் சுமத்துகிறார்கள். இந்த காலேஜ் கைமாறுவதில் குருமூர்த்தி ஏதோ டீல் பண்ணிருக்கிறார் என அவரோட ஆபீஸ் சைடில் சொல்கிறார்கள். ஒரு கல்வி நிறுவனத்தை இப்படிப் பண்ணிருக்கிறதைப் பார்த்தால் அட்வைஸ் என்கிற பெயரில் அவர் தவறான அட்வைஸ்களைக் கொடுத்து வருகிறார்.

நான் ஒரு சாதாரண பெண். இவ்வளவு பெரிய ஜாம்பவானான குருமூர்த்தி பற்றி புகார் சொல்கிறேன் என்றால், எல்லோருமே இதை யோசிக்கணும். நான் யாரோ கிடையாது. மடத்தில் வளர்ந்தவள்தான். எனக்கு ஆதரவாக இன்று விஜயேந்திரர்வாயைத் திறக்க முடியாத ஒரு நிலையில் இருக்கிறார். நைட்டோட நைட்டா குருமூர்த்தி ரிஜிஸ்ட்ரேசன் பண்ண வந்திருக்கிறார். குருமூர்த்தி செய்யும் தவறுகளை நான் சுட்டிக்காட்டுவதினால் தான் என்னை கார்னர் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு குருமூர்த்தியே அவருடைய செயல்கள் மூலம் நிரூபித்திருக்கிறார்'' என்று கௌரி காமாட்சி விரிவாகப் பேசியிருக்கிறார்.

கௌரி காமாட்சியையும் கௌரி காமாட்சிக்கு ஆதரவாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடை வாங்கிக் கல்லூரி விற்பனையைத் தடுத்த மாணவர்களையும் சென்னையில் இருந்து சென்ற ஒரு அடியாள் படை வீடு தேடிப்போய் மிரட்டியிருக்கிறது. அதன் விளைவாகவே கௌரி காமாட்சி, எனது உயிருக்கு ஆபத்து என பரபரப்பான கடிதத்தை எழுதியிருக்கிறார். ஜெயேந்திரர் மறைவின்போது சங்கரமடத்திற்குச் சொந்தமாக 3 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. அதில் இரண்டு கல்லூரிகளான பத்மாவதி மருத்துவக் கல்லூரி, ஸ்ரீராக்குளம் மருத்துவக் கல்லூரி ஆகிய ஆந்திராவில் இருந்த இரண்டு கல்லூரிகளை குருமூர்த்தி ஆலோசனையின் பேரில் விஜயேந்திரர் விற்றுவிட்டார். இப்போது கௌரி காமாட்சியின் நிர்வாகத்தில் இருக்கும் ஸ்ரீஉத்தராடம் திருநாள் கல்லூரியை விற்க முயலும்போதுதான் மடத்தில் பிரச்சனை வெடித்திருக்கிறது.

http://onelink.to/nknapp

இதுபற்றி குருமூர்த்தியின் கருத்தறிய அவருடைய செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டோம். அவர் நம்மை, நீங்கள் யார் எனக் கேட்டு மெசேஜ் அனுப்பினார். நாம் 'நக்கீரன்' நிருபர் என்று பதிவிட்டோம். அதற்குப்பிறகு அவர் போனை எடுக்கவில்லை. மறுபடியும் நீங்கள் யார் என ஆங்கிலத்தில் கேட்டார். அதற்கு நாம், திருமதி கௌரி காமாட்சி என்பவரின் உயிருக்கு நீங்கள் ஆபத்து ஏற்படுத்துவதாக மருத்துவக் கல்லூரி விற்பனை விஷயத்தில் உங்கள் மீது ஒரு புகார் சொல்லியிருக்கிறார். அதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன எனக் கேட்டு அவருக்கு குறுஞ்செய்தி அனுப்புவோம். எங்கள் அழைப்பை ஏற்று பதில் சொல்லுங்கள். அல்லது எங்களது குறுஞ்செய்திக்கு குறுஞ்செய்தி வடிவிலேயே பதில் சொல்லுங்கள் எனக் கேட்டோம். குருமூர்த்தி அதற்கும் பதில் அளிக்கவில்லை.

அதேபோல் சங்கரமடத்தில் விஜயேந்திரரின் கருத்தறிய சுந்தரேசர் அய்யருக்கு போன் செய்தோம். அவரும் பதில் அளிக்கவில்லை. யாரையும் நேரில் சந்திக்க முடியாத இந்தக் கரோனா காலகட்டத்தில் சங்கரமடமும், குருமூர்த்தியும், கௌரி காமாட்சி எழுப்பும் புகார்களுக்குப் பதில் சொல்ல தயாராக இல்லை. இந்தக் கரோனா காலத்தில் சங்கரமடமும், குருமூர்த்தியும், ஏ.சி.சண்முகமும் கல்லூரி விற்பனையில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால் அவர் நிர்வகிக்கும் மருத்துவக் கல்லூரியை விற்பதற்கு மட்டும் சென்னையில் இருந்து ஒரு தனி விமானத்திலேயே ஆட்கள் திருவனந்தபுரத்தில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் பத்தும் செய்யும் என்பது இதுதானோ!

college gurumurthy issues Kanchi madam letter woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe