Skip to main content

பெண் ஓர் உடமை என்பது போல ஓர் மனப்போக்கு தான் இருந்து வருகிறது - நிர்மலா பெரியசாமி..!

 
பெண் ஓர் உடமை என்பது போல ஓர் மனப்போக்குதான்
இருந்து வருகிறது - நிர்மலா பெரியசாமி
..!



ஹரியானா மாநிலம், சண்டிகரில் கடந்த 5ம் தேதி இரவு காரில் தனியாகச் சென்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகளான வர்னிகாவை, ஹரியானா மாநில பாஜக தலைவரின் மகன் விகாஸும், அவரது நண்பரும் காரில் துரத்திச் சென்றுள்ளார். மேலும் தங்கள் காரை வர்னிகாவின் கார்மீது இடிப்பது போல பலமுறை அச்சுறுத்தியுள்ளனர். தான் துரத்தப்படுவதை வர்னிகா போலீசாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை காப்பாற்றுமாறு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வர்னிகாவை காப்பாற்றியதுடன், சண்டிகர் மாநில பாஜக தலைவரின் மகன் மற்றும் அவரது நண்பரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் சற்று நேரத்தில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இவ்விவகாரம் தொடர்பாக, சண்டிகர் மாநில பாஜக துணைத் தலைவர் ராம்வீர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இரவு நேரங்களில் பெண்கள் வெளியில் செல்வதால் இத்தகைய அசம்பாவிதங்கள் அதிகம் நேரிடும் சூழல் எழுந்துள்ளது. பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். பெண்கள் மாலைக்கு பிறகு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், இதனை பெண்பிள்ளைகளை பெற்றவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்துள்ளார்.

சண்டிகர் மாநில பாஜக துணைத் தலைவரின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் நட்சத்திர பேச்சாளர் நிர்மலா பெரியசாமியிடம் நக்கீரன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது,



மனித குளத்தில் நாகரிகம் வளர்ச்சியடைந்த வேத காலத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரசக்தி பெற்று, ஆண்களினுடைய ஜீன்களிலேயே தொடர்ந்து வந்து கொண்டிருக்கக்கூடிய ஒர் எண்ணம், ஒர் உணர்வு. இங்கு எல்லாமே உடமைகளில் ஒன்று தான். மண், பொன், பெண். மண்ணும், பொன்னும் எப்படி ஒர் உடமையோ, அது போல் பெண்ணும் ஒர் உடமை என்பது போல ஒர் மனபோக்கு தான் இருந்து வருகிறது.

இது காலம், காலமாக இருந்து வருகிறது. அதை மாற்றுவதற்கு 100 ஆண்டுகாலத்திற்கு மேலாக உலகத்தின் பல பகுதிகளிலும் உள்ள பெண்கள் போராடி, போராடி எவ்வளவோ வெற்றிகளை, மாற்றங்களை நாம் இந்தியாவில் கூட சந்தித்து கொண்டிருந்தாலும். இன்னும் உள்ளுக்குள் இருக்கிற ஜீன் வேலை பார்க்குது சில பேருக்கு.

மிக பிரமாதமாக வளர்ந்து வரக்கூடிய பாரதிய ஜனதா கட்சி சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதிரி பேச்சுகளை பேசும் போது. பாரத பிரதமரை நம்பி நிறைய பேர் இருக்கும் இந்த காலகட்டத்தில், நாடு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காலத்தில் இப்படியான ஒரு பிற்போக்கான கருத்துகள் அவர்களுக்கு மிக சங்கடத்தை உருவாக்கும். குறிப்பாக பா.ஜ.க வளரத் துடிக்கும் தமிழகம் மாதிரியான மாநிலத்தில் இந்த மாதிரியான பிற்போக்கான கருத்துகள் எதிர்விளைவுகளைத்தான் உருவாக்கும் என்பதில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இதை அவர்கள் எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குடிப்பது ஆண் செய்தால் தவறு, பெண் செய்தால் சரி என்று இல்லை. குற்றங்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் யார் செய்தாலும் தவறு தான். நீதியின் முன்னால் ஆணும், பெண்ணும் சமம் தான். பெண்கள் இவ்வளவு காலம் அதிகம் பன்னாத தவறுகள், பெண்கள் குடும்பம், குழந்தைகளை பார்த்துக்கொள்கிறவர்கள் என்பதால் அது நேரடியாக குடும்பத்தை பாதிக்கும் என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும். மது அருந்துவதை பெண்களது உடல்கூறுகள் ஏற்றுக்கொள்ளாது. நம் தட்ப வெட்பநிலை அப்படி இல்லை. ஆணுக்கும் இதே விஷயங்கள் பொருந்தும். ஆண் குடித்தாலும் தவறு தான். பெண் குடித்தாலும் தவறு தான். இதில் என்ன பாலின வேறுபாடு. திருடினால்? இரு பாலினம் திருடினாலும் தப்பு தான். யார் செய்தாலும் தவறு தவறு தான்.

இது மாதிரி பிற்போக்கான கருத்துக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல், புறம் தள்ளிவிட்டு, எது சரியோ அதை செய்துவிட்டு செல்ல வேண்டும். இதற்கு கண்டிப்பாக நாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. எல்லாத்துக்குமான நியாய தர்மங்கள் என்பது இருக்கு, அது ஆணுக்கும், பெண்ணுக்கும் சமம் தான். தர்மத்திற்கும், நியாயத்திற்கும் பாலின வேறுபாடுகள் கிடையாது. எல்லாருக்கும் பொதுவானது தான். இதற்கு கண்டிப்பாக நாம் முக்கியத்துவம் கொடுக்ககூடாது. இந்த மாதிரியான வார்த்தைகளுக்கு ஊடகங்களும் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என்றார்.

- அருண்பாண்டியன்