Skip to main content

இலட்சக்கணக்கான இந்தியர்களைக் கொன்ற அரசின் முடிவு...

Published on 07/12/2020 | Edited on 07/12/2020

 

bengal famine

 

 

"லத்தி மூலம் அடக்க முடியாத வெறியில்தான் வெள்ளையரால் 1943ல் வங்காள பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டது... ஹிட்லர் உலகப்போரில் 60 லட்சம் பேரைக் கொலை செய்தான்... ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் செயற்கைப் பஞ்சத்தை இந்தியாவில் 1943 ல் உருவாக்கி கிட்டத்தட்ட 70லட்சம் பேரைக் கொலை செய்தான்... வங்காளப் பஞ்சம் ஏற்பட்டது எப்படி?" இவ்வாறு குறிப்பிடப்பட்ட ஒரு நீண்ட வாட்சப் ஃபார்வர்ட் மெசேஜ் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

அந்த நீண்ட மெசேஜின் சாராம்சமாக புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளும், இந்தியாவை ஆண்டபோது பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸ்ட்டன் சர்ச்சிலினால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என சொல்லப்படும் ‘வங்காள புரட்சி’யும் இருக்கிறது.

 

பலருக்கும் இதில் குறிப்பிடப்பட்ட 1943ஆம் ஆண்டு வங்காள மக்களை மிகவும் வாட்டிய வங்காள புரட்சி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சுமார் 30 லட்சம் பேர் இந்த பஞ்சத்தினால் பலியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. போர்க்களத்தில் இறப்பதைவிட மிகவும் கொடியது பஞ்சத்தில் இருப்பது. பொட்டென சாவதும், பொறுமையாக பசி பிணியில் வாடி சாவதும் வெவ்வேறு இரண்டாம் வகைக்கு பின் நிறைய வலிகளும் கொடுமைகளும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பஞ்சம் இயற்கையால் கொடுக்கப்பட்ட கொடை அல்ல, மனிதனின் அதிகார வெறிக்கு கொடுக்கப்பட்ட சாபம். இந்த வங்காள பஞ்சம் பல வருடங்களாக விவாதத்தை ஏற்படுத்திக்கொண்டே வருகிறது, தற்போது கூட. 

 

1940களில் இரண்டாம் உலகப்போர் தீவிரமாக இருந்த காலகட்டம் ஒரு பக்கம் அச்சுநாடுகள், மற்றொரு பக்கம் நேசநாடுகள் போரில் ஈடுபட்டிருந்தனர். 1941ல் அச்சுநாடுகள் முன்னேற்றத்தில் தடைப்பட்டு, நேசநாடுகள் முன்னேற தொடங்கியது. இங்கிலாந்து இந்த நேசநாடுகளில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. அப்போது அந்த நாட்டின் பிரதமராக இருந்தவர் வின்ஸ்ட்டன் சர்ச்சில். உலக வரலாற்றில் ‘வார் ஹீரோ’ என்று தன்னுடைய ராஜதந்திர செயல்களால் பெயரெடுத்து வைத்திருந்தவர். அந்த ராஜதந்திரியாகுவதற்கு 30 லட்சம் பெங்காலிகளை செயற்கை பஞ்சத்தின் மூலம் காவு கொடுத்திருக்கிறார் என்பதுதான் பலரின் வாதம்.

 

1873ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை நிகழ்ந்த ஆறு பஞ்சங்களின் காலகட்டத்தில் இருந்த மண்ணின் ஈரப்பதத்தை வைத்து, 1943ஆம் ஆண்டு வங்காள பஞ்சம் செயற்கையானது என்று வாதத்தை இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் வைத்துள்ளனர். அதில், 1943ஆம் ஆண்டு மழை சராசரியைவிட மேலாகதான் இருந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. “இந்த பஞ்சம், பருவ மழையின் தோல்வியால் உருவானதல்ல, அரசின் கொள்கையினால் உருவானது” என்று ஆராய்ச்சியாளர் விமல் மிஷ்ரா தெரிவித்துள்ளார். இந்த கடும் பஞ்சத்திற்கு முன்பாக 1940களில் வறட்சியால் இந்திய கிழக்கு பகுதி பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அதனை தொடர்ந்த ஆண்டில் மக்கள் பசியால் அவதிப்பட்டனர். இதுகுறித்து அப்போது செய்திகள் வெளியானபோது, பிரிட்டிஷ் கொல்கத்தா என்பதை கல்கத்தா என்று பெயர் மாற்றம் செய்தது. கல்கத்தா சாலையில் பல ஏழை மக்கள் எலும்பும் தோலுமாக ஆங்கிலேயர்களிடமும் வசதிப்படைத்தவர்களிடமும் யாசகம் கேட்டுகொண்டிருந்தார்கள்.

 

bengal famine

 

 

வங்காள பகுதிகளுக்கு உணவு தட்டுப்பாடு வந்தால், பர்மாவில் இருந்து வங்காளத்திற்கு உணவு இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால், அது பல்வேறு காரணங்களால் கிடைக்காமல் போனதாக சொல்லப்படுகிறது. வின்ஸ்டன் சர்ச்சிலின் டினியல் பாலிஸிதான்(Denial policy) அதற்கு காரணம் என்று வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அப்போது பர்மா, ஜப்பான் கட்டுப்பாட்டிலிருந்தது. அதனால் அங்கிருந்து உணவு பொருட்கள் இறக்குமதி செய்தால், வருங்காலத்தில் வங்காளத்தை ஜப்பான் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய மறுத்தது பிரிட்டிஷ் அரசு. ஆனாலும், இந்தியாவிலிருந்து அரிசியை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் பாலிஸியை வின்ஸ்ட்டன் சர்ச்சில் கைவிடவில்லை. இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்திற்கு பல டன்களில் ஏற்றுமதி செய்துகொண்டே இருந்திருக்கின்றனர். கடந்த 1943ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையில் 70,000 டன்கள் அரிசி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் போர் சூழலால் ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் பதுக்கல் காரணமாக வங்காளத்தில் அரிசி தட்டுப்பாடு அதிகரித்ததால் ஏழை மக்களால் வாங்கமுடியாத அளவிற்கு அரிசியின் விலை உயர்ந்திருந்தது. மேலும், போர் சூழல் என்பதால் மலேரியா, காலரா உள்ளிட்ட பல கொள்ளை நோய்களும் அவர்களின் உயிரை களவாடியிருக்கிறது. 

 

உலகப்போர் ஒரு பக்கம் நடைபெற்றுகொண்டிருந்தாலும் தனது காலனியில் இருக்கும் இந்தியா மீதும் வின்ஸ்ட்டன் சர்ச்சில் ரகசிய போர் நடத்தியிருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இங்கிருக்கும் அரசு அதிகாரிகள் தட்டுப்பாடு குறித்து முன்பே அறிவித்தபோதும், இங்கிருக்கும் மக்களுக்காக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் தொடர்ந்து அரிசியை ஏற்றுமதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு குறைபாடு இவ்வளவு மோசமாக இருக்க காரணம் என்ன என்று காந்தி அப்போது கேள்வி எழுப்ப, அதற்கு வின்ஸ்ட்டன் சர்ச்சில் கூறிய பதில் மிகவும் பொறுப்பற்றதாக கருதப்படுகிறது. “இந்தியர்கள் முயல்கள் போன்ற விலங்குகளை வளர்க்கின்றனர் அதனால்தான்...” என்றாராம்.  இதைபார்க்கும்போது வெங்காய விலை குறித்த ராஜ்யசபா விவாதம்தான் நியாபகம் வருகிறது. இதை நாம் ‘டெல்லி சலோ’ விவசாயிகளின் போராட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் இந்தியாவின் பாமர மக்களுக்கு பிரதமர் மோடி எடுக்கும் முடிவுகளையும் கொள்கைகளையும் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம். ஒரு நாட்டின் அரசு, அந்த நாட்டின் தலைவர் எடுக்கும் முடிவிற்கு பின் பல கோடி மக்களின் வாழ்வு அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து அரசியல் தலைவர்கள் செயல்படுகிறார்களா?

 

“இங்கு கொள்கைகள் பல நூறு இருக்கிறது... 
அதில் மக்களுக்கு தேவையானதை தவிர்த்து, தேவையற்ற பலவும் இருக்கிறது...
அதில் வன்மமும் இருக்கிறது”

 

ஆனால், அவை அனைத்தையும் தாண்டிய மனிதாபிமானம் அனைத்து கொள்கைகளிலும் இடம்பெற வேண்டும். இப்போது நாம் பார்க்கும் ராஜதந்திரமும்; சாணக்கியத்தனமும், அரசையும்; நாட்டின் எல்லைப்பகுதியையும்தான் காப்பாற்றும், அவர்களை நம்பிய மக்களை அல்ல...