STERLITE

Advertisment

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை சந்திக்க தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (29.05.2018) தூத்துக்குடி சென்றார். விமான நிலையத்தில் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அவர் துப்பாக்கி சூட்டில் பலியான‌ சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளத்தை சேர்ந்த செல்வசேகர் (40) வீட்டுக்கு சென்றார். அங்கு செல்வ சேகரின் தாய் மாசானம் அம்மாள் மற்றும் செல்வசேகரின் சகோதரிகள் 2 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

sterlite

Advertisment

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திரேஷ்புரத்தைச் சேர்ந்த நிக்சன் என்பவரை விசாரிக்க வந்தார் கவர்னர். அப்போது தனது குறைகளை நிக்சன் சொன்னபோது, அருகில் இருந்த மருத்துவர்கள் அதனை மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் கவர்னரிடம் கூறினர்.

பேரணியில போணோம். எங்களை பேரணியில போலீசார் அடிக்கலை. துப்பாக்கிச் சூடு நடந்த சத்தம் கேட்டதும் பாத்திமா நகர் தெருவில் 20 பேர் திரும்பிட்டோம். அப்போ ஒரு குட்டி யானை லோடு வண்டி வந்தது. அதுல 20 பேரும் ஏறி திரேஷ்புரம் செல்ல கிளம்பினோம். அப்போது எங்களை மறிச்ச போலீஸ், எங்களை தென்பாகம் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு போச்சு. அங்க 20 பேரையும் சுத்தி நின்னு போலீஸ்காரங்க அடிச்சாங்க. கொலை வெறியோட தாக்கினாங்க. போலீஸ் தாக்கியதில் எனக்கும், இன்னொருத்தருக்கும் மண்டையில காயம். அதனால எங்களை இந்த ஆஸ்பத்திரியில கொண்டு வந்து போட்டுட்டு போயிட்டாங்க. திரும்பி வந்த எங்களையும், மக்களையும் இப்படி அடிக்கிறது என்னய்யா நியாயம்? என மனவலியை கொட்டியிருக்கிறார் நிக்சன்.

sterlite

Advertisment

அனைத்து கல்லூரி மாணவர் தலைவர் சந்தோஷ்ராஜ் ஆங்கிலத்திலேயே கவர்னரிடம் பேசியிருக்கிறார். இதுவரைக்கும் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள், இனிமேல் போடப்போகிற வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். அடிப்பட்டவர்களுக்கு, உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும். கொலை வெறியோடு தாக்கின போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். போடுவீங்களா? இதுதான் எங்களின் மனக்குறை என கூறியிருக்கிறார்.

கவர்னரோ, சென்னை சென்றதும் அரசுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டார்.