ராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் பட்டப்பகலில் ஒருதலை காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் சேரங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் முனிராஜ். கல்லூரி படிப்பை முடித்த முனிராஜ் வேலை எதற்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவி முனிராஜின் காதலை ஏற்றுக்கொள்ளாத நிலையில் விடாத முனிராஜ் கடந்த ஒரு வருடமாக அவரை பின்தொடர்ந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/19/042-2025-11-19-15-32-47.jpg)
சிறுமியின் வீட்டிற்கு இது தெரிய வர, சிறுமியின் தாயாரும் பலமுறை முனிராஜை எச்சரித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை முனிராஜ் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி வறுபுறுத்திய நிலையில் மாணவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்ததுடன் கழுத்தின் பின்புறமாக குத்தியதில் சம்பவ இடத்திலேயே மாணவி ரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து சுதாரிப்பதற்குள் முனிராஜ் அங்கிருந்து தப்பியுள்ளார்.
அவசரத்திற்கு வாகனங்கள் கிடைக்காததால் அருகில் இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்து சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவ பரிசோதனையில் சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கும் பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முனியராஜை ராமேஸ்வரம் நகர போலீசார் தீரமாகத் தேடி வந்த நிலையில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/19/045-2025-11-19-15-33-32.jpg)
சிறுமி ஒருவர் ஒருதலை காதல் காரணமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரவிய நிலையில் பலரும் மருத்துவமனையில் கூடியுள்ளனர். அதேபோல் காவல் நிலையம் முன்பும் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் வைக்கின்றனர்.
சிறுமியின் உறவினர் ஒருவர் பேசும்போது, ''நடந்து கிடந்து பள்ளிக்கூடம் போயிட்டு வந்த பிள்ளையை மூலை மூலைக்கு நின்னுகிட்டு எடக்கு பண்ணி, கிண்டல் பண்ணிட்டு. லவ் பண்றேன்... லவ் பண்றேன்னு... சொல்லிருக்கான். நேற்று சிறுமியின் தாயார் போய் திட்டி இருக்காங்க. உன் மகன் இப்படி பண்றான்னு. இன்னைக்கு ஸ்கூல் வந்த பிள்ளைய இப்படி பண்ணிட்டான் சார். பிள்ளைய கழுத்த அறுத்துட்டு பொடனில கத்திய வச்சு குத்திட்டானாம் சார். கூட வந்த பிள்ளைங்க ஓடிப்போய் சொல்லி தான் எங்க அண்ணன், அண்ணன் மனைவி எல்லாரும் வந்து ஆட்டோ கூப்பிட்ருக்காங்க. ஆனால் ஆட்டோ கூட வரலையாம். ஆம்புலன்ஸ் வரலையாம். அதனால் பைக்ல ஏத்திக்கிட்டு ஓடி வந்திருக்காங்க. இன்னைக்கு ஆட்டோவும் ஆம்புலன்ஸும் வந்திருந்தா பிள்ளை பொழைச்சிருக்கும் சார்'' என அழுதார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/19/052-2025-11-19-15-37-02.jpg)
மற்றொரு பெண் பேசுகையில், ''இன்னைக்கு இப்படி ரத்தம் வடிய வடிய தூக்கிட்டு வந்திருக்காங்க. போலீஸ் அங்க போய் கத்தியால் குத்துனவன் வீட்டுக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்குது? ஆஸ்பத்திரில என்ன இருக்கு? டாக்டர் இல்ல, நர்ஸ் இல்ல. எதுக்கு இவ்ளோ பெரிய ஆஸ்பத்திரி இருக்குன்னு கேக்குறேன். ஆ.. ஊ.. என்றால் ராம்நாடு போ என்று சொல்கிறார்கள். அப்போ எதுக்கு இந்த பெரிய ஆஸ்பத்திரி இருக்கு? லேசா காய்ச்சல் வந்தாலே ராம்நாடு போ என்கிறார்கள்'' என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/19/049-2025-11-19-15-34-06.jpg)
சிறுமியின் தாயார் அழுதபடி பேசுகையில், ''என் மகள் மேல தப்பு இல்லை. அவன் தான் ரொம்ப நாளா டார்ச்சர் கொடுத்திருக்கான். லேசா வார்ன் பண்ணி வெச்சேன். அவன கொல்லுங்க. அப்போதான் என் பிள்ளை ஆத்மா சாந்தி அடையும். என் புள்ளை என்ன துடி துடிச்சு செத்துச்சோ. அது மனசுல அவன் இல்ல. நான் எவ்வளவோ சொன்னேன். என் பிள்ளை ஒழுங்காதான் இருந்துச்சு. என் பிள்ளை மேல எந்த தப்பும் இல்ல.
அது நல்ல பிள்ளையாதான் இருந்துச்சு சார். இப்ப உசுர கொடுத்துட்டு அழுதுட்டு கிடைக்கிறேன். என் பொண்ணு நல்ல படிக்கும். படிச்சு பெரிய ஆளாக்கணும்னு ஒரு ஆசையில படிக்க வச்சேன். அதுக்குள்ள இப்படி என் பொண்ண கொன்னுட்டான். விடாதீங்க அவனை கொல்லுங்க. அவனை கொன்னா மட்டும்தான் என் பெண்ணின் ஆத்மா சாந்தி அடையும். என் மேல குத்தம் சொல்றாங்க. என் மேல எந்த தப்பு இல்ல. நானும் என் பிள்ளையை அப்போ அப்போ வார்ன் பண்ணினேன்'' என அழுதார்.
அங்கிருந்த இன்னொரு பெண் பேசுகையில்,''விடிய விடிய மதுபானம் விற்குது. கஞ்சா விற்குது. போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்கிறது. அடிச்சிக்கிட்டு மாலுறாங்க. போலீஸ் ஸ்டேஷனில் போய் சொன்னால் தெரியாத மாதிரி 'எந்த கடையில் அம்மா விற்கிறது' னு கேக்குறாங்க. விக்கிறவனுங்க கிட்ட கேட்டா நாங்க போலீஸுக்கு பணம் கொடுக்கிறோம்னு சொல்றானுங்க. இந்த உயிரு இன்னைக்கு கிடைக்குமா? அந்த தாய்க்கு சொல்லுங்க.. பிள்ளைங்களை நம்பி படிக்க வைக்க முடியுதா? என ஆவேசமானார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/19/044-2025-11-19-15-34-39.jpg)
தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வரும் அந்த பகுதி மக்கள் கொலையில் ஈடுபட்ட முனிராஜை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் ராம்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/media_files/2025/11/19/050-2025-11-19-15-32-15.jpg)