Skip to main content

மலைவாழ் மக்களின் சோகத்துக்கு விடிவு வருமா?

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

திருவண்ணாமலை மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்துக்கும் இடையேவுள்ள கல்வராயன் மலையில் உள்ளது மேல்வலசை, கீழ்வலசை, அக்கரைப்பட்டி போன்ற கிராமங்கள். இந்த கிராமங்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்டது. இந்த கிராமத்துக்கு செல்ல சாலை வசதிகள் கிடையாது. இந்த கிராமங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்கள் பொருள் வாங்கவேண்டும் என்றாலும், அரசு வழங்கும் இலவச அரிசி, நியாயவிலைக்கடையில் வழங்கப்படும் பருப்பு, எண்ணை, சர்க்கரை போன்ற பொருட்கள் வாங்க மலையை விட்டு 15 கி.மீ மலையில் இறங்கி பீமாரப்பட்டிக்கு வரவேண்டும்.

மலையில் ஒரு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி படிக்க மாணவ - மாணவிகள் செங்குத்தான ஒற்றையடி பாதையில் உயிரை பணயம் வைத்து தான் வர வேண்டும். அவசரத்துக்கு மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றாலும் அதுதான் நிலை.
 


இந்த மலைக்கிராமங்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வுக்கு அனைத்து துறை அதிகாரிகளுடன் 15 கி.மீ மலையேறி சென்ற ஆட்சியராக இருந்த விஜய்பிங்ளே, அக்கிராம மக்களிடம் விரைவில் மின்வசதி, குடிநீர் வசதி செய்துதரப்படும் என வாக்குறுதி தந்துவிட்டு வந்தார். திருவண்ணாமலை மாவட்ட மின்துறை அதிகாரிகள் மலையில் மின்வசதி செய்துதருவது கடினம் என விளக்கினர். இதனால் மாற்று ஏற்பாடாக விழுப்புரம் மாவட்ட மின்துறை அதிகாரிகளிடம் பேசி மின்வசதி செய்து தந்தார். சுதந்திரமடைந்து 70 ஆண்டுக்கு பின் தற்போது தான் மின்வசதி அந்த கிராமங்கள் பெற்றது.

குடிநீர்க்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது, இருந்தும் குடிநீர் வசதியில்லை. மலையில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளிக்கு ஆசிரியர் இருந்தும் பள்ளிக்கு வருவதில்லை. இதுப்பற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் காரணங்கள் மட்டும் கூறிவந்தனர்.
 

இந்நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியராக உள்ள கந்தசாமி மேல்வலசை கிராமத்துக்கு சென்றார். மக்களிடம் குறைக்கேட்டவர், உண்டு உறைவிடப்பள்ளிக்கு சென்றபோது, வருகைப்பதிவேட்டில் 55 மாணவ - மாணவிகள் இருப்பதாக இருந்துள்ளது. இருந்ததோ 7 பிள்ளைகள் தான். ஆசிரியர் வருவதில்லை என புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்த இரண்டு பேர் சிறப்பு ஆசிரியராக நியமிக்கப்படுவர் என தெரிவித்தவர், சாலை வசதி ஏற்படுத்தி தர உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என வாக்குறுதி தந்துவிட்டு வந்துள்ளார். இவரின் வாக்குறுதியாவுது நிறைவேறுமா என ஏக்கத்தில் உள்ளனர் மக்கள்.