Skip to main content

தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்..? - நக்கீரன் ஸ்பெஷல் சர்வே ரிசல்ட்!

 

 Nakkheeran


தேர்தல் நேரத்தில் வழங்கப்படும் பணம், இலவச அறிவிப்புகள், ஆளுந்தரப்பின் அதிரடி நடவடிக்கைகள் ஆகியவை ஓட்டுகளாக மாறுவது ஜனநாயக விநோதம். அந்த நம்பிக்கையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆட்சியின் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

 

தமிழகத்தில் உள்ள 16 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் கடனாக பெற்ற 12,000 கோடி மதிப்புள்ள கடன்களைத் தள்ளுபடி என அறிவிப்பு செய்தார். வேகமாக தாக்கிய புயல்கள், அளவுக்கு அதிகமாக கொட்டித் தீர்த்த மழை, வீட்டிற்குள்ளே முடக்கிப் போட்ட கரோனா என விவசாயிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று கூறி எடப்பாடி பழனிசாமி, இந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்தார்.

 

ddd

 

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தையே அழித்துவிடும். பாராளுமன்றத்தில் அந்தச் சட்டங்களை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அரசு துணை நின்றது. அந்தச் சட்டங்களை எதிர்த்து 100 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு, போராடும் விவசாய அமைப்புகள் எடப்பாடி பழனிசாமி அரசை விமர்சிக்கின்றன. நான் அடிப்படையில் ஒரு விவசாயி என வயலுக்குள் இறங்கி நாற்றுநட்டார் எடப்பாடி பழனிசாமி. அப்படியே விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்தார். இது போதாது என்று 6 சவரன் வரை அடகு வைத்து பெறப்பட்ட நகைக்கடன், சுய உதவிக்குழு கடன் என ஏகப்பட்ட தள்ளுபடிகளைத் தொடர்ந்து அறிவித்தார் எடப்பாடி.

 

உண்மையில் இந்த தள்ளுபடிகளைத் தமிழக மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? இந்த இலவசங்கள் ஓட்டாக மாறியிருக்கிறதா? என ஒரு பெரிய மக்கள் திரளையே தமிழகம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாகச் சந்தித்து நக்கீரன் ஒரு மெகா சர்வேயை நடத்தியது.

 

நீங்கள் கடந்தமுறை யாருக்கு வாக்களித்தீர்கள்? கடன் தள்ளுபடியால் இந்த முறை உங்களது வாக்குகள் மாறுமா? என கேள்விகளை மையப்படுத்தினோம். அதில், தமிழகத்தில் உள்ள 40 சதவீதம் விவசாயிகள் நாங்கள் கடன் பெறவில்லை எனத் தெரிவித்தார்கள். மீதமுள்ள 60 சதவீதம் பேரை இந்தத் தள்ளுபடி அறிவிப்புகள் தொடவில்லை. அவர்களின் பதில் வேறு மாதிரி இருந்தது.

 

ddd

 

"முன்பு ஒரு காலத்தில் விவசாயத்திற்காக கூட்டுறவு வங்கிகளை நம்பித்தான் நாங்கள் வாழ்ந்தோம். இன்று கூட்டுறவு சங்கங்கள் முழுவதும் அ.தி.மு.க.வின் கூடாரமாகவும் அவர்களது கட்சி அலுவலகமாகவும் மாறிவிட்டது. அதனால் கூட்டுறவு சங்கங்கள் அ.தி.மு.க.வினருக்குத்தான் கடன் கொடுத்தது. அந்த கடனைத்தான் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்திருக்கிறார். உண்மையான விவசாயிகள் பலரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார், மைக்ரோ பைனான்ஸ், கந்துவட்டிக் கும்பல், அடகுக்கடைகள் ஆகியவற்றில்தான் கடன் வாங்கியிருக்கிறோம். எங்கள் நகைகள் அங்குதான் இருக்கின்றன. அதனால் இந்தக் கடன் தள்ளுபடி அறிவிப்பினால் உண்மையான விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. இது தேர்தலுக்காக நடத்தப்படும் கவர்ச்சி நாடகம் என்கிறார்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள்.

 

ddd

 

அதேபோல், "சுயஉதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் கடன் தருவதில்லை. தேசிய வங்கிகளிடம்தான் நாங்கள் கடன் பெற்றிருக்கிறோம்'' என்கிறார் கன்னியாகுமரி, கிள்ளியூர் ஷாலினி. நெல்லை மாவட்டம், இருமன்குளத்தைச் சேர்ந்த விவசாயியான பெரியசுந்தர் ஐயாவின் அனுபவம் வேறு மாதிரியாக இருந்தது. "வாங்குன விவசாயக் கடன் தள்ளுபடினு அறிவிச்ச மூணாம் நாளு, நான் கூட்டுறவு வங்கிக்குப் போய், ‘என்ன ஐயா என் கடன் தள்ளுபடி ஆகிடுச்சா'ன்னு கேட்டேன். ‘இப்ப தேர்தல் நேரம் தள்ளுபடியெல்லாம் செய்ய முடியாது. தேர்தல் முடிந்ததும் கணக்கு பார்த்துட்டுதான் தள்ளுபடி செய்ய முடியும்'னு சொல்லிட்டாங்க. எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்காக அறிவிக்கிறார், அதிகாரிகள் அந்த உத்தரவே எங்களுக்கு வரவில்லை என்று சொல்றாங்க. உண்மையிலேயே கடன்களைத் தள்ளுபடி செஞ்சாங்களா? இல்லையானு தெரியல'' என்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் தள்ளுபடி செய்ய கமிஷன் கேட்கிறார்கள் என நக்கீரன் அலுவலகத்திற்கு ஃபோன் செய்து கதறினார் ஒரு விவசாயி.

 

மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி அரசின் அறிவிப்பு, நடைமுறைக்கு வரும் முன்பே தேர்தல் அறிவிப்பு வந்ததால், அரசின் தள்ளுபடி அறிவிப்பைச் செயல்படுத்த அதிகாரிகள் தயங்குவதை நாம் தமிழகம் முழுவதும் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடன் தள்ளுபடி உண்மையானதாக இல்லை. அனைத்து வங்கிகளிலும் வாங்கிய கடன்களை எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிற குரலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்புக்கு பலன் இல்லாமல் இல்லை.

 

ddd

 

உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான சேட்டு, "நான் கூட்டுறவு வங்கியில் மூன்று சவரன் நகையை அடமானம் வைத்திருக்கிறேன். அரசாங்கத்தின் இந்தக் கடன் தள்ளுபடி என்னைப் போன்ற வறுமையில் வாடுபவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது. எனது ஓட்டு இம்முறை இரட்டை இலைக்குத்தான்'' என்கிறார்.

 

விழுப்புரம் மாவட்டம், கல்பாத்துறையைச் சேர்ந்த பெண் விவசாயி முனியம்மாள், "எங்கள் குடும்பம் காங்கிரஸ் குடும்பம். தற்போதைய விவசாயக் கடன் தள்ளுபடியால் எங்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பலன் கிடைத்திருக்கிறது. எனவே, எங்களது காங்கிரஸ் பாரம்பரியத்தையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளோம்'' என்கிறார்.

 

"ஜெ. மாதிரி எடப்பாடி பழனிசாமி வரமாட்டார். ஆனா என் கடன் தொகையை தள்ளுபடி செய்திருக்கிறார். அந்த நன்றிக்காவது இந்தமுறை எனது ஓட்டு மறுபடியும் இரட்டை இலைக்கே'' என்கிறார் மதுரை மேற்கு தொகுதியைச் சேர்ந்த பெண்மணி.

 

ddd

 

கடன், தள்ளுபடி என சொந்த விவகாரங்கள் இருந்தாலும் தமிழக மக்கள், தேர்தலை இதையெல்லாம் தாண்டிய விசயமாகத்தான் பார்க்கிறார்கள். "பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி, மளிகை உட்பட அனைத்தும் விலையேறிவிட்டது. இப்பொழுது நாங்கள் விறகு அடுப்பில்தான் சமையல் செய்கிற நிலைக்குப் போய்விட்டோம். உழைச்சாதான் சோறு. பல பெண்களுக்கு கழுத்துல மஞ்சள் கயிறுதான் தொங்குது. வேகாத வெயிலில் உழைச்சு உசுரோட செத்துட்டு இருக்கோம். இந்த அ.தி.மு.க. அரசு கடந்த 10 வருசமா மக்களை வச்சு செஞ்சிருச்சு. ஆட்சி மாறணுங்க... இல்லனா, மக்கள் பேரைச் சொல்லி இலவசம்ங்கிற பேர்ல பணத்தை விரயம் பண்ணுவாங்க. கோடி கோடியா கடன் வாங்கி நாட்டைக் குட்டிச்சுவரு ஆக்கிட்டாங்க' என அரசுக்கு எதிரான கோபக் கனலை பெரும்பான்மையாக கேட்க முடிந்தது.

 

"கடந்தமுறை யாருக்கு வாக்களித்தீர்கள்' என நாம் கேட்டபோது... பெரும்பான்மையாக 41 சதவீதம் பேர் அ.தி.மு.க.விற்கு வாக்களித்ததாகக் கூறினார்கள். இரண்டு சதவீதம் குறைவாக 39 சதவீதம் பேர் தி.மு.க.விற்கு வாக்களித்ததாகக் கூறி கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவைக் கண் முன்பே கொண்டுவந்தார்கள். ஆனால், இம்முறை இலவசங்களை மீறி 50 சதவீதம் பேர் தி.மு.க.விற்கும், 38 சதவீதம் பேர் அ.தி.மு.க.விற்கும் வாக்களிக்கப் போவதாக தெரிவிக்கிறார்கள். கமலுக்கும், சீமானுக்கும் தலா 4 சதவீதம் பேரும், டிடிவி. தினகரனுக்கும், நோட்டாவு க்கும் தலா 2 சதவீதம் பேரும் வாக்களிப்பதாகச் சொல்கிறார்கள். கருத்து இல்லை என்ற 13% பேரில் பலருக்கும் உள்ளுக்குள் ஒரு கருத்து ஏற்படும். அது தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும்.

 

சசிகலா அரசியல் முழுக்கு! எந்தக் கட்சிக்கு லாபம்? -அதிரடி சர்வே முடிவுகள்!

 

- நக்கீரன் சர்வே குழு
ராம்கி, ஜீவாதங்கவேல், பரமசிவன், சக்திவேல், எஸ்.பி.எஸ், ராஜா, பகத்சிங், அருள்குமார் செல்வகுமார், மணிகண்டன், அரவிந்த், அருண்பாண்டியன், நாகேந்திரன், அண்ணல், சுந்தரபாண்டியன், இளையராஜா, மகேஷ், காளிதாஸ்
தொகுப்பு : தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: ராம்குமார், விவேகானந்தன், விவேக்