Skip to main content

சொதப்புகிறாரா விஜய் சேதுபதி? - நிற்காமல் பொழியும் அட்வைஸ் மழை!

 

Why Vijay Sethupathi faces so many criticisms

 

தியேட்டர், டிவி, ஒடிடி, யூ டியூப் என எங்கே திரும்பினாலும் விஜய் சேதுபதி முகம்தான் என எல்லாப் பக்கமும் அவரைப் பற்றிய ட்ரோல்கள் காணக் கிடைக்கின்றன. 'இப்போல்லாம் ரொம்ப ஆட்டிட்யூட் காட்டுறாரு', 'தலைக்கனம் ஏறிப்போச்சு', 'கதைத்தேர்வில் கவனமில்லை', 'காசுக்காக என்ன கேரக்டர்ல வேணும்னாலும் நடிப்பாரு', 'ஹோட்டல் கட்டிக்கிட்டு இருக்காரு', 'யாரையும் மதிப்பதில்லை',' 'அதிகமா சம்பளம் வாங்குறாரு' இப்படி இந்த லிஸ்ட் பெருசா போய்கிட்டே இருக்கு. அநேகமாக, விஜய் சேதுபதிக்கு அட்வைஸ் சொல்லாத யூ-ட்யூப் சேனல்களே இல்லையென்று சொல்லிவிடலாம். என்னதான் ஆச்சு விஜய் சேதுபதிக்கு? ஏன் இவ்வளவு அட்வைஸ் மழைகள்? உண்மையில் இதெல்லாம் அவர்மீதான கரிசனமா அல்லது காழ்ப்புணர்ச்சியா?

 

சினிமா ஹீரோவுக்கான கிராமர் இதுதான் எனக் கோலிவுட் ராஜதானி உருவாக்கி வைத்திருந்த கற்பிதத்தை எல்லாம் அசால்ட்டாக அடித்து நொறுக்கியவர் விஜய்சேதுபதி. 'பழைய சோறு பிரியன்' என்று சொல்வதாகட்டும், 'ரப்பர் செருப்பு', 'காவி வேட்டி', 'கலர் பண்ணாத தலை' என விருது விழாவுக்குச் செல்வதாகட்டும், விஜய்சேதுபதி செய்யும் ஒவ்வொன்றும் சக ஹீரோக்களையே வாய் பிளக்க வைத்தது. சாதாரண சினிமா ரசிகனால் விஜய் சேதுபதியோடு தன்னை எளிதில் பொருத்திக்கொள்ள முடியும். இதுதான் அவரது வெற்றிக்கான சூத்திரமாகச் சொல்லப்பட்டது. ஸீரோ ஹேட்டர்ஸுடன் ஒரு ஆண்டுக்கு பத்து படங்களை இறக்கிவந்த விஜய் சேதுபதி, இப்போது மாதத்துக்கு நான்கு படங்களை ரிலீஸ் செய்கிறார், ஒரே தோற்றத்தில் உப்பு சப்பில்லாத கதையம்சத்தில் நடித்துவருகிறார் என்று  விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
 

Why Vijay Sethupathi faces so many criticisms

 

'புதுப்பேட்டை', 'நான் மகான் அல்ல', 'வெண்ணிலா கபடிக் குழு', 'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' போன்ற படங்களில் 'அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்' ஆக ஏதோ ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்த விஜய் சேதுபதி, இன்று 'மக்கள் செல்வ'னாக பலரது மனதில் சம்மணமிட்டு அமர்ந்துவிட்டார். விஜய் சேதுபதியின் தன்னம்பிக்கை உரைகள் எனும் பெயரில் இணையம் முழுதும் அவரது வீடியோ பேச்சுகள் கொட்டிக் கிடக்கிறது. ஹார்டின் போட்டு 'விசே' ஸ்டேட்டஸ் வைத்த ரசிகமணிகள், இப்போது அவரை ட்ரோல் செய்து வெடித்துச் சிரிக்கும் ஸ்மைலி போடுகின்றனர். அடுத்தடுத்து வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், விஜய் சேதுபதி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறார். 

 

'ஆரஞ்சு மிட்டாய்', 'மேற்குத் தொடர்ச்சி மலை' போன்ற கதைகளை தயாரித்து வெளியிட்ட விஜய் சேதுபதிக்கு கதைத் தேர்வில் கவனமில்லை எனச் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. அதுபோக, எந்த ஒரு கதையும் கருவாக இருக்கும்போதே நூறு சதவீத வெற்றியைப் பெற்றுவிடும் என ஆருடமெல்லாம் சொல்லிவிட முடியாது. இன்று கோலிவுட்டில் கோலோச்சிக்கொண்டிருக்கும் நடிகர்கள் எல்லாம் தொடர்ச்சியான தோல்விகளை அள்ளிக் கொடுத்தவர்கள்தான். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என யாருமே இதற்கு விதிவிலக்கல்ல. அப்படியிருக்கும்போது இந்த விமர்சனமும் புதிதல்ல. ஆனால், அதற்காக விஜய்சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்குவது, கேரக்டர் அஸாசினேட் செய்வதெல்லாம் அபத்தத்தின் உச்சம். விஜய் சேதுபதி நல்ல கதைக்கருக்களைத்தான் தேர்வு செய்கிறார். அதன் திரைக்கதை போதாமைகளால்தான் சில படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன. 
 

Why Vijay Sethupathi faces so many criticisms

 

எல்லோரும் 'விசே'வின் வீழ்ச்சி தொடங்கிய இடம் எனக் 'கோட்' செய்வது, 'றெக்க' படத்தைத்தான். அவர்போய் கமர்ஷியல் படங்களில் நடிக்கலாமா என்பதுதான் விமர்சகர்களின் தலையாயக் கேள்வியாக உள்ளது ஆனால், அவர் சினிமாவுக்கு வரும்போதே 'நான் மசாலா படங்களில் நடிக்கமாட்டேன்' எனச் சத்தியம் செய்துகொண்டா வந்தார்? இங்கே மசாலா படங்களில் நடிக்காமல், முன்னணி வரிசைக்கு வந்த நடிகர்கள் யாரையாவது சுட்டிக்காட்டிவிட முடியுமா? சினிமாவின் அத்தனை பரிமாணங்களையும் அனுபவித்துவிட வேண்டும் எனத் துடிக்கும் ஒரு கலைஞனின் சோதனை முயற்சிகளாகத்தான் இவற்றை எல்லாம் அணுக வேண்டுமே ஒழிய, வேக வேகமாக அவரின் சினிமா வாழ்வுக்கு முடிவுரை எழுதத் துடிக்கும் போக்கு மிகவும் ஆபத்தானது. 'இல்லை இல்லை அவர் கூடுதல் சம்பளம் வாங்குறார்', 'தனியாக ஹோட்டல் கட்டி வருகிறார்' எனப் புலம்புவதெல்லாம் பொறாமையின் சிதறல்களே. 

 

இத்தனைக்கும் இந்தக் கமர்ஷியல் படங்களில் நடித்துக்கொண்டேதான், ‘சூப்பர் டீலக்ஸ்’ போன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார் விஜய் சேதுபதி. உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் எப்போதாவது 'திருநங்கை' கேரக்டரில் நடித்ததுண்டா? விஜய் சேதுபதி நடித்தார். இமேஜைப் பற்றி கவலைப்படாத கலைஞன்தான் எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியும். விஜய் சேதுபதிக்கு அந்த தன்மை இயல்பாகவே இருக்கிறது. பொதுவாக விஜய் சேதுபதி தன்னை எந்த நடிகரோடும் ஒப்பிட்டுக்கொள்வதில்லை அல்லது தன்னையே தனக்குப் போட்டியாக வரித்துக்கொண்டிருப்பவர் எனலாம். உதாரணமாக, விஜய் சேதுபதிக்கு சக போட்டியாளர் என சிவகார்த்திகேயன் எதிரில் நிறுத்தப்பட்டபோதே, சிவகார்த்திகேயனின் 'மான் கராத்தே' பட ரெஃபரன்ஸை 'றெக்க' படத்தில் வைத்திருந்தார். இத்தனைக்கும் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானது. நம்பர் கேமுக்குள் வருவதற்கு ஆரம்பம் முதலே விருப்பம் காட்டாமல் இருந்துவந்துள்ளார் விஜய் சேதுபதி. அதனால்தான், அவரால் 'மாஸ்டர்' படம் முதல் 'மாஸ்டர் செஃப்' வரை அனைத்துத் தளத்திலும் அடித்தாட முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், நாம் எதிர்பாராத வேறு சில வடிவங்களில் கூட விஜய் சேதுபதி தோன்றக் கூடும். ஏனெனில், இமேஜ் கவலையெல்லாம் அவருக்குத் துளியும் இருப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சம் கூட ஹீரோயிசம் இல்லாத, அல்லது ஹீரோக்கள் செய்யக்கூடியது என்று வரையறுக்கப்பட்டதல்லாத கதாபாத்திரங்களில் நடித்தும் மாஸ் நடிகர் ஆக முடியும் என்று நிரூபித்தது முதற்கொண்டு விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வித்திட்ட மாற்றங்கள், புதுமைகள் முக்கியமானவை.
 

 

Why Vijay Sethupathi faces so many criticisms

 

அவ்வப்போது விஜய் சேதுபதி கூறும் சமூகக் கருத்துகள் பொதுவெளியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. அதனால் கூட, அவர்மீது இந்தப் பல்முனை தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக சாதி, கடவுள் குறித்தும் வேறு சில சமூக பிரச்சினைகள் குறித்தும் அவர் கூறிய சில கருத்துகள். விஜய் சேதுபதிக்கு 'நாயக பிம்பம்' மீது ஒருபோதும் விருப்பம் இருந்ததாக தெரியவில்லை. ஆனால், சோதனை முயற்சியாக பல படங்களில் நடித்துவருவதன் மூலம், சினிமாவின் மீது கொண்ட தீராப் பசிக்கு உணவு தேடி அலையும் நடிப்பு அசுரனாகவே அவர் தென்படுகிறார். இங்கே, ஆளுக்கொரு ஸ்கேல் வைத்துக்கொண்டு, அடுத்தவர்களை அளந்துகொண்டிருக்கிறோம். நமது ஸ்கேலுக்குள் பிறர் அடங்காவிட்டாலோ அல்லது நம்முடைய ஸ்கேலை தாண்டி பிறர் வளர்ந்துவிட்டாலோ ஏற்றுக்கொள்ள முடியாத ஏமாற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

 

அதற்காக, விஜய் சேதுபதி ஒரு அப்பழுக்கற்ற மனிதர் என்றோ நடிப்பதெல்லாம் தலைசிறந்த படம் என்றோ சான்றிதழ் தருவது நமது வேலையல்ல. ஆனால், தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக இருந்த கதாநாயக பிம்பத்தை உடைத்ததிலும், அதில் வேறு ஒரு பரிமாணத்தைப் புகுத்தியதிலும் விஜய் சேதுபதியின் தாக்கம் ஆழமானது. அப்படிப்பட்ட நடிகனை, வெற்றியின் உச்சத்தில் இருக்கும்போதும், தோல்விகள் தீண்டும்போதும், தன் சோதனை முயற்சிகளை நிறுத்தாத, தேடல்களை நிறுத்தாத, நண்பர்களுக்காக, நட்புக்காக தனது மார்க்கெட் குறித்து கவலைப்படாமல் பல படங்களில் தலைகாட்டும் மனிதனைக் குறிவைத்து காயப்படுத்தும் சில வன்மம் நிறைந்த விமர்சனங்களை பார்த்தும் பேசாமல் கடந்து போவதும் தவறு. 
 

Why Vijay Sethupathi faces so many criticisms

 

தனது அடுத்த ஏதோவொரு படத்தில், ஏதோவொரு தருணத்தில், ஏதோவொரு பெர்ஃபார்மன்ஸ் மூலாக, இந்த அத்தனை விமர்சனங்களையும் விஜய் சேதுபதியால் சடுதியில் உடைத்துவிட முடியும். நல்ல கலைஞர்கள் நிகழ்த்தும் மேஜிக் இப்படித்தான் திரையில் அரங்கேறியுள்ளது. ஒவ்வொரு திருப்பத்திலும் மேடுகளும் பள்ளங்களும் நிறைந்ததுதான் இந்த கனவுத் தொழிற்சாலை. பள்ளங்கள் ஏறினால்தான் மேடுகள் தாண்ட முடியும். ஆரோக்கியமான விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு வழக்கம்போல பல வெற்றிப்படங்களைக் கொடுப்பார் விஜய் சேதுபதி என நம்புகிறது நக்கீரன்.