Skip to main content

செண்டினல் தீவுக்கு சென்ற இளைஞரை பழங்குடியினர் கொன்றது ஏன்? - மருத்துவர் ஷாலினி தரும் உளவியல் விளக்கம்

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

சமீபத்தில் அந்தமான் வடக்கு செண்டினல் பகுதியில் வசிக்கும் செண்டினல் பழங்குடி மக்களால் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் அலன் சாவ் என்ற 27 வயது இளைஞர் கொல்லப்பட்டார். அதில் இருந்து அந்தமானில் இருக்கும் பழங்குடிகள் யார், அவர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களின் வாழ்வியல் முறை எப்படிப்பட்டது, அவர்களை யார் முதலில் சந்தித்தது போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக வெளிவரத்தொடங்கியது. மேலும் இந்திய அரசு ஜான் அலன் சாவ் உடலை கண்டுபிடித்து மீட்டுத்தர வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் வலியுறுத்தினார்கள். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டும் அது தோல்வியில் முடிந்தது. மேலும் அவர்களை அவர்களின் வாழ்வியல் வழியிலே விட்டுவிடுங்கள் என பல மானுடவியலாளர்களும் கருத்துத் தெரிவித்துவந்தனர். அவர்களை அவர்களின் வழியிலே விட்டுவிடுவதா அல்லது மாற்றுவதா அவர்கள் ஏன் பிற மனிதர்களுடன் பழகுவதை விரும்பவில்லை ஆகிய கேள்விகளுடன் மனித பரிணாம வளர்ச்சியில் ஆழ்ந்த அறிவுடைய மனநல மருத்துவர் ஷாலினியை அனுகினோம். அவருடனான உரையாடல்...

 

 

ss

 

செண்டினல் தீவில் இருக்கும் பழங்குடி மக்களின் வாழ்வியலை அப்படியே விட்டுவிடுவது நல்லதா? அல்லது அவர்களை நாகரிக வாழ்விற்கு வர வைக்க வேண்டும் என்று நினைப்பது சரியா?
 

முதலில் நாம் வாழும் வாழ்க்கையை நாகரிகம் என்று நாம்தான் நினைக்கிறோம். அவர்களைப் பொறுத்தவரை இது நாகரிகமில்லை. அந்தத் தீவில் இருக்கும் மக்கள் அங்கு 60,000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வருபவர்கள். அவர்களின் இடத்திற்குள் யாரோ ஒரு புது மனிதன் போகும்போது அவர்களை தாக்குவது என்பது இயல்புதான். மேலும் அவர்களிடத்திற்கு செல்லும்போது அவர்களை யாரோ தாக்க வருகிறார்கள் என்ற மனநிலைதான் அவர்களுக்கு இருக்கும். இது அவர்களை காத்துக்கொள்ள தற்காப்புக்காக செய்திருப்பார்கள். டார்வின், அவரின் குறிப்புகளில் அவர்  வெள்ளை நிறத்தினர் இல்லாத பகுதிகளுக்கு சென்றபோது அவரை அங்கிருப்போர்கள் பேய் என்று நினைத்து பயந்தார்கள் என்று சொல்லியிருக்கிறார். இவர்களும் அதுபோல் நினைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த சம்பவம் நடந்தபின்னும் அவர்களை அப்படியே விட்டுவிடாமல் மேலும் அங்கு கப்பல்களையும் விமானங்களையும் அனுப்புவது அவர்களை இன்னும் அச்சத்திற்கு உள்ளாக்கும்.

 

பொதுவாக வெளியுலக தொடர்பற்று இருக்கும் பழங்குடியினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறைவு. காரணம் அவர்கள் இருக்கும் இடத்தில் என்ன வகையான கிருமிகள் இருக்குமோ அதை எதிர்க்கும் அளவுக்குதான் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். இவர் அங்கு செல்லும்போது ஒரு மனிதன் மட்டும் செல்கிறான் என்று அர்த்தமில்லை, அவனுடன் மில்லியன் கணக்கிலான புது கிருமிகளை எடுத்துச் செல்கிறான். இந்த விஷயம் அடிப்படை அறிவியல் தெரிந்த அனைவருக்குமே தெரியும். அவருக்குத் தெரிந்திருக்காதா? அவருக்கும் இது தெரிந்திருக்கும், ஆனால் யாரும் போகமுடியாத இடத்திற்கு தான் சென்றுள்ளேன் என்ற துடுக்குத்தனமான உணர்ச்சியில் இந்தக் காரியத்தை அவர் செய்திருப்பார்.

 

வெளியுலக தொடர்பற்ற பழங்குடியினர்களை அவர்களின் வாழ்வியலிலே விடுவதுதான் சரி என்று ஐநா சபை கூறுகிறது. அதையேதான் நானும் சொல்கிறேன். அவர்களை ஏன் அப்படியே விட்டுவிட வேண்டும் என்றால், நம்மிடம் இருக்கும் கிருமிகளால் அவர்கள் அழிந்துபோவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு வரலாற்று சான்றுகளும்கூட இருக்கிறது.

 

கொலம்பஸ் அமெரிக்காவிற்கு சென்றார் என்று படித்திருப்போம், அவர் அங்கு மதத்தை போதிக்கவோ இறைத்தூதுவராகவோ செல்லவில்லை. மாறாக வெட்டிக் கொன்று வேட்டையாடுவதற்குத்தான் அங்கு சென்றிருக்கிறார். ஆனால் நாம் அதை வீர சாகசமாக பேசிகொண்டிருக்கிறோம். மேலும் அவர் அங்கு சென்றபின் அங்கிருந்த எத்தனை ஆண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள், எத்தனை இனங்கள் அழிக்கப்பட்டன என்று அந்த வரலாற்று புத்தகங்களை படித்தால் நமக்குத் தெரியும். இதைத்தான் வரலாற்றில் பல ஆண்கள் செய்திருக்கிறார்கள். இபோதுதான் நாம் அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்துகொண்டு அமைதியாக வாழ்வோம் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம். இபோதும் ஒருவர் மற்றோருவர் இடத்திற்கு சென்று தொந்தரவு செய்கிறார் என்றால் அது தவறு. 

 

நாம்தான் நாகரிகமாகிவிட்டோமே அதனால் அவர்களையும் நம் வழியில் கொண்டுவந்து அவர்களையும் நாகரிகமாக்கிவிடாலாம் என்று நினைப்போம். ஆனால் உண்மையில் இயற்கையுடன் யார் ஒத்துப்போகிறார்களோ அவர்கள்தான் எந்த சூழ்நிலையையும் ஏற்றுக்கொண்டு வாழமுடியும். உதாரணத்திற்கு 2004-ல் சுனாமி வந்தபோது தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்மை கடலோர மக்கள் இறந்தனர். ஆனால் அந்தமானில் இருக்கும் பழங்குடியினர் யாரும் இறக்கவில்லை. காரணம் அவர்கள் இயற்கையுடன் ஒத்துவாழ்வதால் சுனாமிவருவதற்கு முன்பே அவர்களுக்கு அங்கு ஏதோ நடக்கப்போகிறது என்று தெரிகிறது, அதனால் அவர்கள் அங்கிருக்கும் மரங்களின்மீது ஏறி உயிர் தப்பித்துவிடுகிறார்கள்.

 

பெரிய அறிவியல் அறிஞர்களும்கூட வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் உயிர்கள் நாம் இருக்கும் நகரத்தில் வாழ்வதற்கு விரும்பாது, பழங்குடி மக்கள் இருக்கும் இடத்தில்தான் வாழ விரும்பும் என்கிறார்கள். காரணம் அவர்கள்தான் எந்த இயற்கை சீற்றத்தையும் சமாளித்து உயிர் பிழைப்பார்கள்.

 

 

ss

 

 

அவர்களின் மக்கள்தொகை தோராயமாகத்தான் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவர்களை அப்படியே விட்டுவிட்டால் அவர்களின் மக்கள்தொகை இன்னும் குறைந்துவிடாதா?
 

அவர்களின் இனவிருத்தி நல்லபடியாக நடக்கிறது என்றால் அவர்களின் மக்கள்தொகை அதுவாகவேதான் இருக்கும். அது எப்போது குறையும் என்றால், வெளிமனிதர்கள் அங்கு செல்லும்போது ஏற்படும் கிருமிதொற்றாலும், மேலும் அவர்கள் சொந்தத்தினுள்ளே திருமணம் செய்தாலும்தான்  குறைந்துபோகும். ஒருவேளை அவர்கள் ஒரு பரந்த வெளியில் இருக்கிறார்கள், ஒரு குடி ஒரு புறமும் மற்றொரு குடி நூறு கி.மீ தள்ளியும் இருந்து, பெண் கொடுத்து பெண் எடுக்கும் நிலைமை இருந்தால் மக்கள் தொகை குறைய வாய்ப்பில்லை.

 

பொதுவாக அவர்களின் மொழி எப்படி இருக்கும், அவர்கள் எப்படி பேசிகொள்வார்கள்? அதை நாம் யூகிக்க முடியுமா?
 

அவர்கள் இன்னும் ஆதிகாலத்தில் இருந்த மொழிகளின் தொடர்ச்சியைத்தான் பேசுவார்கள். மேலும் மொழிகளை பற்றிய ஆராய்ச்சி என்ன சொல்லுகிறது என்றால், மக்கள் முதலில் பழங்குடி மொழியில்தான் பேச ஆரம்பித்தார்கள், அதன்பின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார்போல் வாய்களின் அளவு திறந்து மொழி வளர்ந்தது என்கிறார்கள். உதாரணத்திற்கு பனிப் பிரதேசத்தில் இருப்பவர்களால் வாயை அதிகம் திறக்கமுடியாது, அப்படித் திறந்தால் குளிர் காற்று அவர்கள் வாய்க்குள் போகும். அதேபோல் ஆசியா மற்றும் ஆப்ரிக்கா போன்ற இடங்களில் இருப்பவர்களால் நன்றாக வாயைத் திறந்து பேச முடியும். நமது மொழிகள் அதற்கேற்ப இருக்கின்றன.