Skip to main content

என்னத்த அவசரச்சட்டம் போட்டு, என்னா செய்ய?

Published on 02/05/2018 | Edited on 02/05/2018

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரணதண்டனை விதிக்க சமீபத்தில் அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், எத்தனை அவசரச் சட்டம் கொண்டுவந்தாலும், போலீஸும், நீதிமன்றங்களும் அவற்றை விரைந்து நடைமுறைப்படுத்தாது என்பது தெரியவந்துள்ளது.

haraasment




குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த புலனாய்வுகளும், நீதிமன்ற விசாரணையும் பெருமளவு நிலுவையில் இருப்பதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

 

2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் போலீஸ் விசாரணைக்கு அனுப்பப்பட்ட வழக்குகள் 48 ஆயிரத்து 60. ஆனால், அந்த ஆண்டு இறுதியில் நிலுவையில் இருந்த வழக்குகள் 15 ஆயிரத்து 283.

 

அதுபோல, 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நீதிமன்ற விசாரணையில் இருந்த வழக்குகள் 1 லட்சத்து ஆயிரத்து 326. ஆனால், அந்த ஆண்டு இறுதியில் நிலுவையில் இருந்த வழக்குகள் 90 ஆயிரத்து 205. பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான போக்ஸோ சட்டம் 2012 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே கொண்டுவரப்பட்டது. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 30 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

 

பல மாநிலங்கள் இதுவரை போக்ஸோ சட்டப்படியான வழக்குகளை விசாரிக்க கட்டாயமாக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்ற விதியையே நடைமுறைப் படுத்தவில்லை.

 

 

தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் 8 மாதக் குழந்தையை பாலியல் துன்புறுத்திய வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவரங்கள் வெளியாகின. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த  8 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சின்னாபின்னப் படுத்தப்பட்டாள். அதையடுத்து 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கும்வகையில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

 

இந்நிலையில் மத்திய அரசு கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பிங்க்கி ஆனந்த் இந்த அவசரச்சட்டம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்தார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் குறித்து புகார் வந்ததும் இரண்டு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். ஆறுமாதங்களுக்குள் நீதிமன்ற விசாரணையை முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால், நீதிமன்ற புள்ளிவிவரங்கள் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நீதிமன்றங்களின் நெடிய வராண்டாக்களில் காத்திருப்பதைத்தான் தெளிவுபடுத்துகின்றன.

 

இதையடுத்து, நீதிபதிகள் கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் துணை உத்தரவுகளைப் பிறப்பித்தன. அதன்படி, குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மாநில காவல்துறைத் தலைவர்கள் சிறப்பு அதிரடி விசாரணைக் குழுக்களை அமைக்க வேண்டும். உயர்நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். விசாரணையின்போது தவறாமல் சாட்சிகளை ஆஜர்படுத்தி, நீதிமன்றங்களில் குழந்தைகளுக்கு ஆதரவான சூல்நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.