Advertisment

லெனின் சிலையை ஏன் தகர்க்கிறார்கள்?

திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகரமாக முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இத்தேர்தலில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை பாஜக தோற்கடித்து, புது ஆட்சியை திரிபுராவில் அமைக்கவிருக்கிறது. இந்த வெற்றிக்குப் பின்னர், பாஜகவினர் இந்தியா முழுவதும் எங்கள் ஆட்சி மலரும் என்று சந்தோசமாகக் கொண்டாடினர். சிலர் இனி என்னென்ன பிரச்சனைகளை அந்த மாநில மக்கள் சந்திக்கப் போகிறார்களோ என்று கவலைப்பட்டனர்.

Advertisment

தேர்தலில் வெற்றி அடைந்து இன்னும் முதல்வர் நாற்காலியில் அமரக்கூட இல்லை, அதற்குள் பாஜகவினர் சிபிஐ அலுவலகத்தை அடித்து நொறுக்கினர், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களை தொல்லை செய்ய ஆரம்பித்துவிட்டனர். வெறும் இரண்டு நாட்களே ஆகிய நிலையில், அங்கிருந்த விளாடிமிர் லெனின் சிலையையும் புல்டோசரை வைத்து தகர்த்துவிட்டனர். ஆனால், 'இந்த காரியத்தை செய்தது மக்கள்தான், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் மீது இருந்த கோபத்தின் வெளிப்பாடு என்கின்றனர். அங்கே 'பாரத் மாதா கி ஜே' என்ற முழக்கம் எழ, விளாடிமிர் லெனின் சிலையோ கீழே சரிந்தது.

Advertisment

lenin statue in tripura

விளாடிமிர் லெனின், ரஷ்யாவில் பிறந்து வளர்ந்தவர். 19ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவம் வளர்ந்து வந்தது. தொழில் வர்க்கத்தில் முதலாளிகள் முதலைகளாக மாறி தொழிலாளிகளை அடக்கி ஆண்டுவந்தனர். உலகம் முழுவதும் அதிகார வர்க்கத்தின் கை ஓங்கியிருந்தது. கார்ல் மார்க்சின் சித்தாந்தங்களை லெனின் எடுத்துக்கொண்டு ரஷ்யா முழுவதும் தங்கள் மக்களுக்கு ஏற்றாற்போல் சித்தாந்தங்களை கொண்டு சேர்த்தார். தொழிலாளர்களின் புரட்சி வெடித்தது. அக்டோபர் புரட்சி எனப்படும் தொழிலாளர்களின் புரட்சியை முன்நின்று நடத்தி அதில் வெற்றியும் பெற்றார். 1917 ஆம் ஆண்டில் நடந்த இப்புரட்சியின் மூலம் உலகெங்கும் கம்யூனிச சித்தாந்தம் நிலை பெற்றது.

லெனின், உலகம் போற்றும் ஒரு மிகப்பெரிய அரசியல் வல்லுநர் என்றே சொல்லலாம். இந்தியாவின் தலைக்கு மேல் பகுதியில் இருக்கும் ரஷ்யாவின் கம்யூனிச தாக்கம் அதன் கீழே இருக்கும் இந்தியாவின் மீது முழுமையாக படராமல் இருந்ததற்கு ஒரு காரணம், இந்தியா சுதந்திரத்தை நோக்கி போராடிக்கொண்டிருந்தது. காந்திக்கும் லெனினுக்கும் போராட்டத்தின் பாதை வேண்டுமானாலும் வேறாகவும், இல்லை எதிர் எதிராகவும் இருந்திருக்கலாம். ஆனால், நோக்கம் ஒன்றுதான். அப்போது அதிகாரத்தில் இருந்து நம்மை அடிமைப்படுத்தியவர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டும். காந்திக்கு அது நாடாகவும் லெனினுக்கு அது தொழிலாளர்களாகவும் இருந்தனர், அவ்வளவே வித்தியாசம்.

லெனின் 1917 ஆண்டு தன் தலைமையில் நடத்திய அக்டோபர் புரட்சியில் வெற்றிகண்டார். "இதை எல்லாம் பார்த்து அதை கற்றுக்கொண்டுதான் நாங்களும் வெள்ளையர்களிடம் எதிர்த்து போராடினோம்" என்று ஒருமுறை கூறியுள்ளார் காந்தி. கம்யூனிசத்துக்கு நெருக்கமான மனதைக் கொண்டிருந்த நேரு, "இந்தப் புரட்சியும் எங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு" என்கிறார். இந்தியாவில் அப்பொழுது உலக அரசியலைப் படித்தவர்களில், தொடர்ந்து கவனித்தவர்களில் பலர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தோழர்லெனின் முக்கியமானவரானார். இதுதான் லெனினின் இந்தியாவுடனான தொடர்பு. அவரது சித்தாந்தம் உலகம் முழுவதும் பரவியது. முதலாளிகளின் வர்க்கம் எங்கெல்லாம் அராஜகமான இருந்ததோ அங்கெல்லாம் லெனின் பேசப்பட்டார், காலப்போக்கில் அவரது கொள்கைகளை பின்பற்றுபவர்களால்சிலையாக வைக்கப்பட்டார். உலகில் அதிக சிலைகள் ஒருவருக்கு இருக்குமெனில் அது லெனினுக்குத்தான். சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகளிலும் அவரது சிலைகள் காலப்போக்கில் எடுக்கப்பட்டது. இந்தியாவில் லெனினின் சிலைகள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன, அதுவும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்ந்த இடங்களில்தான்.

viladimir lenin

எந்த ஊர் பிரச்சனையாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தன் கருத்தை பதிவிட்டு, வேற்றுமை மனப்பான்மையை வளர்க்க முயலும் ஹெச்.ராஜா, இதற்கும் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். விளாடிமிர் லெனின் சிலையை தகர்க்கும் வீடியோவை வெளியிட்டு, 'யார் இந்த லெனின் இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்மந்தம்?' என்கிறார். அந்தப் பதிவில் 'ஜாதி வெறியர் ஈ.வே. ராமசாமி சிலை' என்று பெரியாரைக் குறிப்பிட்டு, அவரது சிலைகள் தமிழ்நாட்டில் நீக்கப்படுமென்று கூறியிருந்தார். பொங்கியெழுந்த எதிர்ப்பைப் பார்த்து, பின்னர் பதிவை நீக்கிவிட்டார்.

உலகெங்கிலும் சித்தாந்தங்கள் மாறிய போது, சிலைகள் அகற்றப்பட்டிருக்கின்றன. சிலைகள் அகற்றப்பட்டதால் சித்தாந்தங்கள் மாறியதில்லை. இந்தியா கம்யூனிச நாடல்ல. உலகமெங்கும் கம்யூனிசம் சரிவுகளை சந்தித்துவந்தாலும், இதுநாள் வரை மக்கள் வாக்களித்து, தங்களை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த, இன்றும் 42 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ள ஒரு கொள்கையை அவமதிக்கும் செயல் இது. வெற்றி கொண்ட நாட்டின் வழிபாட்டுத் தளங்களை சிதைத்து, பெண்களை வதைத்த மன்னராட்சி காலத்தின் வெறிக்கு குறையாதது இது.

bjp attrocities. viladimir lenin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe